டெக் நாலெட்ஜ் 06 - பழகலாம், வரையலாம் ஓவியம்

டெக் நாலெட்ஜ் 06 - பழகலாம், வரையலாம் ஓவியம்
Updated on
2 min read

வரலாற்றின் வெவ்வேறு காலகட்டத்தில் குகைகள், சுவர்களில் ஓவியங்களை வரையத் தொடங்கி, காகிதம், கணினி என்று பரிணமித்து இன்று திறன்பேசியில் ஓவியங்களை வரையும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன. ஓவியங்களை வரைய தனித்தனியாகப் பொருள்கள் தேவைப்பட்ட காலம் மாறி இப்போது வரைவதற்கென திறன்பேசியில் பிரத்யேக கருவிகள் வந்துவிட்டன. ஒளிப்படங்களை எடிட் செய்ய, காணொளிகளைத் தொகுக்க ஏராளமான செயலிகள் இருப்பதைப் போல வரைவதற்காகப் பல செயலிகளும் அணிவகுக்கின்றன. என்றாலும் அவற்றுள் முதன்மையானது ‘ஸ்கெட்ச்புக்’.

‘ஆட்டோடெஸ்க்’ எனும் நிறுவனத்தின் தயாரிப்புதான் ‘ஸ்கெட்ச்புக்’ செயலி. இதை ஆன்ட்ராய்டின் ‘கூகுள் பிளே-ஸ்டோர்’ அல்லது ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஸ்கெட்ச்புக் செயலியைப் பயன்படுத்த கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

இலவசப் பதிப்பிலேயே வரைவதற்கான ஏராளமான அம்சங்கள் ஸ்கெட்ச்புக்கில் உள்ளன. எனினும் தொழில்முறை தேவைக்காகப் பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம். இலவசப் பதிப்பில் அல்லாத சில சிறப்பம்சங்கள் கட்டண முறையில் உள்ளன.

என்னென்ன வசதிகள்? - திறன்பேசி, கணினி, டேப் என எதிலும் ஸ்கெட்ச்புக்கைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். செயலியைத் திறந்தவுடன் புது ஸ்கெட்ச்சைத் தொடங்கி அதில் வரைய தொடங்கிவிடலாம். முதலில், வரைய இருக்கும் கேன்வாஸின் அளவைத் தேர்வு செய்ய வேண்டும். தேவை இருப்பின் ஒளிப்படங்களைப் பதிவேற்றியும் வரையலாம். பென்சில், மார்க்கர், பெயிண்ட், பேஸ்டல் வண்ணங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பிரஷ் வகைகளைப் பயன் படுத்தி ஓவியங்களை வரைய முடியும்.

கோடு, சதுரம், வட்டம் போன்ற வடிவங்களைத் தேர்வு செய்து தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் முடியும். ‘ஃபோட்டோஷாப்’ மென் பொருளைப் போல ஸ்கெட்ச்புக் செயலியில் ’லேயர்களை’ உருவாக்கி வரைய முடியும். இதனால், ஓவியத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை நீக்குவதும் சேர்ப்பதும் எளிது. ஓர் ஓவியத்தை வரைந்து முடித்த பிறகு, எழுத்து களைச் சேர்ப்பதற்கான வசதியும் ஸ்கெட்ச்புக்கில் உள்ளது.

டிஜிட்டல் ஓவியங்கள் - டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பிறகு தொழில்முறை ஓவியங்களுக்கான தேவை சற்று குறைந்திருக்கிறது. விளம்பரப் படங்கள், திரைப்படங்களுக்கான போஸ்டர்கள், அழைப்பிதழ்கள் எனப் பெரும்பாலான வேலைகளுக்கு டிஜிட்டல் ஓவியங்களே பயன்படுத்தப்படுகின்றன.

பாரம்பரிய முறையில் ஓவியம் வரைய போர்டு, காகிதம், பெயிண்ட், பிரஷ் ஆகியவற்றை வாங்க நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், டிஜிட்டல் ஓவியங்ளில் இந்தப் பொருள் செலவு இல்லை. ஸ்கெட்ச்புக் வழியே கைப்பட வரைய முடியும். ஓவியம் வரைவதற்கான பேனா போன்ற கருவியைப் பயன்படுத்தியும் வரையலாம். கேன்வாஸ், போர்டில் வரைவது போன்ற அனுபவத்தை ஸ்கெட்ச்புக்கில் வரையும்போதும் பெறலாம் என்கிறார்கள் பயனர்கள்.

ஓவியர்கள் மட்டுமல்ல, ஓவியம் வரைய கற்றுக்கொள்பவர்களும் ஸ்கெட்ச்புக் செயலியை எளிதாகப் பயன்படுத்தலாம். மேலும் கட்டிடக் கலை நிபுணர், கட்டிட உள்புறவடிவமைப்பாளர் ஆகியோர் டிசைன்களை உருவாக்கவும் ஸ்கெட்ச்புக் செயலி பயன்படுகிறது. இணையம் பரவலானதிலிருந்தே கடந்த சில ஆண்டுகளாக வரைகலை வடிவமைப்பு துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எனவே, அனிமேஷன், கிராஃபிக்ஸ் உருவாக்கம், இணையதள உருவாக்கம் போன்ற துறைகளிலும் டிஜிட்டல் ஓவியர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் ஓவியங்களை வரைந்து பழகவும், தொழில்முறை தேவைக் காகப் பயன்படுத்தவும் ஸ்கெட்ச்புக் செயலி ஒரு நல்ல தேர்வு!

(நாலெட்ஜ் அறிவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in