

மூன்று மணி நேரத் திரைப்படத்தின் கதையை 30 நொடிகளில் விளக்குவது, அம்மா - மகன் இடையே நடக்கும் களேபரங்கள், 90களின் ‘நாஸ்டால்ஜியா’, ‘மியூசிக்’ உடன் காமெடி என்பதை மியூமெடி’ எனப் புதுமையான முயற்சியில் தந்து சிரிப்பலைகளைச் சிதறவிடுகிறார் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன் மனோகர். இவருடைய இன்ஸ்டகிராமான ‘கிரியேட்டர்’ அர்ஜூனின் பக்கம் நகைச்சுவைத் துணுக்குகளால் நிரம்பி வழிகிறது.
சினிமாவின் வழியில்: வாரந்தோறும் ஐந்துக்கும் அதிகமான காணொளிகள், மொத்தம் 600க்கும் அதிகமான பதிவுகள் என அர்ஜூனின் இன்ஸ்டகிராம் பக்கம் பரபரவென இயங்கிக்கொண்டிருக்கிறது.
30 விநாடிகள் மட்டுமே ஓடும் ஒவ்வொரு காணொளிக்கும் குறைந்தது 3 நாள்களாவது மெனக்கெடுகிறார் இவர். கருத்து, வசனம், படத்தொகுப்பு, இசை எனப் பல துறைகளையும் தானே கையாளும் அர்ஜூன் ‘மியூமெடி’ பற்றி பகிர்ந்துகொண்டார்.
“பி.காம் படித்திருந்தாலும் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. கதை எழுதுவது, இயக்குவது போன்றவற்றில் ஆர்வமிருந்ததால் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு பிரபல யூடியூப் அலைவரிசைகளில் சில ஆண்டுகள் பணியாற்றினேன்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங், கான்செப்ட் எழுதுவது போன்றவற்றில் அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து கரோனா ஊரடங்கின்போது சுயமாகக் காணொளிகளைத் தயார் செய்து இன்ஸ்டகிராமில் பதிவு செய்தேன்.
இயல்பாகவே காமெடி டிராக், வசனங்களை எழுதுவதில் பழக்கம் இருந்ததால் இசையையும் காமெடியையும் சேர்த்து ‘மியூமெடி’ என்கிற ஸ்டைலில் காணொளிகளைப் பதிவுசெய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து இயங்கி வருகிறேன்.
உதாரணத்துக்கு,, ஹோட்டல் வெயிட்டர் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகராக இருந்தால் எப்படி மெனு எடுப்பார்? - ‘உனக்கென்ன வேணும் சொல்லு, இன்னிக்கு ஸ்பெஷல் ‘திருநெல்வேலி அல்வாடா’ எனப் பாடல்களைத் தொகுத்துக் காணொளி உருவாக்குவது, தமிழ்ப்படங்களில் வெளியான ‘வா’ என அழைக்கும் தொனி கொண்ட பாடல்களைத் தொகுப்பது போன்ற பலவிதமான ‘கான்செப்ட்’களில் நகைச்சுவையைக் கலந்து ‘மியூமெடி’ செய்துள்ளேன்” என்கிறார் அர்ஜூன்.
பல்திறன் வளர்ச்சி: டிஜிட்டல் தளத்தில் திறம்பட இயங்க ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல துறைகளிலும் திறன் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் துறைகளில் ஓரளவு பரிச்சயம் இருந்தால் மட்டுமே எளிமையாகக் காணொளிகளைத் தயாரிக்க முடியும் என்பது அர்ஜூனின் அனுபவம். .
“யூடியூப்தான் என் குருநாதர். எனக்கு மட்டுமல்ல பலரும் பல திறன்களைக் கற்றுக்கொள்ள யூடியூபையே நாடுகின்றனர். டிஜிட்டல் உலகில் யூடியூப், கூகுளில் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம்.
சினிமா, கார்ப்பரேட் எனத் தொழில்முறையில் இயங்க முறையான கற்றல் வழிகளும், அனுபவமும் தேவை. சமூக வலைதளங்களில், கிரியேட்டர்கள் எனப்படும் டிஜிட்டலில் இயங்கும் நபர்களுக்கு யூடியூப் போதுமானது.
பொழுதுபோக்குத் துறையில் இயங்க விருப்பமுள்ளவர்கள் யூடியூப் வழியே திறன்களை வளர்த்துக்கொண்டு தத்தம் துறையில் கண்டிப்பாக மிளிரலாம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அர்ஜூன்.
காமெடியில் கவனம்: சிரிக்க வைப்பதும் சிந்திக்க வைப்பதும் அவ்வளவு எளிதல்ல. சிரிக்க வைப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது முகம் சுளிக்க வைக்காமல் சிரிக்க வைப்பது. தனது நகைச்சுவைத் துணுக்குகளால் இப்படி ஏதேனும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார் அர்ஜூன்.
“ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனது காணொளிகளால் சிலர் சிரிக்கலாம், சிலர் கடந்து செல்லலாம், சிலருக்கு அலுப்பாக இருக்கலாம். எதுவாயினும் ஒருவரை முகம் சுளிக்க வைக்காத வகையில் வசனங்களை எழுதி, காணொளிகளை இயக்குகிறேன்.
இசையும் நகைச்சுவையும் சேரும்போது மொழிகள் கடந்து பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்பதால் கவனமாக இருப்பது நல்லதே. ஆனால், மியூமெடி உருவாக்கும் எனக்கும் சோகங்கள் இல்லாமல் இல்லை. இதில் இணையவாசிகளின் பங்கு அதிகம். ஆராய்ச்சிகள் செய்து, தகவல் திரட்டி ஒரு காணொளியைப் பதிவு செய்தால், ‘கான்செப்ட்’டை மட்டும் எடுத்துக்கொண்டு அந்தக் காணொளியை அப்படியே ‘காப்பி’ அடிப்பவர்கள் ஏராளம்.
உண்மையான காணொளியைவிட ‘காப்பி’ அடிக்கப்பட்ட காணொளி பல லட்சம் பார்வையாளர்களைக் கடக்கும்போது கோபம் எழாமல் இல்லை. ஆரம்பத்தில் வருத்தமாக இருந்தாலும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்’ என்கிற போக்கில் கடந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. இணைய உலகில் இந்த ‘காப்பி’ பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பது கவலைக்குரியதுதான்” என்கிறார் அர்ஜூன்.
எதிர்காலம் இங்கே: யூடியூப் காணொளிகளுக்கு வருமானம் கிடைப்பதுபோல இன்ஸ்டகிராம் தளத்தில் இன்னும் அந்த வசதி முறையாக்கப்படவில்லை என்கிறார் அர்ஜூன். 2கே கிட்ஸ்களின் விருப்பத் தளமான இன்ஸ்டகிராமில் கிரியேட்டர்களும், இன்ஃபுளூயன்சர்களும் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்தியாவில் இன்ஸ்டகிராமின் எதிர்காலம் பற்றி பகிர்ந்துகொண்ட அர்ஜூன், “யூடியூப் போல இன்ஸ்டகிராமும் ஒளிப்படங்கள், காணொளிகளுக்கான ஒரு முக்கியத் தளமாக மாறி வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்ஸ்டகிராமில் வருமானம் ஈட்டும் வசதிகள் வந்துவிட்டன.
இந்தியாவில் இந்த வசதி வெகு விரைவில் வந்துவிடும். சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம் என்பதை மனத்தில் வைத்துக்கொண்டால் அனைவருக்கும் நல்லது” என்று பளிச்சென முடிக்கிறார் அர்ஜூன்.
இன்ஸ்டகிராம் பக்கத்தைக் காண: http://surl.li/rnzzg