சொர்க்க வாசல்! | ஸிராத் (ஸ்பெயின்) - உலகத் திரை 3

சொர்க்க வாசல்! | ஸிராத் (ஸ்பெயின்) - உலகத் திரை 3
Updated on: 
3 min read

பயணத் திரைப்படங்கள் மற்ற எல்லாத் திரைப்பட வகைமையை விடவும் பார்வையாளரின் மனதை ஆழமாகத் தொடக்கூடியவை. காரணம், அவற்றின் எதிர்பாராத தன்மை. முதன்மைக் கதாபாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மேற்கொள்ளும் பயணமாகத் திரை வெளி உருவெடுக்கும் போது, அதன் காட்சி மொழி ஒரு மாயக் கித்தானாக மாறிவிடுகிறது.

அவை கடக்கும் நிலப்பரப்பும் பாதைகளும் சந்திக்கும் மனிதர்களும் எதிர்கொள்ளும் சோதனைகளும் அவற்றிடம் மனமாற்றத்தை ஏற்படுத்து கின்றன. இழப்புகளைப் போலவே பெற்றுக் கொள்ளுதலையும் பயணம் சாத்தியப்படுத்தி விடுகிறது.

தேடிச் செல்லும் தந்தை

ஸ்பெயின் - பிரான்ஸ் நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஸிராத்' (Sirāt). ஸ்பானிய இயக்குநரான ஆலிவர் லாக்ஸ் (Óliver Laxe) படைத்துள்ள இப்படம், 2025 கான் திரைப்பட விழாவில் ஜூரி விருதை வென்றது.

வழக்கமான கதைசொல்லல் முறையிலிருந்து விலகி, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட ஆபத்தான பாலைவன நிலப்பரப்பில் முதன்மைக் கதா பாத்திரங்களைப் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

இடையிடையே ராணுவம் குறுக்கிடும் அந்தப் பயணத்தில், நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து ‘ரேவ்’ இசைக் கூடல்களில் விடுதலையைத் தேடியலையும் மனிதர்கள், அவர்களைப் பின்தொடரும் ஒரு தந்தை - மகன், இவர்களின் எதிர்பாராத பயணம் எதையெல்லாம் கொட்டிக் கொடுக்கிறது; எதை

யெல்லாம் தட்டிப் பறிக்கிறது என்பதை இசையும் ஒளிப்பதிவும் கொண்டு நம்மை சஹாரா பாலைவனத்தில் உலவ வைத்து விடுகிறார் ஆலிவர் லாக்ஸ்.

மொராக்கோவின் தெற்குப் பகுதியில், அட்லஸ் மலைத்தொடரையும் சஹாரா பாலைவனத்தையும் ஒட்டிய நிலப்பரப்பில் கதை நிகழ்கிறது. அங்கு நடைபெறும் ‘ரேவ்’ (Rave) நடனத்துடன் கூடிய ஒரு மின்னிசைக் கூடலுக்குத் தனது 12 வயது மகன் எஸ்டெபானுடன் காரில் செல்கிறார் லூயிஸ். பல நாள்களுக்கான உணவு, தண்ணீர் ஆகியவற்றுடன் அவர்கள் புறப்பட்டிருக் கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ‘ரேவ்’ இசைக்கூடல் ஒன்றில் கலந்துகொள்ள வீட்டுக்குத் தெரியாமல் புறப்பட்டுச் சென்றிருக்கிறாள் லூயிஸின் 18 வயது மகள் மார். ஆனால், அவள் திரும்பி வரவில்லை.

அவளைத் தேடித்தான் தற்போது நடக்கும் இசைக் கூடலுக்கு அப்பாவும் மகனும் வந்திருக்கிறார்கள். தேவையான அளவுக்கு அச்சிட்டு எடுத்துவந்த அவளின் ஒளிப்படத்தை, அந்த இசைக் கூடலுக்கு வந்திருக்கும் பலரிடமும் காட்டி விசாரிக்கிறார்கள். ஆனால், நம்பகமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Loading content, please wait...

X