இது ‘பெரியோனே’வின் குரல்!

இது ‘பெரியோனே’வின் குரல்!
Updated on
2 min read

‘இறை மறுப்பாளராகவே இருந்தாலும் இந்தப் பாடல்களை ரசிக்காமல் இருக்க முடியாது’ என்கிற மீம் சமூக வலைதளத்தில் பிரபலம். அதாவது, ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ‘அன்பென்ற மழையிலே...’ (மின்சார கனவு), ‘குன் ஃபையா குன்...’ (ராக்ஸ்டார்) போன்ற சினிமா பக்திப் பாடல்களை ரசிக்காதவர் இருக்க முடியுமா என்கிற தொனியில் இந்த மீம் இணையவாசிகளால் பகிர்ந்துகொள்ளப்படுவது வழக்கம்.

அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது அண்மையில் வெளியான ‘பெரியோனே...’ பாடல். ‘ஆடு ஜீவிதம்’ என்கிற மலையாளப் படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது பேரமைதியின் அலை உங்களைத் தாக்காமல் இருக்காது!

இயக்குநர் பிளெசி இயக்கத்தில் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகி யிருக்கிறது ‘ஆடு ஜீவிதம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெரியோனே...’ பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க, பாடகர் ஜித்தின் ராஜ் பாடியுள்ளார். மனதை உருக வைக்கும் தனது குரலால் மலையாளம் மட்டுமல்லாமல் ஐந்து மொழிகளிலும் அதே ஈடுபாட்டுடன் பாடியிருக்கிறார் ஜித்தின்.

ஜித்தின் ராஜ்
ஜித்தின் ராஜ்

யார் இந்த ஜித்தின்? - கேரள மாநிலம் மலப்புரத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜித்தின், தற்போது சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி வரும் அவர், கடந்த 10 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். ‘உன் மேல ஒரு கண்ணு...’ (ரஜினி முருகன்), ‘கருவக்காட்டு கருவாயா...’ (மருது), ‘திமிரணும்டா...’ (என்.ஜி.கே.) போன்று சில ஹிட் பாடல்கள் இவருடைய குரலில் வெளியானவை.

பொதுவாகப் பல மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தின் பாடலை, அந்தந்த மொழிக்குப் பொருந்தக்கூடிய பாடகரைத்தான் இசையமைப்பாளர்கள் தேர்வு செய்வார்கள். ஆனால், ஐந்து மொழிகளிலும் ‘பெரியோனே...’ பாடலைப் பாடியது எப்படி?

“ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த சில பாடல்களுக்கு ‘கோரஸ்’ பாடியிருக்கிறேன். ஆனால், ‘பெரியோனே...’ பாடல்தான் அவர் இசை அமைப்பில் வெளியான எனது முதல் ‘சிங்கிள்’ பாடல். அவரைச் சந்தித்தபோது என் சொந்த ஊர் எது எனக் கேட்டுவிட்டு, அதை மையமாகக் கொண்ட உள்ளூர் இசைப்பாடலைப் பாடும்படி ரஹ்மான் கேட்டார்.

மலப்புரத்தில் ‘மாப்பிள்ளை பாட்டு’ மிகப் பிரபலம். இஸ்லாமிய சமூகத்தில் திருமணங்களின்போது பாடப்படுவதுதான் இந்த ‘மாப்பிள்ளை பாட்டு’. இதைப் பாடினேன். ரஹ்மானுக்கு இது பிடித்துப்போகவே ‘பெரியோனே...’ பாடலைப் பாட வாய்ப்பளித்தார். மலையாளத்தில் மட்டும்தான் பாட அழைக்கிறார் என நினைத்தேன்.

ஆனால், ஐந்து மொழிகளிலும் என்னுடைய குரலிலேயே பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. பாடல் பெரும் ஹிட்டானதை அடுத்து வாழ்த்துகள் குவிகின்றன. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பெருமையாகக் கூறுகிறார் ஜித்தின்.

ரஹ்மான் வரிகள்: ‘பெரியோனே என் ரஹ்மானே... பெரியோனே ரஹிம்’ எனத் தொடங்கும் பாடல் வரிகளில் இந்த முதல் வரியை மட்டும் ரஹ்மான் சேர்த்ததாகச் சொல்கிறார் ஜித்தின்.

“இப்பாடலுக்கு ரஃபீக் அகமது வரிகள் எழுதினார். பாடலைப் பதிவு செய்யும்போது ‘இறைவனை’ உங்கள் வட்டார மொழியில் எப்படி அழைப்பீர்கள் என ரஹ்மான் கேட்டார்.

‘ரப்பே, பெரியனே’ போன்ற வார்த்தைகளில் அழைப்போம் என்றேன். உடனே சில வார்த்தைகளைச் சேகரித்து அவரே இந்த முதல் வரியை எழுதி பாடலுடன் சேர்த்துவிட்டார். இந்த வரி தற்போது பலரும் முணுமுணுக்கும் வரியாக மாறியிருக்கிறது” என்கிறார் ஜித்தின்.

மொழி தடையல்ல: ஒரு பாடகர் மொழிகள் கடந்து பாட மொழி தெரியாமல் இருப்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்கிறார் ஜித்தின். “பொதுவாகத் தென்னிந்தியர்களின் இந்தி உச்சரிப்பு சற்று மாறுபடும். தென்னிந்திய மொழிகளில் பாடுவதைக் காட்டிலும் இந்தி மொழியில் பாடும்போது கூடுதல் பயிற்சி தேவை.

எந்த மொழியானாலும் அந்த மொழியின் உச்சரிப்பு, பாடலின் பொருள் ஆகியவற்றில் தெளிவுபெற்ற பின்பு பாடினால், பிழையின்றிப் பாட முடியும். பாடகராக இருப்பதால் தாய்மொழியைத் தாண்டி வேறு ஒரு மொழியையும் எழுதி, படிக்கக் கற்றுக்கொள்வதும் அவசியமாகிவிட்டது” என்கிறார் ஜித்தின்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in