

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு பேசுவதற்கு மட்டும் என்றிருந்தது கைபேசி. இன்று திறன்பேசியாக உருவெடுத்த பின், அது இல்லாத மனிதர் ஒரு கையை இழந்ததுபோல் உணர்வதாக மாறிவிட்டது. கூகுள் பிளே ஸ்டோரில் அணிவகுக்கும் நவீன செயலிகள் நம்முடைய வேலையை எளிதாக்கி வருகின்றன, வாழ்க்கையை மேம்படுத்துகின்றன.
கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற செயலிகளில் சிறந்ததைக் கற்கவும் பயன்படுத்தவும் தெரிந்துகொள்வது இன்று அவசியமாகிவிட்டது. அந்த வகையில் நமக்கு உதவிக்கரமாக இருக்கும் முக்கிய செயலிகளைப் பற்றி வாரம் ஒவ்வொன்றாக அலசுவோம். இந்த வாரம் ‘கேன்வா’.
பேசும் படம்: ஒரு தகவலை இணையத்தில் பார்ப்பதற்கு எழுத்துகள் எவ்வளவு முக்கியமோ அதைப் போல படங்களும் மிக முக்கியம். ஒரு செய்தியைச் சொல்ல, தகவலைப் பரிமாற, வேலைக்கு விண்ணப்பிக்க, மீம்ஸ் உருவாக்க, இணையதளத்தை வடிவமைக்க எனப் பல்வேறு விஷயங்களுக்கும் ஒளிப் படங்கள் தேவை.
இந்த வேலைகளைச் செய்ய தொழில்முறை மென்பொருள்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. அச்சு, டிஜிட்டல் எனப் பயன்பாட்டுத் தளத்துக்கு ஏற்ப எழுத்துகளையும் படங்களையும் சேர்த்து மென்பொருளின் உதவியோடு படைப்புகளை உருவாக்குவதுதான் ‘கிராஃபிக் டிசைன்’ எனப்படும் வரைகலை வடிவமைப்பு. இந்த வேலைக்கென தனிப் படிப்புகள், மென்பொருள்கள் இருக்கின்றன.
என்றாலும் தொடக்கநிலை அளவிலான அறிமுகத்தையும் அனுபவத்தையும் தரும் செயலிதான் ‘கேன்வா’. வரைகலை வடிமைப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாதவரும் ‘கேன்வா’ மூலம் எளிதில் வேலையை முடித்துக் கொள்ள முடியும். இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை என்பது மற்றொரு சிறப்பம்சம்.
எப்படிப் பயன்படுத்துவது? - https://www.canva.com/ என்கிற தளத்தில் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘கேன்வா’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்து கணக்கைத் தொடங்கலாம். இதன் பிறகு இந்தத் தளத்தில் நீங்கள் பதிவிடும், உருவாக்கும் படைப்புகள் அனைத்தும் ஒரே கணக்கில் சேமிக்கப்படும்.
தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Learn’ என்கிற பகுதியை ‘கிளிக்’கினால் போஸ்டர், பேனர் உருவாக்குவதற்கான செயல்முறை விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றி உங்கள் படைப்புகளை உருவாக்கலாம்.
என்ன செய்யலாம்? - ‘கேன்வா’ என்பது ‘டெம்ப்ளேட்’களின் உலகம். சுயவிவரக் குறிப்பு (Resume), அழைப்பிதழ், சார்ட், இணையதளம், விளம்பரப் பலகை வடிவமைப்பு, சமூக வலைதளத்துக்கான படைப்புகள் என அனைத்துக்குமான ‘டெம்ப்ளேட்’கள் கேன்வாவில் உள்ளன. பெரும்பாலான டிசைன்களைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை என்றாலும், குறிப்பிட்ட சில டிசைன்களுக்குக் கட்டணம் உண்டு. நம்முடைய தேவையைப் பூர்த்திசெய்யும் அளவிலான தரமான டிசைன்களை இலவசமாகவே பெறலாம்.
காட்சி ஆவணங்கள், அச்சு, டிஜிட்டல் தளத்துக்கான டிசைன்கள், விளம்பரத் துறைக்கு தேவையான டிசைன்கள் போன்றவற்றை ‘கேன்வா’வில் எளிதாக உருவாக்கலாம். தொடக்கத்தில் ‘டெம்ப்ளேட்’ டிசைன்களைப் பயன்படுத்திக் கற்றுக்கொண்டு, பின்னர் சுயமாகப் புது டிசைன்களை உருவாக்கலாம். முதலாவதாக சரியான டிசைன் அளவை நிர்ணயிக்க வேண்டியது அவசியம்.
இதையடுத்து, பொருத்தமான ‘பேக் கிரவுண்ட்’, எழுத்து வடிவம், படங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். டிசைனுக்குப் பொருத்தமான வண்ணங்களையும் முன்கூட்டியே தேர்வுசெய்து வைத்தால் நல்லது.இனி இந்த வசதிகளைப் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான டிசைன்களை எளிதாக வடிவமைக்கலாம்.
வரைகலை வடிவமைப்பின் மீது ஆர்வம் இருப்பவர்களுக்கு ‘கேன்வா’ நல்ல ஆரம்ப வழிகாட்டி. இதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து வரைகலை வடிவமைப்பு தொடர்பான தொழில்முறைப் படிப்புகளைப் படித்து இத்துறையிலும்கூடக் கால்பதிக்கலாம்.