

திரையரங்குகளில் வெளியானபோதும், தற்போது ஓடிடி தளத்தில் வெளியான பிறகும் பார்வையாளர்கள் மத்தியில் பேசுப் பொருளாகியிருக்கிறது ‘லவ்வர்’ திரைப்படம். ‘டாக்சிக்’ உறவு முறையைப் பற்றி ஆழமாகப் பேசியது மட்டுமல்ல, படத்தில் இடம்பெற்ற ‘ஹிட்’ பாடல்களுக்காகவும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கதையின் தேவைக்கு ஏற்ப படம் முழுவதும் ஆங்காங்கே இடம்பிடித்திருக்கும் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் மோகன் ராஜன்.
பலவகைப் பாடல்கள்: ‘ஜில்லா விட்டு’ (ஈசன்) போன்ற கிராமியப்பாடலையும், ‘கனவே கனவே’ (டேவிட்) போன்ற காதல் சோகப் பாடலையும், ‘நான் காலி’ (குட் நைட்) போன்று ஜாலியான காதல் பாடலையும் எழுதியவர்தான் மோகன் ராஜன். அதெப்படி காதல், காதல் பிரிவு, துள்ளல் இசைப்பாடல் என வெவ்வேறு உணர்வுகளுக்கேற்ப பாடல் வரிகளை மோகன் ராஜனால் எழுத முடிகிறது.
“சொந்த ஊர் திருச்சியில் உள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டி. வேலை நிமித்தமாகத்தான் சென்னைக்குக் குடிபெயர்ந்தேன். இதனால் கிராமிய வாழ்க்கை முறை, நகரத்து வாழ்க்கை முறை என இரண்டும் எனக்குப் பரிச்சயம். கதையின் சூழலுக்கேற்ப, தேவைக்கேற்ப எனது கிராமிய, நகர அனுபவங்களை வைத்து பாடல்களை எழுதுகிறேன்.
எந்தவொரு கட்டமைப்புக்குள்ளும் சிக்காமல் பாடல்களை எழுதியவர் வாலி. அதே நேரம், கண்ணதாசன் என்றால் எளிமை, வைரமுத்து என்றால் கவித்துவம், தாமரை என்றால் மாறுபட்ட தமிழ்ச் சொற்கள் என பாடலாசிரியர்களுக்கென தனித்துவமும் இருக்கிறது.
என்னுடைய பயணத்தில் நாடக நிகழ்ச்சிகளுக்கான பாடல்கள், சுயாதீனப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள் என இதுவரை 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனோடு பணியாற்றிய படங்கள் கவனிக்கப்படுகின்றன.
‘ஷான் ரோல்டன் - மோகன் ராஜன் காம்போ’ எனச் சொல்லும் அளவுக்கு ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தொடர்ந்து நல்ல பாடல்களை எழுத வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறேன்” என்கிறார் மோகன் ராஜன்.
‘வைரல்’ ரகம்: சில பாடல்கள் வெளியான பிறகுவைரலாகும். சில பாடல்கள் வெளியாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு இணைய வாசிகளால் கொண்டாடப்படும். அப்படிப் படம் வெளியாகி நீண்ட காலத்துக்குப் பிறகு கொண்டாடப்பட்ட ஒரு பாடல்தான் ‘கனவே கனவே’. சில நேரம் ஒரு பாடலுக்காக எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமலும் போவதுண்டு. இரண்டையும் மோகன் ராஜன் எப்படிக் கையாள்கிறார்?
“ஒரு நல்ல திரைப்படப் பாடல் என்பது அதிக எண்ணிக்கையில் விருப்பக் குறியீடுகளைப் பெறுவதிலும், வைரல் அடிப்படையிலும் ‘ஹிட்’டா இல்லையா என முடிவாகிறது. பாடல்களும் முற்றிலும் வணிகமாக மாறியிருப்பதை மறுக்க முடியாது. எனினும் சில பாடல்கள் ஹிட்டாகும் என எதிர்பார்த்து ஏமாற்றமும் அடைந்ததுண்டு.
சில பாடல்கள் எதிர்பாராமல் வெற்றி பெற்றுள்ளன. எதுவாக இருந்தாலும் பார்வையாளர்கள், ரசிகர்கள்தாம் முடிவு செய்கிறார்கள். அவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அந்த முடிவை ஏற்கத்தானே வேண்டும்” என்கிறார் மோகன் ராஜன்.
பாடலாசிரியர் யார்? - பாடல்கள் சிறப்பாக அமைவதில் சில அம்சங்களுக்கும் இடமுண்டு. அதாவது ஒரு கதைக் களம் தெளிவாக விளக்கப்படும்போதும் இயக்குநரின் தேவை புரியும்போதும் ஒரு பாடலாசிரியரால் படத்துக்கேற்ப பாடல்களை எழுத முடியும். இதில் மோகன் ராஜன் எப்படி?
“மொழி ரீதியாகவும், பொருள் ரீதியாகவும், சப்த ரீதியாகவும் சரியான முறையில் ஒரு பாடலை இயற்ற பாடலாசிரியரின் பங்கு முக்கியமானது. அவரோடு சேர்ந்து இயக்குநரும் இசையமைப்பாளரும் தேவை அறிந்து பணியாற்றும்போது ஒரு பாடல் சிறப்பானதாக அமையும்.
இது ஒரு கூட்டு முயற்சிதான். அதுமட்டுமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு முன்னணி நடிகரின் படத்துக்குப் பாடல்கள் எழுதினால் அந்தப் பாடல் ஹிட். குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் ஹிட்டாவது சவாலான காரியமே.
சர்வதேச இசைத் துறையும் வணிக நோக்கில்தான் இயங்குகிறது. ஆனால், அங்கு எட் ஷீரன், செலீனா கோமஸ் போன்ற கலைஞர்களுக்கென்று ஒரு ‘மார்க்கெட்’ இருக்கிறது. இங்கு அந்த நிலை உள்ளதா எனத் தெரியவில்லை.
ஓடிடி தளங்கள் வந்த பிறகு பாடல்களையும் ஓட்டிப் பார்க்கின்றனர். எதிர்காலத்தில் பாடல்களுக்கென, இசைக் கலைஞர்களுக்கென ஒரு சந்தை உருவாக வேண்டும். யூடியூப் போன்ற தளம் இருப்பதால் இசைத்துறையில் பெரிய மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது” என்கிறார் மோகன் ராஜன்.