அனுபவம் புதிது: இது ‘அட்டப்பாடி’ கலை!

ஓஷின், வர்ஷினி, ஜானகி
ஓஷின், வர்ஷினி, ஜானகி
Updated on
2 min read

மேற்கு மலைத்தொடரில் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் வீற்றிருக்கும் ஓர் அழகான பகுதி அட்டப்பாடி. இந்தக் காட்டுப் பகுதியில் மின்மினிப் பூச்சிகளின் மினுமினுப்புக்கு நடுவே கலைப் படைப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர் மூன்று இளம் படைப்பாளிகள்.

பொதுவாக நான்கு சுவர்களுக்குள் நடத்தப்படும் கலை அலங்காரப் பட்டறையைப் போல் அல்லாமல், இயற்கையோடு சேர்ந்து காட்டுப் பகுதியில் கலை அனுபவத்தை நிகழ்த்தி, புதுமையான முயற்சிக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்கள் இவர்கள்.

புது அனுபவம்: வர்ஷினி, ஓஷின், ஜானகி ஆகிய மூன்று இளம் பெண்கள்தான் இந்தப் புதுமையான முயற்சிக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் சமூகவலைதள நிர்வாகி, வரைபடக் கலைஞர், ஓவியர் என வெவ்வேறு வேலைகளைச் செய்பவர்கள். இவர்களைக் ‘கலை’தான் ஒன்றாக இணைத்துள்ளது.

தாங்கள் கற்ற கலைத் திறன்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் மற்றவர்களுக்கு இவர்கள் கற்றுத் தருகிறார்கள். ‘ஃபயர் ஃப்ளை ஃபீட்’ என்கிற பெயரில் இவர்கள் நடத்திய கலைப் பட்டறையில் மலையேற்றம் முதல் மண்டாலா ஓவியம் அடக்கம். ஒரு மலைப்பகுதியில் கலைப் பட்டறையை இவர்கள் நடத்தியதன் காரணம் என்ன?

“எந்நேரமும் வேலை, கடமை என அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பதற்றத்திலிருந்து தள்ளி இருக்க, கலையின் பக்கம் திரும்பினால் அங்கும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. புதிய கலைத் திறன்களைக் கற்றுக்கொள்ள சிலருக்கு வயது ஒரு தடையாக இருக்கலாம்.

சிலருக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கலாம். இந்த எண்ணத்தைக் களைய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். கலை என்பது அனைவருக்குமானது. யார் வேண்டுமானாலும், எந்த வயதைச் சேர்ந்தவர்களும் கலையைக் கற்கலாம்.

பழகப் பழக ஒரு திறனை மெருகேற்றிக் கொள்ள முடியும். எனவே மண்டாலா, ஸ்கெட்சிங், கவிதை பகிர்தல், ‘ஸ்வாப் தி ஆர்ட்’, ‘கொலாஜ்’ போன்று எளிமையான கலைப் படைப்புகளை உருவாக்குவது தொடர்பாகவே மூன்று நாள்கள் பட்டறையை அண்மையில் நடத்தினோம்.

வழக்கமான முறையில் நான்கு சுவர்களுக்குள் இதைச் செய்வதைக் காட்டிலும் இயற்கைக்கு நெருக்கமான ஒரு பகுதியில் பட்டறையை நடத்தியது புதிய அனுபவங்களைத் தந்தது. ஒளிப்படம் எடுப்பது, மலையேறுவது, மின்மினிப் பூச்சிகளை ரசிப்பது, அவற்றைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வுப் பகிர்வு போன்ற நிகழ்வுகளையும் சேர்த்து திட்டமிட்டிருந்தோம். இதனால் வழக்கமான வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட முடிந்தது” என்றார் வர்ஷினி.

மின்மினிப் பூச்சிகள்: மூன்று நாள்கள் நடந்த கலைப் பட்டறையில் 10 வயது முதல் 60 வயது வரையிலான இருபதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவை, திருச்சி, சென்னை எனத் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்தும் பங்கேற்க வந்திருந்தனர். காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்டுவதால் மின்மினிப் பூச்சிகளின் இயல்புக்குப் பாதிப்பு ஏற்படாதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்தது.

“அட்டப்பாடி ‘சாட் தர்ஷன்’ பகுதி, மனிதர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்ட ஒரு பகுதி. ஆனால், அங்கு தங்கியிருக்க சில வரைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். நாங்கள் தங்கியிருந்த மூன்று நாள்களும் மின்மினிப் பூச்சிகளுக்கு இடையூறு அளிக்கும்படியான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டோம்.

திறன்பேசியின் ஃப்ளாஷ் பயன்படுத்துவது, அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்புவது, இரவு 8 மணிக்கு மேல் வெளியில் நடமாடுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்தோம். பட்டறையின் ஒரு பகுதியாக மின்மினிப் பூச்சிகளின் இருப்பைப் பற்றியும், ஒத்திசைவைப் பற்றியும், அவற்றைப் பாதுகாப்பது பற்றியும் கலந்துரையாடினோம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது, மின்மினிப் பூச்சிகள்தான். அவற்றை நேரில் கண்டது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.

பங்கேற்பாளர்கள் மத்தியில் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒவ்வொருவரின் கற்பனைத் திறனும் ரசிக்கும்படியாக இருந்தது. கலைப் படைப்புகளை உருவாக்கவும், புதுத் திறன்களைக் கற்கவும் வயது ஒரு தடை கிடையாது. ஆர்வமிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். நாங்கள் மூவரும் கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்கிற கலைத் திறன்களைஇது போன்ற பட்டறைகளின் வழியே தொடர்ந்து மற்றவர்களுடன் பகிரத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் வர்ஷினி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in