The Wolf of Wall Street: பணவெறி பிடித்து அலையும் ஓநாய் | சினிமாவும் அரசியலும் 19

The Wolf of Wall Street: பணவெறி பிடித்து அலையும் ஓநாய் | சினிமாவும் அரசியலும் 19
Updated on
3 min read

ஒருவேளை இந்தத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் ஒருவித அசெளகரியம் ஏற்படலாம் உங்களுக்கு. சில காட்சிகள் நிச்சயமாக உங்களை முகம் சுளிக்க வைக்கலாம். சில காட்சிகள் கண்டிப்பாக உங்களை முகத்தைத் திருப்பிக்கொள்ள வைக்கலாம். ஆனால், பணவெறி பிடித்தலையும் அவர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

படம் வெளிவந்த பிறகு, ‘இவ்வளவு ஆபாசமாகக் காட்ட வேண்டுமா’ என்று வரத்தான் செய்தன விமர்சனங்கள். ‘அந்த உலகம் அப்படித்தான் இருந்தது, அதை மென்மையாக்கிக் காட்டினால் உண்மை மறைந்துவிடும்’ என்று சொன்னார் இயக்குநர் மார்டின் ஸ்கார்செஸ்.

வால்ஸ்ட்ரீட் போன்ற வர்த்தகக் காட்டிற்குள் பணவெறி மட்டுமே பிடித்தலைந்து கொண்டிருக்கும் ஓர் ஓநாயின் கதையான இந்தத் திரைப்படத்தைப் புரிந்துகொள்வதற்கு பங்குச்சந்தை பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை புள்ளிகள் ஏறுகிறது, இறங்குகிறது என்பதை நம்மில் பலபேர், தலைப்புச் செய்திகளாகப் பார்த்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவோம். ஆனால், முதலாளிகள் தங்களுக்குத் தேவையான பணத்தை, பங்குச் சந்தையின் வழியாகத் திரட்டுகிறார்கள். மேட்டுக்குடி மக்களும் உயர் நடுத்தரவர்க்கத்து மக்களும் பணம் கொடுத்து நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறார்கள். இந்த முதலாளிகளையும், முதலீட்டார்களையும் இணைக்கும் புள்ளிதான் பங்குச்சந்தை. ஆம், இடைத்தரகர்.

1980களில் பொருளாதாரத்தின் இதயமாக இருக்கும் இந்தப் பங்குச்சந்தையைப் பயன்படுத்தி ஒருவன் பல மில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கிறான். எல்லாரும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத உயரத்திற்குச் செல்கிறான். ஆம், வேகமாக உயரத்திற்குச் சென்றால் பாதாளத்தில் விழத்தான் செய்ய வேண்டும்.

ஏறிய வேகத்தில் அவனும் விழுந்தான். அவன் பெயர் ஜோர்டான் பெல்ஃபோர்ட். அவனை வால்ஸ்ட்ரீட்டின் ஓநாய் என்றும் அழைத்தார்கள். அவனுடைய கதைதான் இந்தத் திரைப்படம். ஜோர்டான் பெல்ஃபோர்டாகப் பிரபல நடிகர் லியானர்டோ டி காப்ரியா நடித்திருக்கிறார்.

கதையின் நாயகன் ஜோர்டான் பெல்ஃபோர்ட் 1962இல் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தில் பிறந்தவன். சாதாரண அடுக்ககத்தில் வளர்ந்தவன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசை பள்ளி வயதிலேயே அவனுக்குள் வளரத் தொடங்குகிறது. அப்போதே சில தொழில்களைச் செய்து பணத்தின் ருசியைப் பார்க்கத் தொடங்குகிறான். கல்லூரியில் சேர்ந்த பிறகும் பணம் சம்பாதிப்பதற்கான வழியைத் தேடுவதிலும், சில தொழில்களைச் செய்து சம்பாதிப்பாதிலும் கவனமாக இருக்கிறான். வாழ்க்கையில் அவனுடைய இலக்குப் பணமாக மட்டுமே இருக்கிறது.

1980இல் அமெரிக்காவின் வர்த்தக மையமான வால் ஸ்ட்ரீட்டில் பங்கு வர்த்தகராக வேலைக்குச் சேர்கிறான். பங்குச்சந்தையைப் பற்றி அறிவை வளர்த்துக்கொள்கிறான். இயல்பாகவே பேச்சுத்திறமை உள்ள நபரென்பதால் வாடிக்கையாளர்களை எளிதாகப் பங்கு வர்த்தகத்திற்குள் அவனால் இழுக்க முடிகிறது.

1987இல் பங்கு வர்த்தகம் முழுக்க சரிவைக் காண்கிறது. ஜோர்டான் பெல்ஃபோர்ட் வேலையிழக்கிறான். திருமண மோதிரத்தை அடகு வைக்கலாமா இல்லை விற்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் மனைவியின் வழிகாட்டுதலின்படி சிறிய நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடிய ஓர் இடத்தில் வேலைக்குச் சேர்கிறான். வெறும் பொய்யை உண்மையைப் போலவே பேசி வாடிக்கையாளர்களைச் சம்மதிக்க வைக்கிறான். உடனடியாகப் பணக்காரர்களாக வேண்டுமென்று காத்திருக்கும் மனிதர்கள்தான் இலக்கு. தப்பவில்லை குறி, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அடுத்து?

1990இல் சொந்தமாகப் பங்கு வர்த்தக நிறுவனத்தைத் தொடங்குகிறான். நம்பிக்கையான நண்பர்களை உடன் சேர்த்துக் கொள்கிறான். நண்பர்களுக்குப் பணத்தைப் பற்றிய ஆசையை அல்ல வெறியை ஊட்டுகிறான். தன்னுடைய பேச்சுத்திறமையை இல்லை இல்லை ஏமாற்றும் வித்தையை நண்பர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறான். ஜோர்டான் பெல்ஃபோர்ட் இப்போது ஒருவனல்ல, ஒரு நூறு ஜோர்டான்கள் வாடிக்கையாளரின் பணத்தாசையைக் குறிவைக்கிறார்கள். ஏமாறவே பிறந்தவர்கள் போலப் பணத்தாசை பிடித்த மனிதர்கள் பங்குகளை வாங்கிக் குவிக்கிறாரகள். ஜோர்டான் பெல்ஃபோர்ட்டும் பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறான். அப்படி என்னதான் செய்தான் என்கிறீர்களா? குறைந்த மதிப்புள்ள நிறுவனங்களின் பங்குகளை பொய்யான விளம்பரங்களின் மூலம் உயர்த்திக்காட்டி, அதிகமான விலைக்கு விற்று லாபம் பார்ப்பது.

அவ்வளவுதான், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவனது நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்குகிறார்கள். ஆண்டுக்குப் பல கோடி டாலர் வருமானம் வரத் தொடங்குகிறது. ஆடம்பர மாளிகைகள், சொகுசுக் கப்பல், சொந்தமாக விமானங்கள், விடுமுறை கால மாளிகைகள், வார இறுதியில் பணியாளர்களுக்கு விருந்து என அளவுக்கு மீறிய பணம் எல்லாவற்றையும் செய்ய வைக்கிறது. ஊழியர்களுக்காகப் பாலியல் தொழிலாளிகளை வரவைக்கிறான்.

போதைப்பொருள்கள் வெகு சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பணம் சம்பாதிக்க வேண்டும், அந்தப் பணத்தைக் கொண்டு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. அவனையும் அவனது பணவெறியையும் வெறுக்கிறாள் மனைவி. இன்னொரு பெண்ணோடு அவனைப் பார்த்த பிறகு விலகிச் செல்கிறாள். பணம் இருக்கிறது, வேறென்ன வேண்டும், அடுத்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.

தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்கிறவர்களையும் கிட்டத்தட்ட அவனைப்போலவே மாற்றி வைத்திருக்கிறான் ஜோர்டான். பணவெறி பிடித்தவர்களாக, போதைக்கு அடிமையானவர்களாக, பாலியல் வெறி பிடித்தவர்களாக அலுவலகத்திலேயே எல்லாம் செய்யுமளவிற்கு இருக்கிறார்கள். ஒழுக்கம் கிலோ என்னவிலை என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது அந்த இடம். பணக்காரனாக வேண்டும் என்கிற பேராசையால் பங்குச்சந்தையை நோக்கி மக்கள் படையெடுக்கத்தான் செய்தார்களே ஒழிய குறைந்த பாடில்லை.

ஆசையைத் தூண்டி ஒன்றுக்கும் உதவாத பங்குகளை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி கோடிகோடியாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் நிறுவனம். வால்ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகையில் அவனைப் பற்றி தி வீல்ஃப் ஆப் வால்ஸ்ட்ரீட் என்கிற தலைப்பில் கட்டுரை வெளிவருகிறது. கடினமாக உழைத்துச் சம்பாதித்த பெருமையை எல்லாரிடமும் எந்த வெட்க உணர்வும் இல்லாமல் பகிர்ந்து கொள்கிறான்.

அளவுக்கு மீறிய பணம் அளவுக்கு மீறிய அனைத்துவிதமான ஒழுக்கக் கேடுகளையும் கொண்டு வருகிறது. பணத்தின் கடைசி இலக்கு ஓயாத போதையும், பாலியல் தொழிலாளிகளோடு நேரம் செலவழிப்பதுமே என்றாகிப் போகிறது.

ரஷ்ய நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் குப்ரின் தன்னுடைய பலிபீடம் நாவலில் இப்படி எழுதியிருப்பார், ‘சொத்து என்கிற ஒன்று உள்ளவரையில் இந்த உலகத்தில் பாலியல் தொழில் இருக்கத்தான் செய்யும்’ என்று. முதல்முறை இந்த வரிகளை வாசித்தபோது எப்படி ஒத்துக்கொண்டேனோ, அப்படித்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தபோதும் ஒத்துக்கொண்டேன். மனிதப் பேராசையின் உச்சத்தையும் அதன் அபத்தத்தையும் கண்ணாடிபோலக் காட்டக்கூடியது இந்தத் திரைப்படம்.

அப்படியே போகவில்லை ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் வாழ்க்கை. அமெரிக்க உளவுத்துறை ஒருவழியாக அவன் என்னதான் செய்து கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டறிகிறது. சுமார் 200 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீட்டாளர்களிடம் ஏமாற்றியது தெரியவருகிறது. 1999இல் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான் ஜோர்டான் பெல்ஃபோர்ட். விசாரணை முடிந்து 2003ஆம் ஆண்டு அவனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. எல்லா ஊரிலும் சட்டம் ஒரே மாதிரிதான் இருக்கும்போல. 22 மாதங்களில் நன்னடத்தையால் விடுவிக்கப்படுகிறான். அதைவிடவும் கொடுமை உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன்னம்பிக்கை தரக்கூடிய உரைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.

வழக்கம்போல இந்த முதலாளித்துவச் சமூகமைப்பு குற்றவாளிகளுக்கானது என்பதை ஜோர்டான் பெல்ஃபோர்ட்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டுகிறான். ஜோர்டான் பெல்ஃபோர்ட்டை ஒரு தனிநபர் என்று நினைத்து விடாதீர்கள், எந்தச் சமூகத்திலும் இருக்கக்கூடிய பேராசையின் உருவகம்தான் அவன். இயக்குநர் சொல்கிறார், “இந்தத் திரைப்படம் ஒரு குற்றக்கதை மட்டுமல்ல, நவீன முதலாளித்துவ உலகின் மனநிலையை ஆராயும் படம். அதனை அப்பட்டமாகக் காட்டக்கூடிய படம்” என்று. முதலாளித்துவ சமூகம் ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஜோர்டான் பெல்ஃபோர்ட் போன்றவர்களைத்தான் உருவாக்கும். மனிதர்களை அல்ல.

கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

The Wolf of Wall Street: பணவெறி பிடித்து அலையும் ஓநாய் | சினிமாவும் அரசியலும் 19
Lion of the Desert: பாலைவனச் சிங்கம் ஒமர் முக்தார் | சினிமாவும் அரசியலும் 18

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in