டெக் நாலெட்ஜ் 10: இனி கையிலேயே வெர்ச்சுவல் ரியாலிட்டி!

டெக் நாலெட்ஜ் 10: இனி கையிலேயே வெர்ச்சுவல் ரியாலிட்டி!
Updated on
2 min read

இந்தத் தொழில்நுட்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அது, ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ என்றழைக்கப்படும் மெய்நிகர் உண்மை. பொழுதுபோக்கு, விளையாட்டு துறைகளில் பயன்படுத்தத் தொடங்கி, தற்போது மருத்துவம், கல்வி எனப் பல்வேறு தளங்களில் ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிசயமாகப் பார்க்கப்பட்டது இது. தற்போது இதன் அனுபவத்தைப் பயனர்களின் திறன்பேசிக்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது கூகுளின் ‘கார்ட்போர்டு’ (Cardboard) செயலி.

‘வியூயர்’ தேவை: ஆண்ட்ராய்டு திறன்பேசியில் கூகுள் ‘பிளே ஸ்டோர்’ அல்லது ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ தளங்களிலிருந்து ‘கார்ட்போர்டு’ செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். பயனர்கள் இச்செயலியைக் கட்டணமின்றி பயன்படுத்தலாம். செயலியைத் திறந்தவுடன் ‘வியூவர்’ (Viewer) என்ற கருவியுடன் உங்களது கார்ட்போர்டு கணக்கை இணைக்கச் சொல்லி செய்தி வரும். இதில் ‘வியூவர்’ என்பது ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ அனுபவத்தை உணர உதவும் கண்ணாடி அல்லது ‘காகிள்ஸ்’ போன்றதொரு கருவி. தொழிற்முறை ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி காகிள்ஸ்’ விலை உயர்ந்ததாக இருக்கும்.

ஆனால், ‘கார்ட்போர்டு’ செயலியுடன் இணைத்துப் பயன்படுத்த தேவையான இந்த ‘வியூவர்’ கருவியை ‘DIY’ முறையில் சொந்தமாகவும் செய்யலாம். குறைந்த விலைக்கு சந்தையிலிருந்தும் வாங்கலாம். குறைந்தபட்சம் ரூ.600 முதல் இந்த ‘வியூவர்’ கருவி சந்தையில் விற்பனையாகிறது. இப்படி இதைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கார்ட்போர்டு, லென்ஸ், மேக்னட், எலாஸ்டிக் பேன்ட், கொக்கி போன்ற பொருள்கள் இருந்தால் போதும் வீட்டிலேயே ‘வியூவர்’ கருவியைத் தயார் செய்யலாம். ‘வியூவர்’ கருவியைத் தயார் செய்வதற்கான தெளிவான விளக்கத்தை ‘கார்ட்போர்டு’ செயலியின் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பயன்படுத்துவது எளிது: ‘வியூவர்’ கருவி தயாரானவுடன் முதலில் உங்களுடைய திறன்பேசியின் சில அம்சங்களைப் பயன்படுத்த ‘கார்ட்போர்டு’ செயலி அனுமதி கோரும். திறன்பேசியின் கேமராவைப் பயன்படுத்த அனுமதி தந்தவுடன் ‘கார்ட்போர்டு’ செயலியைப் பயன்படுத்தத் தொடங்கலாம். நீங்கள் பார்க்க விரும்பும் காணொளி, விளையாட்டைத் தேர்வு செய்து, திறன்பேசியை ‘வியூவர்’ கருவியில் பொருத்தி ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ அனுபவத்தைப் பெறலாம். ‘கார்ட்போர்டு’ செயலியின் வழியே அல்லது வேறு ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, இரண்டையும் இணைத்து ‘வெர்ச்சுவல்’ அனுபவத்தைப் பெறலாம்.

‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ அனுபவத்தை மதிப்பிடும் வகையில் ‘கார்ட்போர்டு’ ஆரம்பநிலை அனுபவத்தைதான் தருகிறது. எனினும் குறைந்த செலவில், வெறும் திறன்பேசியும் வியூயர் கருவியையும் பயன்படுத்தி சாமானியரும் ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ அனுபவத்தை உணரலாம் என்கிற முறையில் ‘கார்ட்போர்டு’ ஆக்கப்பூர்வமான செயலி எனலாம். ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’, ‘ஆகுமென்டட் ரியாலிட்டி’, ‘மிக்ஸ்டு ரியாலிட்டி’ ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ‘மெட்டாவெர்ஸ்’ எனும் மெய்நிகர் உலகம், கடல் போல விரிந்துகிடக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பப் புள்ளியே ‘கார்ட்போர்டு’. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வித்தியாசமான அனுபவத்தைப் பெறவும், ‘வெர்ச்சுவல்’ சார்ந்து தொடர்ந்து இயங்கவும் விருப்பமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப பாய்ச்சலுக்குப் பிறகு இது போன்ற ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ தொடர்பான வேலைவாய்ப்புகள் இரட்டிப்பாகி உள்ளன. மென்பொருள் உருவாக்குநர், வடிவமைப்பாளர், செயலி உருவாக்குநர், ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ உதவியாளர், மேற்பார்வையாளர் என இத்துறையில் இளைய தலைமுறை யினருக்கு சுவாரசியமான பல வேலைவாய்ப்புகளும் இருக்கின்றன.

( நாலெட்ஜ் அறிவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in