

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராகப் பட்டையைக் கிளப்பிய குஜாராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார்.
உங்களுடைய குடும்பமே விளையாட்டுக் குடும்பமாமே? - ஆமாம், அப்பா பரத்வாஜ் இந்தியத் தடகள அணியிலும் அம்மா உஷா தமிழ்நாடு வாலிபால் அணியிலும் விளையாடியவர்கள். அப்பாவுடன் மைதானத்துக்குச் செல்லும்போதுதான் எனக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் வந்தது. சிறு வயதிலேயே பேட்டைப் பிடிக்கத் தொடங்கிவிட்டேன்.
தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாடியது கைகொடுத்ததா? - நிறைய கற்கிறேன். பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் உத்தி, சூழலுக்கு ஏற்ப விளையாடுவது, பேட்டிங் நுணுக்கங்கள் என என்னுடைய புரிதல் விரிவடைந்திருக்கிறது.
ஐபிஎல்லில் ஆடும் லெவனில் வாய்ப்பை எதிர்பார்த்தீர்களா? - அணிக்குத் தேவைப்படும்போது சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. தொடர் ஆரம்பத்திலேயே கேன் வில்லியம்சன் அடைந்த காயத்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அணியின் வெற்றிக்காகச் சில போட்டிகளில் விளையாடியதில் மகிழ்ச்சி.
பரபரப்பும் பதற்றமும் நிறைந்த ஐபிஎல்லில் நெருக்கடியை எப்படி கையாள்கிறீர்கள்? - முதலில் உணர்ச்சிவசப்படக் கூடாது. சவாலான சூழல்தான் எப்போதும் வாய்ப்பை உருவாக்கித் தரும். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறப்பாக விளையாடவே முயல்கிறேன்.
குஜராத் அணியில் சக தமிழக வீரர்கள் என்ன பேசிக்கொள்வீர்கள்? - குஜராத்துக்காக இரண்டு சீசன் விளையாடியிருக்கிறேன். விஜய் சங்கர் இருப்பதால் நிறைய பேசுவோம், விவாதிப்போம். இந்த முறை பேட்டிங் செய்வது பற்றி நிறைய பரிமாறிக் கொண்டோம். அவர், அவ்வப்போது எனக்குச் சில டிப்ஸ்கள் கொடுப்பார்.
சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டி பற்றி... சென்னையில் வளர்ந்த எனக்கு சி.எஸ்.கே.வையும் தோனியையும் அவ்வளவு பிடிக்கும். ஐபிஎல்லில் பெரும் ரசிகர் படை கொண்ட ஓர் அணிக்கு எதிராக விளையாடியது சிறப்பான அனுபவத்தைத் தந்தது. இறுதிப்போட்டியில் மிகவும் ரசித்து விளையாடினேன்.
அடுத்து? - இந்த சீசன் மூலம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். எனது பேட்டிங்கை மெருகேற்ற ஐபிஎல் உதவியிருக்கிறது. அடுத்து டி.என்.பி.எல். தொடர் தொடங்க இருப்பதால் அதற்கு ஆயுத்தமாகிவருகிறேன்.