மோனிஷா: மனம் கவர்ந்த ‘கோமாளி’!

மோனிஷா: மனம் கவர்ந்த ‘கோமாளி’!
Updated on
2 min read

சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுத் தனது நகைச்சுவையான பேச்சு, செய்கைகளால் எல்லோர் வீட்டு வரவேற்பறையையும் சென்று சேர்ந்தவர் மோனிஷா பிளசி. ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக வெள்ளித்திரையிலும் அறிமுகமாகி புதிய இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற முகச் சாயல், எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதில் பொருந்தி நடிக்கும் திறமை எனக் கலக்கிவரும் இவரைப் பொழுதுபோக்குத் துறை வாரி அணைத்துக்கொண்டிருக்கிறது.

சின்னத்திரை அறிமுகம்: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மோனிஷா பிளசி. பள்ளிப் படிப்பின்போதே சின்னத்திரையில் காலடியை எடுத்து வைத்துவிட்டார். நகைச்சுவை சேனல் ஒன்றில் ‘ஒரு நாள் வி.ஜே’வாகக் களம் காணத் தொடங்கியவர், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இதனால் அப்போதே ஊடகம்தான் தன்னுடைய எதிர்காலம் என முடிவுசெய்து, மருத்துவக் கனவுக்கு முழுக்குப் போட்டார். அந்தக் கதையைச் சுவாரசியம் குறையாமல் நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

“பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தேன். அதுவரை நல்ல மதிப்பெண் பெற்றதால் மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் பதின்னொன்றாம் வகுப்பில் முதல் பிரிவுப் பாடத்தை எடுக்குமாறு வீட்டில் அறிவுறுத்தினார்கள். ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துச் சவாலான அறிவியல் பாடப்பிரிவை எடுக்க வேண்டாம் என ஆசிரியர் ஒருவர் எனக்கு ஆலோசனை சொன்னார்.

ஆனால், சமாளித்துவிடலாம் என்கிற நோக்கில் முதல் பிரிவுப் பாடத்தையே எடுத்தேன். சேர்ந்த பிறகுதான் படிப்பதற்கு அது கடினம் எனத் தெரியவந்தது. அப்போதே மருத்துவக் கனவு சுருங்கிப் போய்விட்டது. என்றாலும் மாற்றுக் களமாகக் கல்வியைத் தாண்டிய ‘எக்ஸ்ட்ரா கரிகுல’ரில் ஆர்வம் காட்டினேன். நாடகங்களில் நடிப்பது, நடனம் போன்றவற்றில் பயிற்சி எடுக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து அவற்றிலேயே கவனம் செலுத்திப் புழங்கிக்கொண்டிருந்தேன். அதைத் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இதில் ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’, ‘குக் வித் கோமாளி’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறேன்” என்கிறார் மோனிஷா.

நகைச்சுவை இயல்பு: ‘பெண்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை’ என்கிற பிம்பம் பொதுவெளியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதை அடியோடு மறுக்கும் மோனிஷா, “நகைச்சுவை உணர்வுக்கு ஆண் பெண் பேதம் தேவையில்லை” என அடித்துச் சொல்கிறார். “நகைச்சுவை உணர்வு மிக இயல்பானது. எங்கள் வீட்டில் அம்மா, அப்பா இருவருமே கடுமையான சூழலையும்கூட மிக எளிதாகக் கடந்து செல்வார்கள்.

எப்போதும் ஜாலியான மனநிலையைக் கொண்டவர்கள். இதனால் எந்தவொரு விஷயத்திலும் நகைச்சுவையைப் புகுத்திப் பார்க்கும் பழக்கம் எனக்கும் இயல்பாகவே இருக்கிறது. பெண்களை மையப்படுத்தி வைரலாகும் பல நகைச்சுவைகளுக்கு மத்தியில் பெண்களே நகைச்சுவையை கையில் எடுக்கலாம். என்னால் முடிந்தவரை உருவக் கேலி, இரட்டை அர்த்தம், பிறரை இழிவுபடுத்துதல் போன்ற நகைச்சுவை பாணிகளைத் தவிர்த்து வருகிறேன்.

எனினும் ’ஆன் ஸ்பாட்’டில் வரும் சில வசனங்களைத் தவிர்க்க முடிவதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு வேளை என்னுடைய நகைச்சுவை யாரையாவது காயப்படுத்திவிட்டால், உடனடியாகச் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டுவிடுவேன்.

அடுத்த முறை இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். எனினும், பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு இருந்தால், பிறரைச் சங்கடத்தில் ஆழ்த்துவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்” என்று பொறுப்பாகப் பேசுகிறார் மோனிஷா.

பெண்கள் சாதிக்கலாம்: எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு பெண் தனித்துச் சாதிக்க ஆதரவு தேவை. அப்படி இல்லையென்றால் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனக்கு குடும்பத்தினருடைய ஆதரவே உந்துதலாக இருப்பதாகச் சொல்கிறார் மோனிஷா.

“அப்பா, அம்மா, தங்கை என நடுத்தர வர்க்கத்துக் குடும்பம்தான். பெண் பிள்ளைகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்கிற நிலையை என் குடும்பத்தினர் தகர்த்தனர். எனக்கு இருக்கும் தனித்திறமைகளை வெளிக்காட்ட பல மேடைகள் ஏறியபோதும் அவர்கள் என்னுடன் இருந்தனர்.

தற்போது சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். இப்போதும் அதே ஆதரவை வழங்கி வருகின்றனர். எவ்வளவு தடைகள் இருந்தாலும் நம் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவுகள் உடன் இருக்கும்போது இன்னும் நிறைய சாதிக்கலாம் என்று தோன்றும். ஆக, எந்தத் துறையானாலும் பெண்களும் சாதிக்கலாம்” என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் மோனிஷா.

எந்தவொரு விஷயத்திலும் நகைச்சுவையைப் புகுத்திப் பார்க்கும் பழக்கம் எனக்கும் இயல்பாகவே இருக்கிறது. பெண்களை மையப்படுத்தி வைரலாகும் பல நகைச்சுவைகளுக்கு மத்தியில் பெண்களே நகைச்சுவையை கையில் எடுக்கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in