Lion of the Desert: பாலைவனச் சிங்கம் ஒமர் முக்தார் | சினிமாவும் அரசியலும் 18

Lion of the Desert: பாலைவனச் சிங்கம் ஒமர் முக்தார் | சினிமாவும் அரசியலும் 18
Updated on
4 min read

வரலாறு சம்பந்தமான திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் இந்தத் திரைப்படத்தைத் தவிர்க்கவே முடியாது. போர் சம்பந்தமான திரைப்படங்களைத் தேடினீர்கள் என்றால் இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது.

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடர்பான படங்களைப் பார்க்க விரும்பினீர்கள் என்றால், இந்தப் படத்தைப் பார்த்துதான் ஆகவேண்டும். திரைப்படக் கல்லூரிகளில் இந்தப் படம் பாடமாக இருக்கிறது. திரைக் காதலர்களின் இதயத்தில் இந்தப் படம் நங்கூரமாக நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. சிரிய அமெரிக்க இயக்குநரான முஸ்தபா அக்காத் இயக்கத்தில் 1981இல் வெளிவந்தது இந்தத் திரைப்படம். அன்றிலிருந்து இன்றுவரை சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக இந்தத் திரைப்படத்தை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, “நான் ஒரு அரேபியன், அதைவிடவும் முதலில் மனிதன். வரலாறு பெரும்பாலும் வெற்றியாளர்களால் எழுதப்பட்டது. தன்னுடைய தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒமர் முக்தார் போன்றவர்கள் தீவிரவாதிகள்போலக் காட்டப்பட்டார்கள். ஒரு மனிதன் தன் நிலத்திற்காகப் போராடினால், அவன் தீவிரவாதியா, சுதந்திரப் போராளியா என்று திரைப்படம் மூலம் கேட்க விரும்பினேன்” என்றார் இயக்குநர்.

வரலாறு முழுக்க, தங்களை நோக்கிக் கேள்வி கேட்பவர்களை, தங்களை எதிர்த்துப் போராடுகிறவர்களைத் தீவிரவாதிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் சொல்லி அவமானப்படுத்த தவறுவதில்லை சர்வாதிகாரிகள்.

இந்த உலகம் சகிக்க முடியாத துயரங்களைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு, சர்வாதிகாரிகளின் முட்டாள்தனமான முடிவுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்த உலகத்தில் மறக்கவே முடியாத மனிதப் படுகொலைகள் நடப்பதற்குச் சர்வாதிகாரிகளின் பைத்தியக்காரத்தனமான முடிவுகள்தான் காரணமாக இருந்திருக்கின்றன.

மக்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை விரும்பாதவர்கள் சர்வாதிகாரிகள். மனித ரத்தம் ஓயாமல் சிந்தப்படுவதை விரும்புகிற குரூர எண்ணங்கொண்டவர்கள் சர்வாதிகாரிகள். சொந்த நாட்டு மக்களின் இதயங்களில் வெறுப்பை விதைத்து, தங்களுடைய அதிகாரப் பீடத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் குறியாக இருப்பவர்கள்.

அப்படி எத்தனையோ சர்வாதிகாரிகளை இந்த உலகம் பார்த்திருந்தாலும், சகிக்கவே முடியாத சர்வாதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்தான் 1922 - 1943 வரை இத்தாலியை ஆட்சிசெய்த பாசிஸ்ட் முசோலினி. ரோம சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, இத்தாலியின் பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று இத்தாலியர்களின் இதயத்தில் இனவெறியை விதைத்தவர். இத்தாலியர்கள் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று சொல்லி ஒவ்வொரு மூளைக்குள்ளும் வெறியூட்டியவர். இருக்கவே இருக்கிறது தேசபக்தி, அதைத்தான் அந்த பாசிஸ்ட்டும் பயன்படுத்தினார்.

நாடுபிடிக்கும் அவருடைய ஆசைக்கு இலக்காக இருந்தது ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள லிபியா.

ஏன் லிபியா? அவர் இதயத்தின் ஆழம் வரையிலும் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது லிபியா. கடந்த இருபது வருடங்களாக லிபியாவைக் காலனி நாடாக மாற்றிவிட்டோம் என்று சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவியாகத் தவித்துக் கொண்டிருந்தது இத்தாலி. இத்தாலியின் நாடுபிடிக்கும் பேராசைக்குத் தடையாக நின்று கொண்டிருந்தார்கள் லிபியாவின் புரட்சிக்காரர்கள். அவர்களுக்குத் தலைமைதாங்கி வழிநடத்திக் கொண்டிருந்தார் 73 வயதான ஆசிரியர். அவர்தான் ’பாலைவனச் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட ஒமர் முக்தார். யுத்தவெறி கொண்ட பாசிஸ்ட் முசோலினியின் இத்தாலிக்கும், சுதந்திரத்திற்காகப் போராடும் ஒமர் முக்தாரின் லிபியாவிற்குமான போர்தான் இந்தத் திரைப்படம்.

பாசிஸ்ட் முசோலினி இத்தாலியின் அதிபராகப் பதவியேற்றவுடன் 20 வருடங்களாக இத்தாலியப் படைகளை தடுத்துக் கொண்டிருக்கும் ஒமர் முக்தாரின் புரட்சிப் படையை ஒன்றுமில்லாமல் ஆக்கவேண்டும் என்று வெறிகொள்கிறார். இத்தாலி ராணுவத்தின் ரத்தவெறி பிடித்த ஜெனரல் கிராசியானியை ஒமர் முக்தாரைப் பிடிக்கவும் அழிக்கவும் அனுப்புகிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்தப் பாலைவனம் இதுவரையிலும் பார்த்திராத நவீனப் போர்த்தளவாடங்களையும் அனுப்பி வைக்கிறார். போர்வெறி பிடித்த ராணுவத்தினர் லிபியாவை நோக்கிப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். லிபியாவின் மக்களோ நெருங்கி வரும் ஆபத்து தெரியாமல் அன்றாடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

”சமநிலை இல்லையென்றால் எல்லாமே சிதறிப்போகும்” என்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஒமர் முக்தார். லிபியாவின் குழந்தைகள் உற்சாகமாக அவரிடம் குர்ஆன் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமைதி தவழும் முகத்தில் மெல்லிய சிரிப்பைப் படரவிட்டபடி குழந்தைகளின் முன்னால் உட்கார்ந்திருக்கும் இந்த முக்தார், யுத்தக்களத்தில் புயலின் வேகத்தில் செயல்படக்கூடியவர்.

எதிரியின் படைகளைத் திசைதிருப்பி எதிர்பார்க்காத நேரத்தில் தாக்குதலைத் தொடங்கி மொத்தமாக நிலைகுலைய வைக்கிறவர். அவ்வளைவையும் அறிந்துதான் கிராசியானி பெரும் படையுடன் நுழைகிறார் லிபியாவிற்குள். இத்தாலிய ராணுவத்திலிருப்பவர்களின் ஒரே அவமானம், இருபது வருடங்களாகத் தங்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒமர் முக்தாரை ஒருவரும் நேரில் சந்திக்கவில்லை என்பதுதான்.

பாலைவனத்தில் இத்தாலியின் ஒரு படைப்பிரிவைச் சாதுர்யமாக வழிமாற்றி சுற்றிவளைத்துத் தாக்குகிறார்கள் முக்தாரின் படையினர். பிடிபட்ட சில வீரர்களை உயிரோடு விட்டுவிடச் சொல்கிறார். உடனிருப்பவர்கள் வேண்டாமென்று சொல்ல, ‘அது அறமல்ல’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். தேசத்தின் விடுதலைக்காகப் போராடும் முக்தாரிடம் நிறைந்திருக்கும் அறம், தேசத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கும் அந்த முட்டாள்களிடம் இருக்குமா என்ன?

முக்தாரின் படைகளுக்கு உதவுவதாகக் குற்றம் சொல்லி ஊரையே சின்னாபின்னமாக்குகிறார்கள். சந்தேகித்தவர்களைச் சுட்டுக்கொல்கிறார்கள். பெண்களைப் பலவந்தமாக இழுத்துச் செல்கிறார்கள். மிச்சமிருப்பவர்களை முகாமிற்கு விரட்டிச் செல்கிறார்கள்.

புதியபுதிய ஆயுதங்களோடு தங்கள் நிலத்திற்குள் இறங்கியிருக்கும் இத்தாலிய வீரர்களின் நோக்கத்தை முக்தார் அறிந்துகொள்கிறார். வியூகங்களை வகுக்காமல் வெல்ல முடியாது என்பது உறுதியாகிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் போரில் வெல்ல முடியாது என்பது முக்தாருக்கு நன்றாகவே தெரியும். அப்படியென்றால் எதற்காக எதிர்த்து நிற்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவருக்காக அல்ல, முக்தார் உயிரைப் பணயம் வைத்துப் போரிடுவது எதிர்காலச் சந்ததியினருக்காக.

முக்தாரிடமிருந்து எதிர்ப்புணர்வைப் பெற்றால், என்ன செய்வார்கள்? அவர்களும் எதிர்த்து நிற்கத்தானே செய்வார்கள். அதுதான் வேண்டும் முக்தாருக்கும். அதற்காகத்தான் 73 வயதிலும் குதிரையில் அமர்ந்து போர்க்களத்தை அர்த்தம் நிறைந்ததாக மாற்றிக் கொண்டிருக்கிறார். எதிர்தரப்பில் ஜெனரல் கிராசியானியோ, முக்தாரோடு மட்டுமல்ல, அவரோடிருக்கும் 200 பேரோடு மட்டுமல்ல, ஒரு பெரும் மக்கள் தொகையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, முக்தாரிடமிருந்து மக்களைப் பிரிக்கும் வேலையை வேகமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

முக்தாரின் படைகளுக்கு உதவிகள் வரக்கூடிய எல்லாத் திசைகளும் அடைக்கப்படுகின்றன. முகாமிலிருக்கும் பெண்கள் ஒவ்வொரு கூடாரமாக உணவு சேகரித்து இரவில் முக்தாரின் ஆள்களிடம் பகிர்ந்துகொள்கிறாரகள். மறுநாள் உதவிய அத்தனை பேரும் தூக்கிலிடப்படுகிறார்கள். வேறு வழியில்லை மோதித்தான் ஆகவேண்டும் என்கிற சூழல் உருவாகிறது.

இறுதிப் போருக்குத் தயாராகிறார்கள் இருதரப்பும். கொஞ்சம் உணவு, கொஞ்சம் ஆயுதங்கள், அதிகமான நம்பிக்கையோடு எதிர்க்கத் துணிகிறார்கள் முக்தாரின் படையினர். அதிகமான ஆள்கள், அளவுக்கதிகமான ஆயுதங்கள், நாடுபிடிக்கும் வெறி முன்னேறி வருகிறது. இறுதிவரை போராடி, பிடிபடுகிறார் முக்தார். கால்களிலும் கைகளிலும் விலங்குமாட்டி அழைத்துச் செல்லப்படுகிறார்.

கிராசியானியுடன் நடக்கும் உரையாடலில், ‘உங்கள் கடந்த காலத்தை நான் மதிக்கிறேன். அதுபோல எங்களையும் நீங்கள் மதிக்க வேண்டும். எங்களுக்கும் வரலாறு உண்டு. அறிவியல், கணிதம், மருத்துவம் உண்டு. உங்கள் இருண்ட காலத்தில் உலகிற்குக் கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்’ என்று முக்தார் சொல்லும்போது இதயம் படபடக்கத்தான் செய்யும். அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முக்தார் மக்களின் முன்னிலையில் தூக்கிலப்படுகிறார். எல்லாரும் கலைந்து சென்ற பிறகு தூக்குமேடையில் கிடக்கும் முக்தாரின் கண்ணாடியை அங்கிருக்கும் சிறுவன் அலி எடுத்துக்கொள்கிறான்.

போரில் வெற்றிபெற்ற இத்தாலியில் இந்தத் திரைப்படத்தை நீண்ட காலம் தடைசெய்து வைத்திருந்தார்கள். புரட்சியை விரும்பியவர்கள் ரகசியமாகப் பார்க்கத்தான் செய்தார்கள். சர்வாதிகாரியால், ஒரு மனிதனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் விதைத்த கருத்துகளை ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியாது. பாசிஸ்ட் முசோலினியின் மரணத்தைப் பாருங்கள். சர்வாதிகாரம் முடித்து வைக்கப்பட்டது மக்களின் கரங்களால்!

- கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Lion of the Desert: பாலைவனச் சிங்கம் ஒமர் முக்தார் | சினிமாவும் அரசியலும் 18
Rabbit Proof Fence: பழங்குடிச் சிறுமிகளின் நீண்ட பயணம் | சினிமாவும் அரசியலும் 17

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in