

தமிழ் மொழித் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், யூடியூப் காணொளிகள் ஆகியவை இந்தியா மட்டுமல்ல, நாடு கடந்தும் மிகப் பிரபலம். அதற்கு முக்கியக் காரணம், ‘சப்டைட்டில்’. திரையில் தோன்றும் தமிழ் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சப்டைட்டில்களால் தமிழ்மொழி அறியாதவரும், செவித்திறன் குறைபாடு உடையோரும் படங்களைப் புரிந்துகொள்ளலாம். ஆங்கில மொழிப் புலமை, ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை அறிந்தவர்களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தருகிறது ‘சப்டைட்டில்’ துறை.
கவனிக்கப்படும் ‘சப்டைட்டில்’ - சமூக வலைதளங்களில் இன்று காணொளி காட்சிகளுக்கு தனி இடமுண்டு. தகவல்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் காணொளிகளையே மக்கள் விரும்புகின்றனர். சமூக வலைதள பயனர்கள் பெரும்பாலானோர் 3 நிமிடங்களுக்கு மேல் ஓடும் காணொளியை முழுமையாகப் பார்ப்பதில்லை.
ஓடிடி தளத்தின் வருகைக்குப் பிறகு, தமிழ் மட்டுமல்ல, பிற மொழித் திரைப்படங்கள், காணொளிகளையும் தேடிப் பார்க்கின்றனர். தமிழ்ப் படங்கள் வெளியூர் செல்வதும், பிற மொழித் திரைப்படங்கள் ஆங்கில மொழி சப்டைட்டிலுடன் உள்ளூரில் திரையிடப்பட்டு, ஓடிடியில் வெளியாவதும் வழக்கமாகிவிட்டது.
தமிழ்நாட்டில் மலையாள மொழிப் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பது ஊரறிந்தது. இதற்கு மொழி ஒரு தடையல்ல. காரணம், ‘சப்டைட்டில்’. இந்திய திரைத்துறையில் தற்போது பிரபலமாக இருக்கும் ‘பான் - இந்தியா’ கலாச்சாரத்தில் ‘சப்டைட்டில்’ வேலைகள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. பல வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது.
கோலிவுட்டைப் பொறுத்தவரை மொழியாக்கம், சப்டைட்டில் துறையில் ஆண்களைவிட பெண்கள் பலர் இயங்கி வருகின்றனர். இப்பணிகளில் ஈடுபட ஒருவருக்கு ஆர்வத்தோடு, மொழிப் புலமை, பொருள் மாறாமல் மொழியாக்கம் செய்யும் திறன் இருப்பது அவசியம். சப்டைட்டில் உருவாக்க பல மென்பொருள்கள் இருந்தாலும், ‘சப்டைட்டில் எடிட்’ என்கிற மென்பொருளைப் பயன்படுத்துவது எளிது.
‘சப்டைட்டில் எடிட்’ மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவோ பயன்படுத்தவோ கட்டணம் செலுத்த தேவையில்லை. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த மென்பொருளையே தொழிற்முறை சப்டைட்டில் உருவாக்கத்துக்கும் பலர் பயன்படுத்துகின்றனர்.
கற்க எளிது: யூடியூப் அலைவரிசை வைத்திருப்பவர்கள், ஆவணப் படம் இயக்குபவர்கள், இன்ஃப்ளூயன்சர்கள், காணொளிகள் பதிவிடுவபர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்திப் பார்வையாளர்களைப் பரவலாக்கலாம். இணையத்தில் https://www.nikse.dk/subtitleedit என்கிற தளத்திலிருந்து ‘சப்டைட்டில் எடிட்’ மென்பொருளை கணிணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
‘விண்டோஸ்’ இயங்குப்பொறியில் வேலை செய்யும் இந்த மென்பொருளை ‘ஆப்பிள்’ இயங்குப்பொறியில் பயன்படுத்த முடியாது என்பது இதிலுள்ள ஒரு சிக்கல். எனினும், ஆப்பிளில் இயங்க வைப்பதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
ஒவ்வொரு சப்டைட்டில் புராஜெக்ட்டையும் தனியாகப் பெயரிட்டு சேமித்துக் கொள்ள வேண்டும். புராஜெக்ட்டை திறந்தவுடன், காணொளி ஓடுவதற்கான இடம், மொழியாக்கம் செய்யப்பட்ட எழுத்துகளை இடுவதற்கான இடம் ஆகியவை திரையில் தெரியும்.
ஒலி, எழுத்து வடிவங்கள் ஒத்துப்போகும்படி நேரத்தை ‘செட்’ செய்து, எழுத்துகளைப் பதிவிட்டு, தேவையான ஃபார்மேட்டில் சப்டைட்டில் புராஜெக்ட்டை சேமித்து பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த மொழிப் படங்களையும், காணொளிகளையும் சப்டைட்டில் உதவியோடு நாடு கடந்தும் வியாபாரப் படுத்தலாம் என்பதால் இப்பணி முக்கியத்துவம் பெறுகிறது.
(டெக் நாலெட்ஜ் அறிவோம்)