

‘ஃபிட்னெஸ்’ என்றால் நடைப்பயிற்சி செய்வதும், ஜிம்முக்குச் செல்வதும் மட்டும்தானா? ‘இல்லை’ என்கின்றனர் சென்னையைச் சேர்ந்த ‘ஃபிட்-ஓ-கிரேஸி’ குழுவினர். “ஃபிட்னெஸ்’ என்றால் டயட், உடற்பயிற்சி, மனப்பயிற்சி எனச் சகலமும் கலந்தது” என்கிறார்கள். பூங்கா, மொட்டைமாடி, வீட்டின் அறை என எங்கேயும் எப்போதும் செய்யக்கூடிய ஃபிட்னெஸ் பயிற்சிகளைத் திறம்படச் செய்துவருகின்றனர் இவர்கள்.
புதிய களம்: இன்று ‘`ஃபிட்னெஸ்’ஸூக்கென ஆங்காங்கே மையங்கள் வந்துவிட்டன. காலை முதல் இரவு வரை செயல்படும் இந்த மையங்களில் உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன. ஆனால், வழக்கமான ‘ஃபிட்னெஸ்’ மையங்களில் பின்பற்றப்படும் பளு தூக்குதல், இயந்திரப் பயிற்சி போன்று இல்லாமல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் இந்த இளம் ஃபிட்னெஸ் ஆர்வலர்கள்.
“ஐம்பூதங்களில் நிலம் என்பது உடல் வலுவடைவதற்கான பயிற்சி; நீர் என்பது உடல் நகர்வு, செயல்திறனை மேம்படுத்துதல்; காற்று என்பது சமநிலை அடைதல்; ஆகாயம் என்பது வெளிப்புறங்களுக்கு ஏற்ப உடல் ஒத்துழைக்கக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்ளுதல்; நெருப்பு என்பது உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் ‘கார்டியோ’ போன்ற பயிற்சிகள். இப்படி ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டே பயிற்சிகளை ஊக்குவிக்கிறோம்.
இது ‘Nature movement training’ என்று அழைக்கப்படுகிறது. கம்பியைப் பிடித்துத் தொங்குவது, பளு தூக்கிக்கொண்டு படி ஏறுவது, கயிற்றில் ஏறுவது எனப் பல வகை பயிற்சிகள் இதில் அடக்கம். விளையாட்டும் உடற்பயிற்சியும் சேர்ந்த கலவையாக இருக்கக்கூடிய பயிற்சிகள் இவை.
2015ஆம் ஆண்டு முதல் ‘ஃபிட்-ஓ-கிரேஸி’ குழு இயங்கி வருகிறது. நானும் நண்பர் தீபக்கும் பயிற்சி அளிக்கிறோம். மூன்று பேருடன் தொடங்கிய இக்குழுவில் தற்போது 50க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில்தான் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்கிறார் ‘ஃபிட்-ஓ-கிரேஸி’ குழுவில் ஒருவரான சதீஷ்.
பாகுபாடு கிடையாது: இங்கு வாரம் மூன்று முறைதான் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரப் பயிற்சி மட்டுமே. தேவைப்பட்டால் ஓய்வும் எடுத்துக்கொள்ளலாம். கூடுதலாகப் பயிற்சியும் மேற்கொள்ளலாம். “பயிற்சிகள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், உடல் சொல்வதைக் கேளுங்கள்” என்கிறார் சதீஷ்.
“இந்தப் பயிற்சியில் ஆண், பெண் என்கிற பேதம் கிடையாது. வயது கட்டுப்பாடுகளும் கிடையாது. கம்பி ஏறுவது, மரம் ஏறுவது போன்ற பயிற்சிகள் ‘டீன்’ வயதைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் எளிது. ஆனால், பெரியவர்கள் சிலரால் இப்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குத் தடை கிடையாது.
ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கு ஏற்ப, உடல் ஒத்துழைக்கும் வரையில் ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் ஒருவர் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட முறையில், குறிப்பிட்ட நேரத்தில்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. உடலுக்குத் தேவைப்படும்போது ஓய்வும் பயிற்சியும் சரியாக இருந்தாலே போதுமானது. ஆரோக்கியம் உங்கள் வசம்” என்கிறார் சதீஷ்.
நிலாச்சோறு: ‘ஃபிட்-ஓ-கிரேஸி’இல் உடல்ஆரோக்கியம் மட்டும் குறிக்கோள் கிடையாது. மன ஆரோக்கியத் துக்குமான பயிற்சிகளும் இருக்கின்றன. ‘நிலாச்சோறு’ போன்று பாரம்பரியக் கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
“இயந்திரப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது கை, கால்களுக்கான உடல் அசைவுகள் மட்டுமே இருக்கும். ஆனால், ஃபிட்-ஓ-கிரேஸியில் ‘கவனம்’ (Focus) தேவைப்படும் பயிற்சிகள்தாம் அதிகம். இதனால் மூளைக்கும் வேலை அளிக்கப்படுகிறது. கவனச் சிதறலைக் கட்டுப்படுத்தி முழு ஈடுபாட்டுடன் உடலும் மனதும் சேர்ந்து பயணிக்கும்போது பலன் இரட்டிப்பாகும்.
அது மட்டுமன்றி, ‘நிலாச்சோறு’ என்கிற நிகழ்வு அவ்வப்போது நடைபெறும். ‘ஃபிட்-ஓ-கிரேஸி’ குழுவினர் ஒன்றாக இணைந்து ஓர் அழகிய இரவில் கலந்துரையாடியபடி நிலாச்சோறு சாப்பிடுவோம். இதனால், மனம் லேசாகும், புத்துணர்வு பிறக்கும்.
‘Nature movement training’ என்பதைப் பொறுத்தவரை இதன் கீழுள்ள பயிற்சிகளை ஒரு வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது. நாளுக்குநாள் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். மேலும், மற்ற உடற்பயிற்சிகளைப் போல குறுகிய காலத்தில் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் கூடாது.
உடலையும் மனதையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைக்கும் பயிற்சிகள் என்பதால் மாற்றங்களை உணர சில காலம் தேவைப்படும். ‘மூன்று மாதங்களில் உடல் எடையைக் குறைக்கலாம்’ என்பது போன்ற வகையறாக்களுக்கு இந்தப் பயிற்சிகள் சாத்தியமில்லை. மறைந்து வரும் ஆதிகாலத்து உடல் அசைவை, உடல் உழைப்பை மீட்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம் என்பதால், அதற்கேற்ப உடலில் மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியம் கைகூடும்” என்கிறார் சதீஷ்.