அழகிய ‘தமிழ்’ மகள்!

வர்ஷா
வர்ஷா
Updated on
3 min read

உலகமே டிஜிட்டல் யுகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டலின் வரவால் பல தளங்களிலும் மாறுதல்கள் வந்துள்ளன. அதற்குத் தமிழ் எழுத்துகளும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த வடிவமைப்பாளர் வர்ஷா.

தமிழ் வார்த்தைகளுக்குக் கற்பனைக்கும் எட்டாத அழகான வடிவங்களைச் சேர்ந்து வடிவமைத்து அசத்துகிறார் இவர். தமிழ் எழுத்துகளின் புதிய வடிவங்களைக் காண விரும்புவோரின் கண்களுக்கு விருந்துப் படைக்கிறது, இந்தத் தமிழ் ‘லெட்டரிங்’.

அழகியல் சேர்த்து: மூன்று இன்ஸ்டகிராம் பக்கங்கள். தமிழ் எழுத்துகளுக்குப் புது வடிவம், ஓவிய வடிவில் தமிழ் வார்த்தைகள், கதை சொல்லும் பிரபல தமிழ்ச் சொற்றொடர்கள் என ஒவ்வொரு பக்கத்திலும் புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார் வர்ஷா.

இவர் நிர்வகித்து வரும் ‘உயிர்மெய்’ என்கிற இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பல்லாயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பதிவிடும் தமிழ் ‘லெட்டரிங்’ பதிவுகளுக்கு லைக்ஸ்கள் குவிகின்றன. அதென்ன தமிழ் ‘லெட்டரிங்’ என்கிற கேள்வியோடு வர்ஷாவைச் சந்தித்தோம்.

“நான் கட்டிடக்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். ஆனால், வடிவமைப்பு பணிகளைச் சுயமாகக் கற்றுக்கொண்டு தற்போது தொடர்பியல் துறையில் பணியாற்றி வருகிறேன். தமிழ் மொழியின் மீது கொண்ட பேரார்வத்தால் தமிழ் எழுத்துகள் வடிவங்கள் தொடர்பாக நிறைய கற்றுவருகிறேன்.

என்னுடைய படைப்புகளைப் பதிவிட வேண்டும் என்கிற முனைப்பில் தொடங்கப்பட்டதுதான் ‘உயிர்மெய்’ இன்ஸ்டகிராம் பக்கம். 2016 முதல் எனது படைப்புகளை இதில் பதிவேற்றி வருகிறேன். ஆங்கில மொழியிலான எழுத்துருகளும், வார்த்தை ஓவியங்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. தமிழ் மொழியின் பாடல்கள், இலக்கியங்கள் போன்றவை எல்லாக் காலத்துக்குமான கருத்துகளைக் கொண்டவை என்பது அனைவரும் அறிந்தது.

இதைச் சமகாலத்துக் கேற்ப டிஜிட்டல் தளத்தில் எழுத்துருகளாக, ஓவியங்களாக உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியில் தமிழ் ‘லெட்டரிங்’ பணிகளைச் செய்து வருகிறேன். எழுத்து அல்லது வார்த்தைக்கு அழகியல் சேர்த்து வடிவமைப்பதே ‘லெட்டரிங்’.

வர்ஷா
வர்ஷா

உதாரணத்துக்கு, ஒரு திருக்குறளை திருவள்ளுவரின் வடிவத்தில் வரைவது, ‘தமிழ்நாடு’ என்கிற பெயரைப் பாரம்பரியக் கோலம் டிசைனில் எழுதுவது, இந்திய அரசமைப்பின் முகவுரையை இந்திய வரைப்படத்தில் எழுதுவது போன்ற ‘concept’ படைப்புகளில் எழுத்துகளுக்கு அழகியல் சேர்ப்பது ‘லெட்டரிங்’ என்கிறார் வர்ஷா.

பாரம்பரியமும் டிஜிட்டலும்: வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்ள பல மென்பொருள்கள் வந்துவிட்டன. ஆனால், தாள் அல்லது டிஜிட்டல் தளம் என எதுவாயினும் கைப்படவே வரைகிறார் வர்ஷா. “டிஜிட்டல் வடிவமைப்பு என்றால் கைப்பட வரைய முடியாது என்கிற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. டிஜிட்டலிலும் கைப்பட வரைய முடியும். வடிவமைப்புக்கென பிரத்யேக ‘பேட்’ எனப்படும் கருவிகள் உள்ளன.

பேப்பர் பென்சிலில் வரைவது போல பென்சில் அல்லது பேனாவைக் கொண்டு டிஜிட்டலிலும் வரைய முடியும். பெரும்பாலான லெட்டரிங் பணிகளை நான் கைப்படவே வரைகிறேன். ‘ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது’ என்பார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில் படிப்பதைவிடவும் காட்சி மொழியின் தாக்கம் அதிகம் இருக்கிறது.

இதனால் எழுத்துகள், வார்த்தைகளுக்கு ‘minimal’ அளவில் அழகியலைச் சேர்த்து வடிவமைக்கும்போது அவற்றைப் பார்த்த உடனே நம்மால் ஒரு கருத்தை, கதையைப் பொருத்தி எளிமையாகப் புரிந்துக்கொள்ள முடியும்.

‘Pro create’, ‘Sketchbook’ போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி நான் வரைகிறேன். மென்பொருள்கள் வேலையை எளிதாக்கினாலும் வடிவமைப்பு, ஓவியம் தீட்டுவது போன்றவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் பாரம்பரிய ‘பேப்பர் - பென்சில்’ முறையைப் பயன்படுத்தி தொடங்கினால் நல்லது.

ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். மென்பொருளின் உதவியோடு கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது ‘டெம்ப்ளேட்’ ஸ்டைலில் சிக்கிவிட அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே வடிவமைப்பு சார்ந்து கற்றுக்கொள்ள ஆர்வமிருப்பவர்கள், பேப்பரிலிருந்து தொடங்கினால் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற முடியும்” என்கிறார் வர்ஷா.

சமூக வலைதள சவால்: கலைத்துறையில் பணியாற்றும் பெரும்பாலானோரின் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், படைப்புத் திருட்டு. சமூக வலைதளங்களில் பகிரப்படும் படைப்புகள் படைப்பாளியின் அனுமதி இல்லாமலும், படைப்பாளியின் பெயர் வெட்டப்பட்டும் பரவலாகப் பகிரப்படுவது வருத்தம் தருவதாகச் சொல்கிறார் வர்ஷா.

“தமிழ் மொழி சார்ந்து பணியாற்றினால் காசு பார்க்க முடியாது என்கிற நிலை டிஜிட்டல் தளத்தால் மாறி வருகிறது. டைப்போகிராபி, காலிகிராபி, லெட்டரிங் உள்பட பல அம்சங்களில் தமிழ் மொழியை மையப்படுத்தி வேலைவாய்ப்புகள் வந்துவிட்டன. இதிலிருந்து வருமானமும் ஈட்ட முடியும். பெரும்பாலான படைப்புகள் ‘ஒரிஜினல் ஐடியா’வை முன்வைத்து உருவாக்கப்பட்டிருக்கும்.

படைப்புத் திருட்டை தடுக்க ஓவியங்கள், லெட்டரிங் பதிவுகளில் பெயர் இட்டுப் பதிவேற்றினாலும் அவற்றைக் கத்தரித்துவிட்டு பலர் பகிர்கிறார்கள். இதனால் கலைஞர்களுக்கான உரிய சன்மானம் கிடைப்பதில்லை. இந்த நிலை மாற டிஜிட்டல் பதிப்புரிமை, பகிர்தல் சார்ந்து சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ் படைப்பாளிகளின் வேலைகள் கடல் கடந்து பாராட்டுகளைப் பெறும், காலத்துக்கும் நின்று பேசும்” என்கிறார் வர்ஷா.

இன்ஸ்டகிராம் பக்கத்தைக் காண: http://surl.li/qnfsb

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in