மெலடிகளால் வசீகரிக்கும் சக்திஸ்ரீ

மெலடிகளால் வசீகரிக்கும் சக்திஸ்ரீ
Updated on
2 min read

அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே நெஞ்சமே..’ பாடல்தான் திரும்பும் இடமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மனதை வருடும் இப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க, விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர். 2012இல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் ‘நெஞ்சுக்குள்ள..’ பாடலைப் பாடியதன் மூலம் கவனிக்கப்பட்டவர் சக்திஸ்ரீ . கட்டிட வடிவமைப்பாளர், பாடகர், சுயாதீன இசைக் கலைஞர், பாடல் தயாரிப்பாளர், பின்னணிக் குரல் கலைஞர் எனப் பல முகங்களைக் கொண்டவர் சக்திஸ்ரீ.

இசையும் வடிவமைப்பும்: கட்டிட வடிவமைப்பு சார்ந்த படிப்பைப் படிக்கும்போதே திரைப்படங்களில் பாட தொடங்கிவிட்டார் சக்தி. இசை ஒரு பக்கம், வடிவமைப்பு ஒரு பக்கம் என ஆர்வத்துடன் இரட்டைச் சவாரி செய்து வந்தார். இப்போதும் அந்தப் பணியை விடவில்லை. ஒரே நேரத்தில் இது எப்படிச் சாத்தியமாகிறது?

“ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எனக்கு, அவரது இசையில் பாட வேண்டும் என்பது கனவாகவே இருந்தது. அந்தக் கனவு நிறைவேறியதைப் போல, அவரது இசைப் பள்ளியை வடிவமைக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. பொதுவாக ஒரு மியூசிக் ஸ்டுடியோவை வடிவமைக்க வேண்டுமெனில் ’ஒலி’ சார்ந்து பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இசைத் துறையில் இயங்கி வருவதால், இதிலிருக்கும் சிக்கல்கள் எனக்குத் தெரியும். அதனால், மியூசிக் ஸ்டுடியோக்களை வடிவமைக்கும் பணிகளை அதிக ஈடுபாடுடன் விரும்பிச் செய்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வடிவமைப்பு சார்ந்த திட்டங்களிலும் பணியாற்றுகிறேன்” என்கிறார் சக்திஸ்ரீ.

கடந்த பத்து ஆண்டுகளில் பல பாடல்களைப் பாடியிருக்கும் இவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய பாடல்களெல்லாம் ஹிட் ரகம்தான். ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ’அக நக...’ பாடலைப் பாடியதும் இவர்தான். இப்பாடலைத் தமிழில் மட்டுமின்றித் தெலுங்கு, மலையாளம் வெர்ஷன்களிலும் பாடி அசத்தியிருக்கிறார்.

“பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும். ஒவ்வொரு மொழியிலும் சிறப்புகள் உள்ளன. ஒரு மொழியில் நாம் பாடிய பாடலை வேறு மொழிகளில் பாடும்போது நிறைய கற்றுக்கொள்ளலாம். ஸ்பானிஷ் போன்ற பிற மொழிகளையும்கூட நான் கற்று வருகிறேன்” என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார் சக்திஸ்ரீ.

தனி இசைப்பாடல்கள்: திரைப்படப் பாடல் பாடுவது மட்டுமல்லாமல் தனி இசைப்பாடல்களை எழுதி, பாடி, இயக்கி தன்னுடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றியும் வருகிறார் சக்திஸ்ரீ. திரைப்படப் பாடல்களுக்கும் சுயாதீன இசைப் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் பகிர்ந்துகொண்டார். “பல சுயாதீன இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றும்போது புது அனுபவம் கிடைக்கும்.

திரைப்படக் காணொளியில் வெளியாகாத பல விஷயங்களைத் தனிப்பாடல்களை இயக்கும்போது காட்சிப்படுத்தலாம். யூடியூப் தளத்தில் பதிவேற்றுவதன் மூலம் மக்களின் விமர்சனங்கள், பாராட்டுகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியும். எனினும் ’நம்பர்’களால் இயங்கிக்கொண்டிருக்கும் யூடியூப் கலாச்சாரத்தின் பின் ஓடாமல் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினால் சிறந்த படைப்புகள் வெளியாகும்” என்கிறார் சக்திஸ்ரீ.

திரைத்துறையில் பெண்கள்: எந்தப் பணியாக இருந்தாலும் திறம்படச் செய்துவரும் சக்திஸ்ரீ, அடுத்து இசை அமைப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார். ‘தி டெஸ்ட்’ என்கிற புதிய படத்துக்கு இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். திரைத்துறையில் ஒரு பெண் இசை அமைப்பாளராகப் பணியாற்றுவது குறித்த கேள்விக்குப் பக்குவமாகப் பதிலளிக்கிறார்.

“இசை அமைப்பாளராக அறிமுகமாவதில் மிக்க மகிழ்ச்சி. இந்தப் பணி தரும் அனுபவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒளிப்பதிவு, இயக்கம், இசையமைப்பு போன்ற பணிகளில் பெண்கள் அதிகம் ஈடுபட வேண்டும். ஒருவர் தரும் உத்வேகம் மூலமே பல பெண்களும் தடைகளைக் கடந்து வருவார்கள். எனினும் ஒரு பெண் சாதனையாளரைப் பார்த்துதான் இன்னொரு பெண் சாதிக்க வேண்டும் என்பதில்லை.

நம் பயணத்துக்கு யார் வேண்டுமானாலும் உந்துதலாக இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் நிறைய விஷயங்கள் மாறி இருக்கின்றன. ஆண், பெண் என்பதைத் தாண்டி பால்புதுமையினரை உள்ளடக்கிய வேலைவாய்ப்புகளை நாம் கட்டமைக்க வேண்டும். ஏனெனில், கலை அனைவருக்குமானது. எவரும் சாதிக்கலாம்” என்கிறார் சக்திஸ்ரீ.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in