‘எஸ்கேப்’புக்கு உதவும் ‘ஆல்ட் டேப்’

‘எஸ்கேப்’புக்கு உதவும் ‘ஆல்ட் டேப்’
Updated on
2 min read

தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் களேபரங்களைப் பகடி செய்து ஸ்டாண்ட்அப் காமெடியனாக வலம் வருபவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் நடராஜன். இவரது ‘ஐ.டி. அண்ணாச்சி’ நகைச்சுவைக் கதாபாத்திரம் இணையவாசிகள் மத்தியில் மிகப் பிரபலம். யூடியூப் அலைவரிசையில் காணொளிகள் பதிவிடத் தொடங்கியவர், தற்போது ‘ஆல்ட் டேப்’ என்கிற பெயரில் ஸ்டாண்ட்அப் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதென்ன ‘ஆல்ட் டேப்’?

தப்பிக்கும் வழி

“இந்த ‘ஆல்ட் டேப்’ வசதியைக் கணினியில் வேலை செய்பவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். அதாவது மென்பொருள், இணையதளம், சமூக வலைதளம் என வெவ்வேறு தளங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சட்டென்று ஒன்றிலிருந்து இன்னொரு தளத்துக்கு மாற ‘ஆல்ட் டேப்’ கிளிக் செய்யலாம். அலுவலகத்தில் நீங்கள் யூடியூப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மேனேஜரின் பார்வை உங்களுடைய கணினியின் மீது விழுகிறது என்றால் உடனே ‘ஆல்ட் டேப்’ கிளிக் செய்து, வேலை செய்வதுபோல காட்டிக்கொள்ளலாம். இதை மையமாக வைத்துதான் காமெடிகளை எழுதியிருக்கிறேன்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி ‘ஆல்ட்-டேப்’ அழுத்துவதற்கான காலம் வரும். ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு சரியாகக் கைக்கூடவில்லை என்றால் அதை மட்டுமே எண்ணி வருந்தாமால் ‘ஆல்ட்-டேப்’பை அழுத்தி அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினால் வாழ்க்கை சிறப்பாகும். ஐ.டி. மட்டுமில்லாமல் பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் வகையில் காமெடிகளை எழுதியிருக்கிறேன்” என்று நீண்ட விளக்கம் தருகிறார் ராம்குமார்.

சவால்கள் என்ன?

தமிழ்நாட்டில் கார்த்திக், அலெக்ஸ், அரவிந்த் எனத் தொடங்கி ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளர்கள் பலர் அறிமுகமாகிவிட்டனர். ஒரு பொது இடத்தில் கூடி, நேரலையாக ஸ்டாண்ட்அப் நிகழ்ச்சிகளை மக்கள் ரசிப்பது சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் சாதக, பாதகங்கள் என்ன?

“பெரும்பாலான ஸ்டாண்ட்அப் காமெடி நிகழ்ச்சிகளில் ‘ஆன் தி ஸ்பாட்’ நகைச்சுவைகள் நிறைந்திருக்கும். என்றாலும் முன்கூட்டியே சில நகைச்சுவைகளை எழுதிவிடுவோம். முதலில் ’ஸ்க்ரிப்ட்’ தயார் செய்ய வேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை இதுதான் நிகழ்ச்சியின் அம்சம். அதில் தெளிவாக இருக்க வேண்டும். பார்வையாளர் முன் நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்பாக ‘டெஸ்ட் ஷோ’ நடத்த வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு பார்வையாளர்களைக் கொண்ட சிறு அளவிலான கூட்டத்தின் முன் நிகழ்ச்சியை அரங்கேற்றி ஒத்திகைப் பார்ப்போம். இதுபோல ஐந்துக்கும் மேற்பட்ட ‘டெஸ்ட் ஷோ’க்களை நடத்தி நிறை, குறைகளைச் சரி செய்து இறுதியாக நேரடியாக நிகழ்ச்சிக்குத் தயாராவோம். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை உறுதிசெய்வது, டிக்கெட் விற்பனை, பட்ஜெட், மேடை அலங்காரம், ‘லைட்- மைக்’ செட்-அப், நிகழ்ச்சி குறித்து விளம்பரப்படுத்துவது, ஆவணப்படுத்துவது எனப் பல்வேறு தளங்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் பணியாற்றினால் மட்டுமே ஒரு ஸ்டாண்ட்அப் நிகழ்ச்சியை முழுமையாக நடத்தி முடிக்க முடியும்” என்கிறார் ராம்குமார்.

உள்ளூரில் நிகழ்ச்சிகள்

சென்னை, கோவை நகரங்களைத் தவிர தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் ஸ்டாண்ட்அப் நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் ராம்குமார். பெரிய நகரங்கள் தவிர்த்த சிறிய நகரங்களில் மக்களிடம் அதற்கான வரவேற்பு இருக்குமா?

“சமூக வலைதளம் வழியே உள்ளூர் வரை ஸ்டாண்ட்அப் காணொளிகள் ‘ரீச்’ ஆகியிருக்கின்றன. நாடக, இசை நிகழ்ச்சிகளைப் போல ஸ்டாண்ட்அப் நிகழ்ச்சிகளுக்கென ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் பெருநகரங்கள் மட்டுமல்ல சிறிய ஊர்களிலும் ஸ்டாண்ட்அப் காமெடி நிகழ்ச்சிகள் ‘வொர்க்-அவுட்’டாகத் தொடங்கியுள்ளன. ரசிகர்களை எளிதில் ‘கனெக்ட்’ செய்யும் காமெடிகள் நிகழ்ச்சியில் இடம் பெற்றால், எந்த ஊராக இருந்தாலும் ‘ஹிட்’ அடிக்கலாம்” என்று நம்பிக்கை பொங்கக் கூறுகிறார் ராம்குமார்.

எப்படி இருந்தது?

அண்மையில் சென்னையில் ராம்குமாரின் ‘ஆல்ட் டேப்’ நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றரை மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில் ஐ.டி, ஆரோக்கியம், ஃபிட்னெஸ் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு காமெடிகளைச் சிதறவிட்டார். வெறும் காமெடித் துணுக்குகளை மட்டும் அடுக்கிக்கொண்டே செல்லாமல், இடையில் ‘புகைபிடித்தல் உடல்நலத்துக்கு கேடு’, ‘உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை’ போன்ற செய்திகளை அறிவுரையாக இல்லாமல் எளிமையாகச் சொன்னது சிறப்பு. இச்சமூகத்தில் உடல் பருமன் குறித்து கேலி, கிண்டல் பேசுவது இயல்பு எனத் தவறாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நகைச்சுவைகளை முற்றிலுமாக தவிர்த்து, ‘மனமிருந்தால், முயற்சி செய்தால் ஒவ்வொருவரும் மாறலாம்’ என்பதை இயல்பாக எடுத்துரைத்து கைத்தட்டல்களை அள்ளினார் ராம்குமார். அனைவருக்குமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஐ.டி. துறையைச் சேர்ந்தவர்களுக்கான சில நகைச்சுவைகள் அதிகம் ஒத்துப்போயின. 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட சில ‘சொற்களை’ மட்டும் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக முடிந்திருக்கும் ராம்குமாரின் ‘ஆல்ட்-டேப்’ ஸ்டாண்ட்அப் நிகழ்ச்சி!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in