

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 44 நாடுகளுக்கு பட்ஜெட் பயணம் மேற்கொண்டிருக்கிறார், ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் குமார் என்கிற இளைஞர். இவருடைய பயணக் காணொளிகள் அடங்கிய ‘பேக்பாக்கர் குமார்’ எனும் யூடியூப் பக்கத்தைத் தொடர்வோர் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அண்டார்க்டிகாவில் பனியால் மூடப்பட்டப் பகுதிகளிலிருந்து இவர் பதிவிட்ட காணொளிகள் எல்லாம் யூடியூபில் சூப்பர் ஹிட்.
சென்னை ஐஐடியில் பொறியியலில் படிப்பை முடித்தவர் செந்தில்குமார். படிக்கும்போதே நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலால் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்து சிங்கப்பூர் சென்று வந்திருக்கிறார். அதுவரை வெளிநாட்டுப் பயணம் என்றால் அதிக செலவாகும் என்று இருந்தவருக்கு ‘பேக்பாக்கிங்’ (Backpacking) எனும் பயண முறை அறிமுகமாகியிருக்கிறது.
அதென்ன ‘பேக்பாக்கிங்’?
“பட்ஜெட்டுக்குள் பயணம் செய்வதுதான் பேக்பாக்கிங். முதலில் ஓரிடத்தைத் தேர்வுசெய்து அந்த இடத்தைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். ‘பேக்பாக்’ என்பது தோளில் அணிந்துகொள்ளும் பை. இந்தப் பையின் அளவைத் தாண்டி கூடுதலாகப் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. வழக்கமாக சுற்றுலாவில் செய்யக்கூடிய அம்சங்களை இப்பயணத்தில் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் தங்குவது, பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, உணவுச் செலவை குறைத்துக் கொள்வது போன்றவை பேக்பாக்கிங் பயணத்தில் சொல்லப்படாத விதிகள். இதை கடைப்பிடித்தே தீர வேண்டும். விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், அந்தந்த இடத்தில் மக்களைச் சந்தித்து, அவர்களுடைய வழிகாட்டுதல்படி பயணத்தை மேற்கொள்வதே பேக்பாக்கிங் ஸ்டைல்” என அறிமுகப்படுத்துகிறார் குமார்.
தனி ஒருவன்
2008 முதல் உலக நாடுகளுக்கு பட்ஜெட் பயணம் மேற்கொண்டும் வருகிறார் இவர். 2021இல் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி பயணக் காணொளிகளை அதில் பதிவேற்றத் தொடங்கினர். வழக்கமான யூடியூப் பாணியைப் பின்பற்றாத இவர், ஒரு பயணத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அனுபவங்களுடன் சேர்த்துப் பயனுள்ள தகவல்களை தமிழில் பேசி வழங்குகிறார். யூடியூப் பக்கத்தை நிர்வகிப்பது குறித்து உற்சாகமாகப் பேசினார் குமார்.
“பயணம் செய்வது, படம் பிடிப்பது, தொகுத்துக் காணொளி தயார் செய்வது எனப் பல வேலைகளைத் தனி ஆளாய் செய்து வருகிறேன். ஆங்கில மொழியில் பயணம் சார்ந்து தரமான காணொளிகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. தமிழில் இது போன்ற யூடியூபர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர். பட்ஜெட் பயணத்தில் கிடைக்கும் அனுபவத்தை உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘பேக்பாக்கர் குமார்’ என்கிற யூடியூப் பக்கத்தைத் தொடங்கினேன். இசைத் துணுக்குகள், ‘க்ளிக் பைட்’ தலைப்புகள் போன்றவை இல்லாமல் பயண விளக்கக் காணொளிகளாகப் பதிவுசெய்து வருகிறேன். பலருக்கும் பட்ஜெட் பயணம் சாத்தியம்தானா என்கிற சந்தேகம் உள்ளது. கண்டிப்பாக பட்ஜெட் பயணத்தைத் திட்டமிட முடியும்” என்கிறார் குமார்.
என்ன செய்ய வேண்டும்?
பட்ஜெட் பயணம் மேற்கொள்வது எப்படி? அது குறித்து பல யோசனைகளைப் பகிர்ந்துகொள்கிறார். “முதலில் தேடல் தேவை. உலகெங்கும் பல நாடுகளைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட சில காலத்தில் தள்ளுபடி விலையில் விமான டிக்கெட் விலையை நிர்ணயிக்கும். இது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். ‘ஸ்கை ஸ்கேன்னர்’ போன்ற செயலியில் இத்தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்தால், சரியான நேரத்தில் குறைந்த செலவில் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துவிடலாம். இதில் பெரும் தொகையைச் சேமிக்கலாம். இரண்டாவதாக, எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் பல மாதங்களுக்கு முன்பே பயணப்பட இருக்கும் இடத்தைப் பற்றித் தகவல் சேகரிக்க வேண்டும். ஏஜென்சிகளிடம் பயணத் திட்டத்தை ஒப்படைக்காமல் பட்ஜெட்டுக்கு ஏற்ப சுயமாகத் திட்டமிட வேண்டும். செல்லும் இடங்களில் பொதுப் போக்குவரத்தைதான் பயன்படுத்த வேண்டும். பல நாடுகளில் பொதுப் போக்குவரத்துக்குக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எனவே, பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தினால் கணிசமாகத் தொகையை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் குமார்.
அண்டார்க்டிகா பயணம்
பனிக்கரடிகளும் பென்குயின்களும் அதிகமாக இருக்கும் அண்டார்க்டிகா கண்டத்துக்குப் பயணிப்பது எளிதான காரியமல்ல. பயணத்துக்கே அதிக செலவாகும் நிலையில் அண்டார்க்டிகாவுக்கும் பட்ஜெட் பயணம் மேற்கொண்டிருக்கிறார் குமார். உலகின் தென் துருவத்திலிருந்து தமிழ் யூடியூபர் ஒருவர் காணொளிகளைப் பதிவுசெய்ததும் இதுவே முதல் முறை என்கிறார். “தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து அண்டார்க்டிகாவுக்குக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அதில் பயணம் செய்ய பல லட்சங்கள் தேவை. நான் தென் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ’உலகின் மூலை’ எனப்படும் உசுவாயா நாட்டிலிருந்து அண்டார்க்டிகாவுக்குக் கப்பல் இயக்கப்படுவது அறிந்து பயணத்தைத் திட்டமிட்டேன்.
உலகிலேயே அண்டார்க்டிகாவுக்குக் குறைந்த கட்டணத்தில் கப்பல் இயக்கப்படுவது இங்குதான். மற்ற நாடுகளிலிருந்து ரூ 20 லட்சம் செலவாகும் என்றால் இங்கிருந்து ரூ.4 - 5 லட்சம் வரை செலவாகலாம். கப்பல் புறப்படுவதற்கு முந்தைய நாளில் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் பாக்கி இருந்தால், தள்ளுபடி விலையில் விற்கப்படும். அப்படித்தான் உசுவாயா நாட்டிலிருந்து 50% தள்ளுபடியில் அண்டார்க்டிகாவுக்கு முன்பதிவு செய்தேன். இப்படிச் செலவைக் குறைத்துப் பயணம் செய்ய சில உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றினால் பட்ஜெட் பயணம் சாத்தியமே. பேக்பாக்கிங்கில் தொடங்கிய எனது முதல் சிங்கப்பூர் பயணம் இன்று அண்டார்க்டிகா வரை நீண்டிருக்கிறது” எனப் பெருமையாச் சொல்கிறார் செந்தில்குமார்.