

வாசிக்கும் பழக்கம் நூலகத்திலிருந்தோ பள்ளிக்கூடத்திலிருந்தோ தொடங்க வேண்டும் என்பதில்லை. தேநீர்க் கடைகளில் இருக்கும் செய்தித்தாள்களையும் சலூன் கடைகளில் இருக்கும் பத்திரிகைகளையும் புரட்டுவதிலிருந்தும்கூட வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கலாம். அப்படி வாசிப்பை ஊக்குவிக்கும் சில இடங்கள்:
காபி அண் ரீசார்ஜ் கஃபே, சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் இருக்கிறது ‘காபி அண் ரீசார்ஜ்’ கஃபே. உள்ளே நுழைந்தவுடன் கஃபேயின் ‘மினி நூலகம்’தான் வாடிக்கையாளர்களை வரவேற்கிறது.
குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள், புதினங்கள், பெண் உரிமை, பெண் விடுதலை விளக்கக் கட்டுரைகள், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கருத்தியல்களைப் பேசும் புத்தகங்கள் என 250க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கஃபேயில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வாசிப்பை ஊக்குவிக்கவே இந்த ‘மினி நூலக’த்தை அமைத்திருப்பதாகச் சொல்கிறார் கஃபே உரிமையாளர் செந்தில்குமார்.
“அரசியலும் கருத்தியலும் அந்தக் காலத்தில் டீ கடையிலிருந்துதான் தொடங்கியது என்பார்கள். தற்போது நகரின் பெரும்பாலான பகுதிகள் கஃபே மயமாகிவிட்டன. குழந்தைகள், மாணவர்கள், இளைய தலைமுறையினர் எனப் பலரும் கூடும் இடமாகவும் கஃபேகள் மாறிவிட்டன. நண்பர்களோடு கூட்டமாக வருபவர்கள்கூடத் திறன்பேசியும் கையுமாகத்தான் இருக்கிறார்கள்.
இந்தப் போக்கை மாற்றவும், உரையாடலைத் தொடங்கி வைக்கவும், அடுத்த தலைமுறையினரிடம் வாசிக்கும் பழக்கத்தைக் கடத்தவும் நூலகத்தை அமைத்தோம். கஃபேயில் சாப்பிட்டுக்கொண்டே சில பக்கங்களைப் புரட்டுபவர்கள் தொடர்ந்து வாசிப்பை பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சில வாடிக்கையாளர்கள் புத்தகங்களை வாசிக்க எடுத்துச் செல்கின்றனர். சிலர் புத்தகங்களைப் பரிசளிக்கின்றனர்” என்கிறார் கஃபே உரிமையாளர் செந்தில்குமார்.
வேதம் ஆயுர்வேத சிகிச்சை மையம், கரூர்: கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் இயங்கும் ‘வேதம் ஆயுர்வேத சிகிச்சை மைய’த்தின் வரவேற்பு அறையில் 70க்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. புதினங்கள், தமிழ் இலக்கியங்கள், கவிதைத் தொகுப்புகள், ஆங்கில நூல்கள் ஆகியவை இந்தச் சிறிய நூலகத்தில் இடம்பிடித்துள்ளன. சிறு வயது முதலே வாசிப்பில் நாட்டம் கொண்ட மருத்துவர் இன்ப பிரபஞ்சனின் முயற்சியில் இந்த ‘கிளினிக் நூலகம்’ சாத்தியமாகியுள்ளது.
“சிகிச்சைக்கு வருவோர் மருத்து வரைச் சந்திக்கும் வரை காத்திருக்க நேரிடும். ஏற்கெனவே உடல்நல பிரச்சினையோடு வந்திருப்பவரின் மனநலம் பாதிக்கும்படியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது, பாடல்கள் ஒலிபரப்புவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சிகிச்சை மையத்தினுள் திறன்பேசி பயன்படுத்த வேண்டாம் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கிறோம். காத்திருப்பு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றவே இந்த நூலகம். விருப்பமிருந்தால் புத்தகங்களை வீட்டுக்கும் எடுத்துச் செல்லலாம். சிலர் புத்தகங்களை நூலகத்துக்கும் பரிசளித்திருக்கிறார்கள்” என்கிறார் மருத்துவர் இன்ப பிரபஞ்சன்.
சுஷீல் குமார் பியூட்டி கேர், தூத்துக்குடி: தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் பொன்.மாரியப்பன். அதே பகுதியில் ‘சுஷில் குமார் பியூட்டி கேர்’ என்கிற பெயரில் சலூன் கடையை நடத்திவருகிறார். வாசிப்பை நேசிக்கும் இவர், வாடிக்கையாளர்களையும் வாசகர்களாக மாற்றும் நோக்கில் சலூனில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளார்.
திருக்குறள், பாரதியார் கவிதைகள், கதைப் புத்தகங்கள், அரசியல் கட்டுரைகள் எனப் பல்வேறு வகையான புத்தகங்களை நூலகத்தில் வைத்துள்ளார்.
20 புத்தகங்களோடு தொடங்கிய இவரது நூலகத்தில், தற்போது 1500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நூலகம் அமைத்தது மட்டுமல்ல, புத்தகங்களை வாசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தும் கட்டணத்திலும் சலுகை வழங்கி ஆச்சரியப்படுத்துகிறார் மாரியப்பன்.