

உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தேசிய அணியில் இடம்பெறும் ஒவ்வொரு வீரரின் லட்சியமாக இருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. அக்டோபரில் இந்தியாவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரில் 20 வயதான திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது கவனிக்க வைத்துள்ளது.
யுவராஜ் சிங்கிற்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் 4ஆவது இடத்தில் விளையாட சரியான நபர் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை கேப்டன் ரோஹித் சர்மா அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். இது உண்மையும்கூட.
முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் 4ஆவது வரிசையில் திலீப் வெங்சர்க்கார், முகம்மது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் களமிறங்கிய இடம் அது.
இந்த உலகக் கோப்பையில் அந்த இடத்தில் யார் இறங்குவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில்தான் இதுவரை ஒரு நாள் போட்டியிலேயே விளையாடாத திலக் வர்மா ஆசிய கோப்பையில் விளையாட அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள 20 வயது இடதுகை ஆட்டக்காரரான திலக், 2023 சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 343 ரன்கள் குவித்திருந்தார். இதன்மூலம் அண்மையில் முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும் இடம்பிடித்தார்.
நம்பி கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் காப்பாற்றவும் செய்தார். 3 போட்டிகளில் விளையாடி 139 ரன்களைக் குவித்த திலக் வர்மா, அந்தத் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அத்தொடரில் சாதித்ததால், உலகக் கோப்பை அணியில் திலக் வர்மாவை நான்காவது இடத்தில் விளையாடத் தேர்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்க்கும் வண்ணம் ஆசியக் கோப்பை அணியில் திலக் வர்மா தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.
அத்தொடரில் வாய்ப்பு பெற்று சிறந்த பங்களிப்பை வழங்கினால், உலகக் கோப்பை அணியிலும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா அடுத்த யுவராஜ் சிங்போல உருவெடுப்பாரா? ஆசியக் கோப்பையில் அதற்கு விடை கிடைக்கும்.