

பண்டைக்காலப் பண்டமாற்று முறை தற்போது நடைமுறைக்கு வந்தால் எப்படி இருக்கும்? பொருளுக்குப் பொருள், தானியங்களுக்குத் தானியம் என இருந்தது போல உடைக்கு உடை தரும் பண்டமாற்று முறையை நவீன யுகத்தில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த காயத்ரி ஜெய்குமார். அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஸ்வாப் சைக்கிள்’ செயலி வழியே பணப் பரிமாற்றம் இல்லாமல், பண்டமாற்று முறையில் உடைகளைக் கொடுத்து வேறு உடைகளைப் பெறலாம்.
மாற்றம் தேவை: வளங்குன்றா வளர்ச்சி (Sustainability development) சார்ந்து தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றவர் காயத்ரி. உலகெங்கிலும் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வரும் நிலையில் தன்னளவில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்கிற முனைப்பில் ‘ஸ்வாப் சைக்கிள்’ செயலியை இவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
“ஐரோப்பிய நாடுகளில் ‘Thrifting’ என்கிற பண்டமாற்று முறை மிகவும் பிரபலம். இதில் ஒரு முறை அல்லது சில முறை பயன்படுத்திய, தரமாக இருக்கக்கூடிய பொருள்களை, உடைகளைப் பிறர் பயன்படுத்துவதற்குத் தரலாம். பதிலுக்கு வேறு பொருள்களை, உடைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ‘Thrifting’ முறையை வெறும் பண்டமாற்றாக மட்டும் பார்க்க முடியாது. இணையதள ஷாப்பிங் செய்யத் தூண்டும் விளம்பரம், தள்ளுபடி விற்பனை போன்றவற்றால் தேவைக்கும் அதிகமாகப் பலர் உடைகளை வாங்கிக் குவிக்கின்றனர். அளவு சரியில்லாமல் போவது, ஒரு முறைக்கு மேல் பயன்படாமல் போவது போன்ற சில காரணங்களால் உடைகளைத் தூக்கி எறியும் சூழல் அவ்வப்போது ஏற்படுகிறது.
உலக அளவில் பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றுவது ஃபேஷன் தொழிற்சாலைகள்தாம் எனத் தரவுகள் சொல்கின்றன. அதிக உடைகளை உற்பத்தி செய்வதாலும், பயன்படுத்திய உடைகளை முறையின்றித் தூக்கி எறிவதாலும் கழிவு சேர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இந்நிலையை மாற்ற ‘Thrifting’ முறையைப் பின்பற்றலாம்.
இந்தியா போன்ற நாடுகளில் ஒருமுறை அல்லது சிலமுறை பயன்படுத்திய பொருள்களை மீண்டும் உபயோகிக்கும் பழக்கம் பொதுவாகப் பின்பற்றப்படுவதில்லை. இதனால் ஏற்படும் தயக்கத்தை உடைக்கவும், மறுபயன்பாட்டு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் ‘ஸ்வாப் சைக்கிள்’ செயலியை 2023இல் உருவாக்கினோம்.
இச்செயலியின் வழியே எளிமையான முறையில் உடைகளை வாடிக்கையாளரிடம் விற்கவோ பெறவோ முடியும். இளைய தலைமுறையினர் பலரும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்” என்கிறார் காயத்ரி.
புது முயற்சி: இந்தியாவில் ‘Thrifting’ முறையைப் பின்பற்றி சில நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் இணைய வழியில் செயலி தொடங்கியிருப்பது இதுவே முதல் முறை என்கிறார் காயத்ரி. முழுவதுமாக இணையவழியில் இயங்குவதால் இதில் சில பாதகங்களும் இல்லாமல் இல்லை.
“இது இந்தியாவுக்குப் புதிது என்பதால், பலர் இச்செயலியைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். சிலமுறை பயன்படுத்திய உடைகளைத் தருவதால் அது சுத்தமானதா என்கிற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர். ‘ஸ்வாப் சைக்கி’ளைப் பொறுத்தவரைக் கிழிந்த, தரம் குறைந்த உடைகளைப் பண்டமாற்று செய்யக் கூடாது.
நாம் ஓர் உடையை விற்கிறோம் என்றால் அந்த உடையை இன்னொருவர் பயன்படுத்தும் அளவு தரமாக இருக்க வேண்டும். இந்த உடையைத் தருவதால் பதிலுக்குப் பணம் கிடைக்கப் போவதில்லை. அதே விலைமதிப்புள்ள வேறொரு தரமான உடையைப் பெறப்போகிறார்கள் என்பதால் கொடுக்கல், வாங்கல் என இரண்டும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளரும் நிறுவனமும் உறுதி செய்யும்” என்கிறார் காயத்ரி.
ஃபேஷன் அப்டேட்: ‘ஸ்வாப் சைக்கிள்’ செயலியைஉருவாக்கும் முன் பலகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டி ருக்கிறார். இதில் சில புதுமைகளையும் புகுத்தியிருக்கிறார் காயத்ரி. “இணையவழி விற்பனையகமான இந்தத் தளம் ஆண்கள், பெண்கள், பால் புதுமையினர் என அனைவருக்குமான, அனைத்து வயதினருக்குமான தளமாக இயங்கும். இணையதளத்தில் வரன் பார்க்கும் ‘மேட்ச் மேக்கிங்’ செயலிகள் பல வந்துவிட்டன.
கிட்டத்தட்ட அதைப் போலவே இயங்கும் ‘ஸ்வாப் சைக்கிள்’ செயலியில், உங்களுடைய உடைகளைப் பண்டமாற்றிக்கொள்ளும் இன்னொரு வாடிக்கையாளரைத் தேர்வுசெய்ய வேண்டும். இரண்டு வாடிக்கையாளருக்கும் உடைகள் பிடித்துப் போனால் பண்டமாற்று செய்துகொள்ளலாம்.
ஃபேஷன் துறையில் இயங்குவோர், புதிய ஸ்டைல்களைத் தேடிச் செல்வோர், விதவிதமாக உடைகளை அணிய விரும்புவோர் தங்களது ஃபேஷனை அப்டேட் செய்துகொள்ள இச்செயலியைப் பயன்படுத்தலாம். பணம் வீணாகாமலும், சுற்றுச்சூழல் மாசுபடாமலும் இருக்க உங்களால் இயன்ற முறையில் சின்னதாகப் பங்காற்றலாம் என்கிற மனநிறைவும் இதில் கிடைக்கும்” என்கிறார் காயத்ரி.
அப்புறமென்ன, பண்டமாற்று உடைக்கு நீங்கள் தயாரா?