

கடந்த சில ஆண்டுகளாக ‘பாட்காஸ்ட்’ என்கிற ஒலி வடிவம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வானொலி ஒலிபரப்பின் அடுத்த பரிமாணமான இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் தமிழிலும் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், இசையும் உரையாடலும் கலந்த பாணியில் ‘பாட்டுக்காரன்’ என்கிற பெயரில் பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் தென்காசியைச் சேர்ந்த சுதிர் வியாஸ் என்கிற இளைஞர்.
தமிழும் இசையும்: வானொலியிலிருந்து சற்று மாறுபடும் பாட்காஸ்ட்களை எங்கிருந்தும் கேட்கலாம். திறன்பேசி, மடிக்கணினி இருந்தாலே போதும், தேவையான நேரம் நிகழ்ச்சிகளைப் பதிவிறக்கம் செய்து கேட்கலாம். சாமானியரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம், பகிரலாம் என்பதுதான் இதிலுள்ள தனிச்சிறப்பு. இப்படித் தமிழ் இசைப்பாடல்களைப் பற்றி சுதிர் வியாஸ் தொடங்கிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியைப் பல்லாயிரம் பேர் ‘ஸ்பாட்டிஃபை’ செயலியில் பின்தொடர்கிறார்கள்.
‘பாட்டுக்காரன்’ உருவான கதையைப் பற்றி சுதிரிடம் கேட்டோம். மடை திறந்த வெள்ளம் போலக் கொட்டத் தொடங்கினார். “கரோனா பொதுமுடக்கத்தின்போது எனக்கு விருப்பமான இசைப்பாடல்கள் பற்றி வலைப்பூவில் பதிவு செய்துவந்தேன். ஆனால், வலைப்பூப் பதிவுகள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் வாசகர்களை எட்டவில்லை.
அப்போதுதான் தோழி ஒருவரின் உந்துதலால் எனது கருத்துகளை எழுத்து வடிவத்திலிருந்து ஒலி வடிவத்துக்கு மாற்றும் முடிவை எடுத்தேன். ‘ஸ்பாட்டிஃபை’ செயலியில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியைத் தொடங்கினேன். இசையும் தமிழும் இணைவதால் நிகழ்ச்சிக்கு ‘பாட்டுக்காரன்’ என்கிற பெயரைச் சூட்டினேன்.” என்கிறார் சுதிர்.
வாரந்தோறும் ஒரு நிகழ்ச்சி என்கிற விதத்தில் இதுவரை 70க்கும் அதிகமான நிகழ்ச்சிகளைச் சுதிர் தொகுத்து வழங்கியிருக்கிறார். பிடித்த பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் உடனான உரையாடல்களும் இதில் அடங்கும். தற்போதைய நிலையில் டாப் 10 தமிழ் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளில் ‘பாட்டுக்கார’னும் இடம் பிடித்திருப்பதாக உற்சாகம் பொங்க சொல்கிறார் சுதிர். இவருடைய பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளில் கவிஞர் நா.முத்துகுமார், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களே மிகப் பிரபலமானவை.
தனித்துவம் அவசியம்: இன்ஸ்டகிராம் தளத்தில் ரீல்ஸ் அறிமுகமான போது ‘இன்ஃப்ளூயன்சர்கள்’ படையெடுத்தனர். எனினும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது வெகு சிலரே. ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியை எப்படித் தயாரிக்க வேண்டும் என்ற கேள்வியைச் சுதிரிடம் முன்வைத்தோம். “ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் நாம் பேச இருப்பதைப் பற்றி முன்கூட்டியே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
சினிமா, இசை போன்ற துறைகளைத் தவிர ஆரோக்கியம், வணிகம், ஆட்டோமொபைல் போன்றவற்றைப் பற்றி விரல் விட்டு எண்ணும் வகையிலேயே தமிழ் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் வெளியாகின்றன. எனினும் எந்தத் தலைப்பின்கீழ் பேசினாலும் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த தகவல்களை மீண்டும் பகிராமல் இருப்பது நல்லது. தனித்துவமான கருத்துகளுக்கும் நேயர்களோடு ஒத்துப்போகக்கூடிய கருத்துகளுக்கும் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
என்னுடைய பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நண்பர் ஒருவர் ஒலி வடிவத்தில் தொகுத்துத் தருகிறார். படத்தொகுப்புப் பணிகளைப் போல ஒலி வடிவத்தை தொகுப்பதற்கான மென்பொருள்களும் இருக்கின்றன. அவற்றைச் சுயமாகக் கற்றுக்கொள்ளலாம். திறன்பேசியிலேயே பதிவுசெய்து, தொகுத்து, பகிரக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. இந்த வேலைகளைத் தெரிந்துகொண்டால் பாட்காஸ்ட் தயார்” என்கிறார் சுதிர்.
வருமானம் ஈட்டலாமா? - சுதிர் பதிவேற்றும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளைச் சேர்ந்த தமிழ் ரசிகர்களும் கேட்டு கருத்துகளைப் பகிர்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும்சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஒலிபரப்பாகக்கூடியவை. எனினும் மேலை நாடுகளில் இருப்பதுபோன்ற பாட்காஸ்ட் தளங்கள் இந்தியாவில் இல்லை என்று வருத்தமாகச் சொல்கிறார் சுதிர்.
“தமிழ் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை இன்னும் ‘Monetization’ எனப்படும் மதிப்பூதியத் திட்டம் அனைவருக்குமானதாக இல்லை. பாட்காஸ்ட் என்பது முகம் காட்டாத ஒருவரின் கருத்து பரிமாற்றமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் பாட்காஸ்ட்டின் தற்போதைய சூழலில், ஏற்கெனவே பெரிய திரையில் தோன்றி மக்களுக்குப் பரிச்சயமான முகங்களின் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
சாமானியரும் பாட்காஸ்ட் உருவாக்கலாம் என்பது ஆரோக்கியமான அம்சம். ஆனாலும் மதிப்பூதிய விஷயத்தில் இருக்கும் பாரபட்சங்கள் களையப்பட வேண்டும். யூடியூப் தளத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளுக்கென ஒரு தளம் உருவாகப்போவதாகவும், மதிப்பூதியம் வழங்கப்படும் எனவும் சமீபத்தில் செய்திகளில் வந்தது. இது சாத்தியமானால் இளைஞர்கள் பலர் யூடியூப் போல பாட்காஸ்ட் தயாரிப்பிலும் களம் காணலாம்” என்கிறார் சுதிர்.