டெக் நாலெட்ஜ் 04 - வெட்டுவதும் ஒட்டுவதும் எளிது!
இன்ஸ்டகிராமைத் திறந்தால் ‘ரீல்ஸ்’, யூடியூபைத் திறந்தால் ‘ஷார்ட்ஸ்’, வாட்ஸ்-அப் திறந்தால் ‘ஸ்டேட்டஸ்’ என எங்குப் பார்த்தாலும் காணொளித் துணுக்குகளைக் காண முடிகிறது. பிடித்த ஒளிப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெட்டி, ஒட்டிப் படத்தொகுப்பு செய்யத் திறன்பேசி செயலிகள் பல வந்துவிட்டன. சாமானியரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் இந்தச் செயலிகளில் முன்னணியில் இருப்பது ‘இன்ஷாட்’ (InShot).
என்ன செய்யலாம்? - ஒவ்வொரு புதுப் படைப்பை அறிமுகப்படுத்தும் போதும், திறன்பேசி நிறுவனங்கள் அப்படைப்பின் மீது ‘கேமரா கிளாரிட்டி’யைக் கூட்டிக்கொண்டே செல்கின்றன. இதனால், திறன்பேசி கேமராவின் வழியே நல்ல ஒளிப்படங்கள், காணொளிகளை எடுக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் சொந்தமாக கேமரா வைத்திருந்தால்தான் ஒளிப்படக்காரர் என்கிற நிலை இருந்தது.
இன்றோ அது மாறி திறன்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒளிப்படக்காரர்களாக அவதாரம் எடுக்கின்றனர். இப்படித் திறன்பேசியில் பதிவுசெய்யப்படும் ஒளிப்படங்கள், காணொளிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ‘படத்தொகுப்பு’ (Editing) செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியம்.
பொதுவாகப் ‘படத்தொகுப்பு’ வேலை என்பது திரைப்படங்களிலும் விளம்பரத் துறையிலும் சில மென்பொருள்களின் உதவியோடு கைதேர்ந்த நிபுணர்கள் மேற்கொள்ளும் வேலை. அவற்றுக்கு மாற்றாகத் திறன்பேசியிலேயே எளிமையாகப் படத்தொகுப்பு செய்ய உதவுகிறது ‘இன்ஷாட்’ செயலி. டிசைன்களுக்கு எப்படி ‘கேன்வா’ ஒரு டெம்ப்ளேட்டுகளின் உலகமோ அதைப் போல ஒளிப்படங்களின் அழகை மெருகேற்ற, படத்தொகுப்பு செய்ய, காணொளிகளை உருவாக்க ‘இன்ஷாட்’ செயலியில் ஏராளமான அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
பயன்படுத்த எளிது: திறன்பேசியில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘இன்ஷாட்’ செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய வேண்டும். தேவையான ஒளிப்படங்கள், காணொளிகளைத் தேர்வுசெய்து புது புராஜெக்ட்டைத் தொடங்க வேண்டும். காணொளிகளை வெட்டி ஒட்ட, ஒளிப்படங்களைச் சேர்க்க, எடுக்க, இசைத் துணுக்குகளைச் சேர்க்க எனப் படத்தொகுப்பு செய்வதற்கான சில கருவிகள் திரையில் தோன்றும்.
தேவையான ஒளிப்படங்கள், படத்தொகுப்புக் கருவிகளைப் பயன்படுத்தி விருப்பத்துக்கு ஏற்ப காணொளிகளை உருவாக்கலாம். தொடங்கிய ஒரு புராஜெக்ட்டைத் திறன்பேசியில் சேமிக்க வேண்டும். ஏனெனில் மீண்டும் தேவைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யலாம்.
இன்ஷாட் செயலியை முதல் முறை திறக்கும்போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கருவிகளின் பயன்பாட்டு முறைகளை விளக்கும் குறுஞ்செய்தி திரையில் தோன்றும். ஒரு சில முறை பயன்படுத்தினால், பிறகு படத்தொகுப்பு வேலை நிச்சயம் எளிமையாக மாறும். தொழில் முறை பயன்பாட்டுக்காகச் சந்தையில் இருக்கும் படத்தொகுப்பு மென்பொருள்களின் முக்கிய அம்சங்களை இச்செயலி கொண்டிருப்பது இதன் தனிச் சிறப்பு.
ஒருவரின் தனிப்பட்ட தேவைக்காகத் தயாரிக்கப் படும் காணொளிகளை இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடலாம். இதைத் தவிர இசைப்பாடல்கள், விளாக் (Vlog) எனப்படும் காணொளி வலைப்பூ உருவாக்கவும் இன்ஷாட்டைப் பயன்படுத்துவது எளிது. விலை உயர்ந்த கணினி, மென்பொருள், இணையம் போன்றவற்றின் தேவையின்றித் திறன்பேசியிலேயே படத்தொகுப்பைச் செய்யலாம் என்பதால், இது இளைய தலைமுறையினரின் விருப்பச் செயலியாக இருக்கிறது.
படத்தொகுப்பின் அடிப்படையை இன்ஷாட் செயலியில் கற்றுக்கொண்டால் பின்பு மென் பொருள்களை கற்றுக்கொள்ளும்போது வேலை நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது இன்னும் எளிமையாக இருக்கும். கூகுள் பிளே ஸ்டோரின் ‘உபயோகமான செயலிகள்’ பட்டியலில் எப்போதும் டாப் இடங்களை இந்தச் செயலி பிடித்துவருகிறது. ஆக, ‘இன்ஷாட்’ செயலி, படத்தொகுப்பு வேலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி.
( நாலெட்ஜ் அறிவோம்)
