

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மனித வாழ்க்கையில் இசை ஓர் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. நாட்டுப்புற இசை, திரையிசை, சுயாதீன இசை எனப் பல வகைகளில் பரிணமிக்கும் இசை, தனி மனித வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முறையாக இசையைக் கற்றுக்கொள்ள இசைப் பள்ளிகளுக்குச் சென்றது அந்தக் காலம். டிஜிட்டல் யுகத்தில் இணையம் வழியே இசைக்கருவிகளைக் கற்றுக்கொள்வதுதான் டிரெண்டிங். அந்த வகையில் இசை ஆர்வலர்களுக்கு ஓர் அட்டகாசமான செயலிதான் ‘யுசிசியன்’ (YOUSICIAN).
இணையத்தில் இசை: ‘யுசிசியன்’ செயலியை கூகுளின் ’பிளே ஸ்டோர்’ அல்லது ஆப்பிளின் ’ஆப் ஸ்டோர்’ தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கிடார், பியானோ, உகுலேலே (கிடார் போன்ற தோற்றத்தில் இருக்கும் சிறிய இசைக்கருவி), பாஸ் கிடார் போன்ற இசைக்கருவிகளையும், பாடுவதற்கான அடிப்படையையும் சொல்லித் தருகிறது ’யுசிசியன்’ செயலி.
உங்களுக்கான ஒரு கணக்கைத் தொடங்கியதும், முதலில் விருப்ப இசைக்கருவியைத் தேர்வுசெய்ய வேண்டும். அடுத்ததாகப் பாரம்பரியம், ராக், பாப், ஜாஸ், ஹிப்-ஹாப், எலெக்ட்ரானிக், ஃபோக் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் இசை வகைகளிலிருந்து விருப்பமானதைத் தேர்வுசெய்ய வேண்டும்.
’யுசிசியன்’ செயலியின் இசைப் பாடங்கள் இசைக்கருவி வாசிப்பு குறித்து அறிமுகம் இல்லாதவர்கள், ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்கள், இடைநிலையில் வாசிக்கத் தெரிந்தவர்கள், இசையில் தேர்ச்சி பெற்றவர்கள் என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பயனர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப இசைப் பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்ல, பயனரின் இசை ஆர்வத்தையும் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்கிறது ’யுசிசியன்’ செயலி. அதாவது, பொழுதுபோக்கிற்கு வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டுமா? முறையாக வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டுமா என்பது போன்று 6 கேள்விகள் கேட்கப்படுகின்றன. பயனரின் தேர்வுக்கு ஏற்ப பாடங்கள் வழங்கப்படுகின்றன.
பயிற்சி அவசியம்: முதல் கட்டமாக வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு வகுப்புகள் நிர்ணயம் செய்யப்படும். இப்பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் எதுவுமில்லாமல் முதல் ஏழு நாள்களுக்கு இசைப் பாடங்களைக் கற்கலாம். அதன் பிறகு, குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ‘யுசிசியன்’ செயலியைப் பயன்படுத்தலாம். ஏழு நாள் பயிற்சிக்குப் பிறகு ஒரு மாதம், ஓர் ஆண்டு என்ற கணக்கில் கட்டணம் செலுத்தி தொடர்ந்து ‘யுசிசியன்’ செயலியைப் பயன்படுத்தலாம்.
கட்டணம் செலுத்துபவர்களுக்கு இசைப் பாடங்களில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இசை பாடங்களைக் கற்றுக்கொள்ள விருப்ப இசைக் கருவியுடன் சேர்ந்து, திறன்பேசி அல்லது டேப் இருந்தால்போதும் ’யுசிசியன்’ வழியே பயிற்சியைத் தொடங்கலாம்.
இசைப் பயிற்சியில் வாசிப்பு குறித்த பரிந்துரைகள், விமர்சனங்களும் பயனருக்கு வழங்கப்படுகின்றன. தேர்ந்த இசைக் கலைஞர்களால் தொகுக்கப்பட்டிருக்கும் இசைப் பாடங்கள் படிப்பதற்கு எளிதாகவும், சுவாரசியமாகவும் இருப்பது இதன் சிறப்பம்சம். வாசிப்பின் ஒவ்வொரு கட்டத்தையும் முன்னேற்றத்தையும் இந்தச் செயலி வழியே பயனரால் பின்தொடர முடியும். தொழிற்முறை இசைக் கலைஞராக அல்லாமல் சுய விருப்பத்துகாக இசைக் கருவிகளை வாசிக்க நினைப்பவர்கள் அறிமுக இசைப் பயிற்சியைப் பெற இந்தச் செயலியைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
(நாலெட்ஜ் அறிவோம்)