டெக் நாலெட்ஜ் 15: உள்ளங்கையில் அனிமேஷன்!

டெக் நாலெட்ஜ் 15: உள்ளங்கையில் அனிமேஷன்!
Updated on
2 min read

அனிமேஷன், கிராஃபிக்ஸ் என்றாலே எல்லாருக்கும் குதூகலம்தான். முன்பு துறை சார்ந்த நிபுணர்கள் மட்டுமே அனிமேஷன் உருவாக்க முடியும் என்றிருந்த நிலை தற்போது மாறிவிட்டது. அனிமேஷன் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கென பிரத்யேக செயலிகளும் மென்பொருள்களும் வந்துவிட்டன. அந்த வகையில் எளிமையாகவும் புதுமையாகவும் அனிமேஷனைப் பழகிக் கொள்ள உதவுகிறது, ‘ஃபிளிப் எ கிளிப்’ (Flip a clip).

சுயமாகக் கற்றல்: ஓவியங்களை வரைந்து, அவற்றைத் தொகுத்து காணொளியாக ஓடவைப்பது அனிமேஷன். பாரம்பரிய அனிமேஷன், அனிமே (Anime), 2டி, 3டி, ஸ்டாப் மோஷன், மோஷன் கிராஃபிக்ஸ் என அனிமேஷன் பல வகைப்படும். கார்ட்டூன், திரைப்படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த அனிமேஷன் பணிகள் தற்போது விளையாட்டு, விளம்பரம், கல்வி எனப் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

அனிமேஷன் மீது ஆர்வம் கொண்டவர்கள் கூகுள் ‘பிளே ஸ்டோர்’ அல்லது ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ தளங்களிலிருந்து ‘Flip a clip’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இச்செயலியைப் பயன்படுத்தக்கட்டணம் இல்லை. செயலியைத் திறந்தவுடன் அனிமேஷன் பற்றிய காணொளி ஒன்று ஓடுகிறது.

இதில் எளிமையாக அனிமேஷன் கற்றுக்கொள்வது எப்படி?, ‘ஃபிரேம்’ என்றால் என்ன?, படம் வரைவதற்குப் பயன்படுத்தும் பேனா, பென்சில் கருவிகள் பற்றிய விளக்கம், அனிமேஷன் உருவாக்குவது, இறுதியாக அனிமேஷன் சேர்த்த படைப்பை எப்படி ‘அவுட்’ எடுப்பது என அனைத்தும் விளக்கப்படுகிறது.

அடிப்படைக் கருவிகள்: புதிய புராஜெக்ட்டை உருவாக்க ‘நியூ’ என்கிற பொத்தானை அழுத்த வேண்டும். திரையில் காணப்படும் வெள்ளைத் தாள் போன்ற பகுதி ‘வொர்க் ஸ்பேஸ்’ எனப்படுகிறது. இந்த இடத்தில்தான் ஓவியங்களை வரைந்து, இசைத் துணுக்குகள் சேர்த்து, நேரத்தை செட் செய்து, அனிமேஷன் சேர்த்து, தொகுத்து இறுதி படைப்பை ‘அவுட்’ எடுக்க வேண்டும்.

தொழில்முறை அனிமேஷன் மென்பொருளில் இருக்க வேண்டிய முக்கியக் கருவிகள் அனைத்தும் இச்செயலியில் உள்ளன. பத்துக்கும் மேற்பட்ட ‘பிரஷ்’ வகைகள், குறிப்பிட்ட பகுதியை நீக்க தேவையான ’எரேசர்’, குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து மெருகேற்ற ‘மார்க்கர்’, எழுத்துகளைச் சேர்க்க உதவும் ‘டெக்ஸ்ட்’ போன்ற கருவிகளும் இருக்கின்றன.

‘ஃபிரேம்ஸ்’ அடிப்படையில் ஒவ்வோர் ஒளிப்படமாக உருவாக்கி, இசை சேர்த்து, தொகுத்து அனிமேஷன் உருவாக்கலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்தி எளிமையாக அனிமேஷன் உருவாக்குவது தொடர்பான பயிற்சி காணொளிகள் யூடியூபிலும் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தியும் அனிமேஷன் கற்கலாம்.

இவை தவிர தேவைக்கு ஏற்ப வேறு ஒளிப்படங்களையும், காணொளிகளையும் சேர்த்து அனிமேஷன் உருவாக்கலாம். அனிமேஷன் வேலைப்பாடுகளை இன்ஸ்டகிராம், யூடியூப், ஃபேஸ்புக் எனப் பதிவிடப்படும் தளத்தின் தேவைக்கு ஏற்ப அளவிலும், தரத்திலும் மாற்றங்களைச் செய்யலாம்.

‘GIF’ முறையிலும், வழக்கமான ‘MP4’ முறைகளில் அனிமேஷனை ‘அவுட்’ எடுத்துப் பகிரலாம். திறன்பேசியிலேயே சில நிமிடங்களில் எளிமையான அனிமேஷன் படைப்புகளை உருவாக்க முடியும் என்பதால் அனிமேட்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது இச்செயலி.

அனிமேஷன் வேலைகள்: கடந்த சில ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ச்சி கண்ட பல துறைகளில் அனிமேஷன் துறையும் ஒன்று. வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் அனிமேஷன் துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் சான்றிதழ்படிப்புகளைப் படிக்கலாம். தொழில்முறை அனிமேஷனைத் தெரிந்துகொள்ள ‘மாயா’, ‘பிளெண்டர்’ போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். இவை தவிர இன்ஸ்டகிராம், யூடியூப் போன்று சமூக வலைதளப் பயன்பாட்டுக்காகவும், தனிப்பட்ட வேலை களுக்காகவும் அனிமேஷன் உருவாக்க விரும்புபவர்கள் ‘Flip a clip’ போன்றசெயலிகளைப் பயன்படுத்துவதே போது மானது.

(நாலெட்ஜ் அறிவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in