

ஒரு விளையாட்டுச் செயலி என்ன செய்யும்? நண்பர்களுடன் சேர்ந்து விளையாடவும் பயணங்களின்போது பொழுதுபோக்கவும் பயன்படும். ஆனால், கற்றலையும் விளையாட்டையும் சேர்த்து சுவாரசியமாக வழங்குகிறது ‘செஸ் - பிளே அண்ட் லேர்ன்’ (Chess - play and learn) செயலி. உலக செஸ் விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பமான செயலி இது. இதைப் பயன்படுத்ததுவதும் எளிது. செஸ் விளையாட்டின் அறிமுகம் முதல் சவாலான போட்டிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியது இந்த ‘செஸ் - பிளே அண்ட் லேர்ன்’ செயலி.
அனைவருக்குமான செயலி: பிரபல செஸ்.காம் தளத்தின் தயாரிப்பான ‘செஸ் - பிளே அண்ட் லேர்ன்’ செயலியை ஐம்பது லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கூகுளின் ‘பிளே ஸ்டோர்’, ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ தளங்களிலிருந்து இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். செஸ் செயலியைப் பயன்படுத்த கட்டணம் கிடையாது. குழந்தைகள், பெரியவர்கள் தொடங்கி செஸ் விளையாட்டில் ஆரம்ப நிலையில் இருப்பவர் முதல் கிராண்ட் மாஸ்டர் வரை என அனைவருக்குமானது இந்த செஸ் செயலி. செயலியைப் பதிவிறக்கம் செய்தவுடன் முதலில் உங்களுக்கான கணக்கைத் தொடங்க வேண்டும்.
செயலிக்குள் நுழைந்தவுடன் இணையவழி விளையாட்டு, தினசரி சவால், செஸ் புதிர், கணினியோடு விளையாட்டு, தினசரி செஸ் பாடம் என முகப்புப் பக்கத்தில் வரிசையாகத் தலைப்புகள் தொகுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான போட்டிகள் ‘ராபிட்’ எனப்படும் செஸ் முறையைப் பின்பற்றியதாக இருக்கக்கூடும். எனினும் சில போட்டிகளை ‘பிளிட்ஸ்’ முறையிலும் விளையாடலாம். பயனர்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்து விளையாடலாம். இணையவழி விளையாட்டில், உலகின் ஏதாவதொரு பகுதியைச் சேர்ந்த ஒரு செஸ் ஆர்வலருடன் 10 நிமிடங்களுக்குப் போட்டி நடத்தப்படும்.
ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் வெற்றி பெறுபவருக்குச் சில புள்ளிகள் சேர்த்தும், தோல்வி அடைபவருக்குச் சில புள்ளிகள் குறைத்தும் வழங்கப்படும். இதன் மூலம் ஒருவருடைய விளையாட்டுத் திறனை அறியலாம். அது மட்டுமல்ல ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் விளையாட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்த விளக்கத்தையும் இந்தச் செயலி வெளியிடும். அதில் சரியாகக் காய் நகர்த்திய இடம், தவறு நேர்ந்த இடம், சரி செய்துகொள்ள வேண்டிய ஆட்ட நுணுக்கம் ஆகியவை அடங்கிய விமர்சனக் குறிப்புகள் (Game Review) பயனர்களுக்கு வழங்கப்படும்.
ஆட்ட நுணுக்கங்கள்: ஆட்டக் குறிப்புகள் வழங்குவது மட்டுமல்ல ‘Self Analysis’ எனப்படும் சுய மதிப்பீட்டுக்கான வசதியையும் இந்தச் செயலி வழங்குகிறது. போட்டி முடிந்த பிறகு, நீங்கள் விளையாடிய விதத்தை ஆராய்ந்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டு சுயமதிப்பீடு செய்துகொள்ள இது உதவும். செஸ் பாடம் பகுதியில் காய் நகர்த்தலுக்கான பாடம் கற்றுத் தரப்படுகிறது. இதில் போட்டியின் தொடக்கத்தில் ஆடக்கூடிய ஆரம்ப நகர்த்தல், தோல்வியைத் தவிர்க்க அல்லது டிரா செய்ய உதவும் தடுப்பு ஆட்டம் ஆகியவற்றுடன் நிறைய பயிற்சி ஆட்டங்களையும் இந்தப் பகுதி கொண்டுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாட விரும்புவோர் போட்டிக்கான அழைப்பு இணைப்பை நண்பருக்கு அனுப்பலாம். அவர் இணையும்பட்சத்தில், இருந்த இடத்திலிருந்தே செஸ் போட்டிகளில் விளையாடலாம். தொடர்ந்து செஸ் விளையாட்டில் பயிற்சி பெற விரும்புவோர், ஆட்ட நுணுக்கங்களைச் செம்மையாக்கிக்கொள்ள இந்த செஸ் செயலி பயனுள்ளதாக இருக்கும்.
(நாலெட்ஜ் அறிவோம்)