

ஒரு சாதாரண கைப்பேசியைத் திறன்பேசியாக மாற்றியது அணிவகுக்கும் ‘செயலி’கள்தாம். அழைக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும் மட்டுமே பயன்பட்டு வந்த கைப்பேசி, பணம் அனுப்புவது முதல் உணவு ஆர்டர் செய்வது வரை மாயாஜாலங்கள் பல நிகழ்த்த முக்கியக் காரணம் இந்தச் செயலிகளே.
உலகையே உள்ளங்கைக்குள் அடக்கிவிடும் செயலிகளில் பல வகைகள் உள்ளன. உபயோகமான செயலிகள், பொழுதுபோக்கு செயலிகள் எனப் பல வகைகள் உண்டு. இதில் அவரவர் பயன்பாட்டுக்கேற்ப எது தேவை, தேவையில்லை எனப் பிரித்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லது.
கட்டண முறை: திறன்பேசி மட்டுமல்ல டேப்லட், மடிக்கணினி ஆகியவற்றிலும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இவற்றில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் எனத் திறன்பேசியின் இயங்கு தளத்துக்கேற்ப செயலிகளின் செயல்பாடு வேறுபடலாம். ஆனால், பெருவாரியாக ஆண்ட்ராய்டு திறன்பேசிகள்தாம் பயன்படுத்தப்படுகின்றன.
கலை, வாசிப்பு, கல்வி, விற்பனை, விளம்பரம், தொடர்பியல், பொழுதுபோக்கு, உணவு, ஆரோக்கியம், வாழ்க்கை முறை, மருத்துவம், வழிகாட்டுதல், இசை, செய்திகள், விளையட்டு, பயணம், வானிலை எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் பல செயலிகள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் சரியான செயலியைத் தேர்வு செய்து பயன்படுத்துவது தேவை, விருப்பம் சார்ந்தது.
கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்று பெயர் தெரிந்த, சந்தையில் முன்னணியில் இருக்கக்கூடிய பிராண்டின் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கூகுளின் ‘பிளே ஸ்டோர்’ அல்லது ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ தளங்களில் செயலிகளுக்கு அளிக்கப்படும் ‘ரேட்டிங்’ (மதிப்பெண்களின்), விமர்சனங்களின் அடிப்படையில் சிறந்த செயலிகளைத் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டும், கட்டணமின்றி சிறந்த சேவையை அளிக்கக்கூடிய செயலிகள் என்கிற அடிப்படையிலேயே கடந்த சில வாரங்களாக ‘டெக்நாலெட்ஜ்’ தொடரில் 15 முக்கியச் செயலிகள் பற்றிய அறிமுகங்களைப் பார்த்தோம்.
டிசைனுக்காக ‘கேன்வா’ செயலி தொடங்கி படத்தொகுப்புக்காக ‘இன்ஷாட்’, ஓவியம் வரைய ‘ஸ்கெட்ச்புக்’, செஸ் விளையாட ‘செஸ்.காம்’, அனிமேஷனுக்காக ‘ஃபிளிப் எ கிளிப்’ வரை முக்கியச் செயலிகளின் பயன்பாடுகளை அலசினோம்.
இது போல பெரும்பாலான செயலிகளைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை. என்றாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயனர்களின் எண்ணிக்கை, தரக்கட்டுபாடு, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் செயலிகளின் சேவையைத் தொடர கட்டணம் செலுத்த வேண்டிய தேவையும் எழலாம். இதனால் ஒரு செயலியை முழுவதுமாகப் பயன்படுத்த அதற்கான சேவைக் கட்டணத்தை செலுத்த பயனர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். எனினும் தேவைக்கேற்ப செயலிகளின் ‘trial’ சேவையைக் குறிப்பிட்ட சில தினங்களுக்கு உபயோகித்து பயன்பெறலாம்.
‘சமநிலை’ பயன்பாடு: திறன்பேசிகளின் எல்லையில்லாச் செயல் பாடுகளுக்குச் செயலிகள் தேவைதான் என்றாலும் இதிலுள்ள தீமைகள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதீத திறன்பேசிப் பயன்பாட்டால் முக்கியமாக நாம் இழப்பது நம்முடைய பொன்னான நேரத்தைதான்.
பொழுதுபோக்க ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்கள், இசைப்பாடல்கள் ஒலிக்கும் இசை தளங்கள், பாட்காஸ்டுகள், விளையாட்டுகள் எனப் பல இருக்கின்றன. இவற்றில் தேவைக்கும் அதிகமான நேரத்தைச் செலவிடும்போது உடல்நலம், மனநலம் என இரண்டும் பாதிக்கப்படுகின்றன. சர்வமும் செயலி மயமாகிவிட்ட இந்தக் காலத்தில் திறன்பேசியிலேயே மூழ்கிவிடாமல் ‘சமநிலை’ பயன்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது.
(முடிந்தது)