

ஒருவர் தனது கருத்துகள், கேள்விகள், பதில்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை உலகத்தோடு பகிர யூடியூப், இன்ஸ்டகிராம் எனப் பல காட்சிரீதியிலான சமூகவலைதளங்கள் இருக்கின்றன. ஒலி ஊடகத்தைப் பொறுத்தவரை சமீப காலமாக வானொலிக்கு மாற்றாக ‘பாட்காஸ்ட்’ கலாச்சாரம் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் பேசலாம், பேசிக்கொண்டே இருக்கலாம், இலவசமாகப் பேசலாம், வருமானமும் ஈட்டலாம். இவ்வளவு வசதிகளைக் கொண்ட ‘பாட்காஸ்ட்’ பற்றிய ஒரு அறிமுகம்.
‘பாட்காஸ்ட்’ என்றால் என்ன? -
வானொலி ஒலிபரப்பைப் போன்றதொரு ஒலி ஊடக வடிவம்தான் என்றாலும், பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளைக் கேட்க இணையத்தின் உதவியும் தேவை. ஸ்பாடிஃபை, அமேசான், எனப் பல்வேறு தளங்களிலும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். வானொலியின் நேரலையைப் போல அல்லாமல் தேவையான நேரத்தில், விருப்பமான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளைப் பயனர்கள் தேர்வு செய்து கேட்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். பாட்காஸ்ட் தயாரிப்பவரை ‘பாட்காஸ்டர்’ என்றும் இந்த ஒலி வடிவத்துக்கு ‘பாட்காஸ்டிங்’ என்றும் பெயர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என எந்த மொழியிலும் பாட்காஸ்டிங் செய்யலாம். ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியை ஒருவர் தனியாகத் தொகுத்து வழங்கலாம் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோரோடு இணைந்து குழுவாகப் பேசி நிகழ்ச்சியைத் தயாரிக்கலாம். இலக்கியம், திரைப்படம், விளையாட்டு, மனநலம், மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் என எந்தத் தலைப்பைப் பற்றியதாகவும் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சி அமையலாம். இந்தப் படைப்பைப் பொதுத் தளத்தில் பிறர் கேட்பதற்காகப் பகிரலாம்.
தயாரிப்பது எளிது: பாட்காஸ்ட் படைப்புகளைப் பதிவேற்றம் செய்ய நிறையத் தளங்கள் இருந்தாலும், பயன்படுத்த மிகவும் எளிமையானது ‘ஸ்பாடிஃபை ஃபார் பாட்காஸ்டர்ஸ்’ செயலிதான். முதலில் பேச இருக்கும் தலைப்பு, நிகழ்ச்சியின் கால அளவு, கருத்துகள் ஆகியவற்றைத் தேர்வு செய்து, முன்னரே தயார்ப்படுத்திக் கொள்ளலாம். ஆரம்ப நிலையில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியைப் பதிவு செய்து, தொகுக்கத் திறன்பேசி அல்லது மடிக்கணினி இருந்தால் போதுமானது. எனினும், பாட்காஸ்ட் தயாரிப்புக்கென தொழில்முறை கருவிகளான ‘மைக்’, ‘ரெக்கார்டர்’ ஆகியவை இருக்கின்றன. தேவையிருப்பின் அவற்றைப் பயன்படுத்தலாம்.
பேசி தொகுக்கப்படும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலோ மத்தியிலோ முடிவிலோ இசைத் துணுக்குகளைச் சேர்க்கலாம். இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய இசைத் துணுக்குகளும் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் சுவாரசியத்தைக் கூட்டலாம். தயாரித்து முடித்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியை இனி பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும்.
உங்களுடைய திறன்பேசியில் ‘ஸ்பாடிஃபை ஃபார் பாட்காஸ்டர்ஸ்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அதில் மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்து புது கணக்கைத் தொடங்க வேண்டும். உங்களது பாட்காஸ்ட் நிகழ்ச்சிக்கென ஓர் அலைவரிசையை உருவாக்கி, ஒரு தலைப்பைச் சூட்டி, அதைப் பற்றி சில வரிகளில் விவரியுங்கள். இனி தயாரித்து வைத்திருக்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை அந்த அலைவரிசையில் பதிவேற்றுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை அந்த அலைவரிசையில் தொடர்ந்து பதிவேற்றலாம்.
வருமானம் ஈட்டலாமா? - பாட்காஸ்ட் மூலம் வருமானம் ஈட்ட முடியுமா? முடியும், அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, ஸ்பாடிஃபை தளத்திலேயே உங்களுடைய படைப்புகளுக்கான விளம்பரங்களைப் பெறலாம். இதற்கு பாட்காஸ்டர்கள் முதலீடாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிகழ்ச்சியைக் கேட்டு ரசிக்கும் பயனர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாட்காஸ்டர்களுக்கான வருமானத்தை ஸ்பாடிஃபை வழங்குகிறது.
இரண்டாவது, ஸ்பாடிஃபை அல்லாத மற்ற சமூக வலைதளங்களில் உங்களது படைப்புகளைப் பகிர்ந்து வருமானம் ஈட்டலாம். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற பிற தளங்களுக்கு ஏற்ப பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் வடிவத்தை மாற்றி அதில் பகிர்ந்துகொள்ளலாம். தளத்துக்கு ஏற்பப் பயனர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிலும் வருமானம் ஈட்ட முடியும்.
(டெக் நாலெட்ஜ் அறிவோம்)