

இயக்குநர் மணிரத்னத்தின் முக்கியமான படங்களில் ஒன்று ‘அஞ்சலி’. அந்தப் படத்தில் ‘அஞ்சலி’ பாப்பாவிடம் முதல் முதலாக நட்பு பாராட்டும் சிறுவனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தப் படத்தை அடுத்து ‘தளபதி’, ‘மே மாதம்’, ‘சதி லீலாவதி’ போன்ற படங்களில் நடித்து 90களில் மிகவும் பரிச்சயமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாத அவர், தற்போது திரைத்துறையின் வேறொரு தளத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.
நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு எனத் திரைத்துறையின் வெவ்வேறு பணிகளைக் கற்றுக்கொண்ட ஆனந்த், ஒரு கட்டத்தில் ஒலிப்பதிவைத் தேர்வு செய்திருக்கிறார். 2009இல் வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒலி அமைப்பாளராக தொடங்கிய அவருடைய பயணம், ‘பொன்னியின் செல்வன்’ வரை நீண்டது. அலசிப் பார்த்தால், ‘அடடே இத்தனை தமிழ்ப் படங்களுக்கு இவர் ஒலிப்பதிவு செய்திருக்கிறாரா’ என்கிற ஆச்சரியம் ஏற்படுகிறது.
‘இதுவே என் தேர்வு’ - குழந்தை நட்சத்திரமாக அசத்திக் கொண்டிருந்தவர், வளர்ந்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாதது ஏன் என்கிற கேள்வியும் எழுந்தது. சென்னை ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு பணிகளில் மூழ்கியிருந்த ஆனந்தை சந்தித்தோம். “ ‘அஞ்சலி’ படத்துக்காக நடந்த தேர்வில் விளையாட்டாகக் கலந்து கொண்டபோது அதிர்ஷ்டவசமாகத் தேர்வானேன்.
அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளும் முக்கியமான படங்களாக அமைந்ததால் குழந்தை நட்சத்திரமாகக் கவனம் பெற்றேன். ஆனால், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாமல் லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பில் சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் அது.
எனினும் இடைவெளி எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக் கல்லூரியில் திரைத்துறை சம்பந்தமாக மேற்படிப்பை முடித்தேன். இயக்கம், ஒலி, ஒளி, தயாரிப்பு என சினிமாவின் முக்கிய துறைகளை கற்றுக்கொண்டு, இறுதியாகவே ஒலிப்பதிவைத் தேர்வு செய்தேன். நடிப்பதற்கான வாய்ப்புகள் தானாகவே அமைந்தன. ஆனால், ஒலிப்பதிவில் பணியாற்ற வேண்டுமென்பது முற்றிலும் என்னுடையத் தேர்வு. எனக்கு மிகவும் பிடித்த துறை இது. மனநிறைவோடு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறேன். இந்தப் பக்கம் வந்த பின்பு நடிப்புப் பக்கம் செல்லவில்லை” என்கிறார் ஆனந்த்.
கவனம் பெறும் ஒலிப்பதிவு: பல்வேறு கலைஞர்களின் பங்களிப்பால்தான் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க முடியும். இசை, ஒளி, நடிப்பு என மற்ற துறைகளின் மீது விழும் வெளிச்சம் ஒலிப்பதிவு துறையின் மீது இருப்பதில்லை என்ற கேள்விக்கு விளக்கமாகவே பதிலளித்தார்.
“ஒரு திரைப்படத்தின் ஒலிப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறும். முதலில் ரெக்கார்டிங், அடுத்து எடிட்டிங், அடுத்து மிக்ஸிங். தேவைக்கேற்ப இந்த வேலைகள் முன்பின் நடக்கலாம். ஆனால், இந்த மூன்றும் நடந்தால்தான் ஒரு படத்தின் ஒலிப்பதிவு வேலை முழுமையடையும். இத்துறையைப் பொறுத்தவரைப் பலருடைய பங்களிப்பில்தான் வேலைகளைச் செய்து முடிக்க முடியும்.
திரைப்படத்தின் எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு தொய்வு அல்லது இரைச்சலாக இருப்பது போன்ற உணர்வு வந்துவிடாதபடி கவனமாக ஒலி வடிவத்தைக் கையாள வேண்டும். படம் சொல்ல வரும் கதையைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் முக்கிய பொறுப்பு, ஒலி வடிவத்துக்கும் உண்டு என்பதால் தேவையான இடத்தில் ஏற்ற, இறக்கமும் தேவையான இடத்தில் நிசப்தத்தையும் தர வேண்டும்.
‘பொன்னியின் செல்வன்’ போன்ற வரலாற்று படங்களுக்குக் கூடுதலாக மெனக்கெட வேண்டியிருக்கும். சவாலான வேலைதான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட காட்சி அல்லது படத்தை மக்கள் கொண்டாடும்போது உழைத்ததற்கான பலன் கிடைத்த மகிழ்வைத் தரும். சமீப காலமாக ஒலி வடிவம் குறித்த கருத்துகளும் விமர்சனங்களும் வெளியாகின்றன. ஒலி வடிவமும் கவனம் பெறுகிறது” என்கிறார் ஆனந்த்.
‘பி.எஸ்.’ உருவாக்கம்: குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கியது முதலே மணிரத்னம் படங்களில் ஏதோ ஒரு வகையில் ஆனந்தும் பணியாற்றி வருகிறார். மணி ரத்னம் படங்களில் பணியாற்றுவது தற்செயலா? “குழந்தை நட்சத்திரமாக மணி சாரின் அறிமுகம் கிடைத்தது என்றாலும், அவர் இயக்கிய ’கடல்’ திரைப்படத்தில்தான் ஒலிப்பதிவு சார்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் என்னுடைய வேலை அவருக்குப் பிடித்துப் போனதால், அவர் இயக்கும் படங்களில் பணியாற்றி வருகிறேன்.
திரைக்கதை எழுதும்போதே இதில் ஒலிப்பதிவுக்கான தேவை எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுவார் மணி சார். அப்படி ’பொன்னியின் செல்வன்’ படங்களுக்காகப் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது. இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான ஒலி, தேவைக்கு ஏற்ப ரெக்கார்டிங் செய்யப்பட்டவை. பல ஊர்களுக்குப் பயணித்தும், பல கலைஞர்களைச் சந்தித்தும் ஒலிகளைப் பதிவுசெய்தோம்.
முதல் பாகத்தின் இறுதிக் காட்சிக்காகவும் மற்ற காட்சிகளுக்காகவும் ‘நீர்’ சப்தங்களை பிரத்யேகமாக உருவாக்கினோம். ஒவ்வொரு காட்சிக்கும் நுணுக்கமாக ஒலிகளைத் தேர்வு செய்தோம். முன்பு இருந்ததைப் போலத் திரையரங்குகளில் மட்டும் மக்கள் சினிமாவை கண்டுகளிக்கப்போவதில்லை. ஓடிடி தளங்கள் வந்துவிட்டன. மக்கள் பயன்படுத்தக்கூடிய எந்தத் தளமானாலும் அதில் தரமான ஒலி வடிவத்தைப் பொறுத்த முயல்கிறோம். பார்வையாளர்களின் தேர்வு மாறுபடும்.
எனினும் படம் பார்க்கும்போது முழுமையான அனுபவத்தைக் கொடுக்க ஒலிப்பதிவுத் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தொடர்ந்து இத்துறையில் பயணிக்கவே விரும்புகிறேன். அவ்வப்போது எழுத்தின்மீது இருக்கும் ஆர்வத்தால் கதைகளையும் எழுதி வருகிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது” என்கிறார் ஆனந்த்.