Umberto D: முதுமையின் தனிமையும் முடியாத வறுமையும் | சினிமாவும் அரசியலும் 10

Umberto D: முதுமையின் தனிமையும் முடியாத வறுமையும் | சினிமாவும் அரசியலும் 10
Updated on
4 min read

“இந்தத் திரைப்படத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” என்கிற இயக்குநரின் வார்த்தைகளோடு தொடங்குகிறது ‘உம்பர்ட்டோ டி’ (Umberto D) திரைப்படம்.

“எங்கள் ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடு” என்று அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் காதுகள் கேட்கும்படி முழக்கமிட்டுக் கொண்டு, வீதியில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள் இத்தாலி நாட்டின் வயதானவர்கள். “எங்கள் வாழ்க்கை முழுவதும் உழைத்திருக்கிறோம், அதற்கான ஓய்வூதியத்தைக் கொடு” என்று உரக்கக் கத்திக் கொண்டு செல்கிறார்கள் அந்த முதியவர்கள்.

“எங்கள் ஓய்வூதியத்திற்கு நியாயம் வேண்டும்” என்று அடிவயிற்றில் இருந்து கத்துகிறார்கள். “நாங்கள் வரி செலுத்தும் குடிமக்கள், பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கிறோம். காத்திருந்து களைத்துப் போய்விட்டோம்” என்று முழக்கமிட்டுக் கொண்டே அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சிக்கிறார்கள்.

இந்தக் காட்சி 1952-இல் இத்தாலியில் நடப்பதுபோல காட்டப்பட்டாலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியும். உலகத்தின் எந்த மூலையிலும், அதிகாரத்தின் மூளை இப்படித்தான் வேலை செய்யும்.

ஆம், வயதானவர்களாகட்டும், பெண்களாகட்டும், தூய்மைப் பணியாளர்களாகட்டும், விவசாயிகளாகட்டும், தொழிற்சாலைத் தொழிலாளர்களாகட்டும், நியாயமான உரிமைகளைக் கேட்டு, வாழ்வதற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி யாரும் போராடிவிடக் கூடாது. அதையும் மீறி போராட்டக்களத்திற்கு வந்துவிட்டால் அவ்வளவுதான். அதுவரையிலான அவர்களுடைய உழைப்பும், தியாகமும், சிந்திய வியர்வையும், ரத்தமும் என எதற்கும் எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை. அரசாங்கத்தின் கண்களுக்கு அவர்கள் போராட்டக்காரர்கள் அவ்வளவுதான். அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் அவ்வளவுதான்.

1952-இல் இத்தாலியிலும் அதே நிலைமைதான். வாழ்க்கைக்கு வழிகேட்டு வீதிக்கு வந்த முதியவர்கள், வாழ்வெல்லாம் உழைத்துக் களைத்தவர்கள், ஓய்வூதியத்தைக் கொஞ்சம் உயர்த்திக் கேட்டவர்கள், அதிகாரத்தின் கரங்களால் இரக்கமில்லாமல் துரத்தப்படுகிறார்கள். காவல் துறையினரால் கேலிசெய்யப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.

சிதறி ஓடும் அந்தக் கூட்டத்தில் ஒருவர்தான் இந்தக் கதையின் நாயகரான உம்பர்ட்டோ. உறவுகள் என்று யாரும் இல்லாமல், ஒரு நாய்க்குட்டியோடு வாடகை வீட்டில் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் உம்பர்ட்டோ. தனிமையாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். அதுவும் முதுமையில் தனிமையாக வாழ்வது. அந்த முதுமையின் தனிமையோடு வறுமையும் சேர்ந்திருந்தால் அந்த வாழ்வை என்னவென்று சொல்வது?

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை, எந்தச் சமரசமுமில்லாமல்,எப்படி எடுக்க வேண்டுமென்று நினைத்தாரோ அப்படி எடுத்திருக்கிறார் இயக்குநர் விட்டோரியா டி சிகா.

சைக்கிள் திருடர்கள், நேற்று இன்று நாளை, இரண்டு பெண்கள் போன்ற மகத்தான படைப்புகளை எடுத்திருந்தாலும் டி சிகாவின் இதயத்திற்கு நெருக்கமாக எப்போதும் இருப்பது உம்பர்ட்டோ டி திரைப்படம்தான்.

ஒரு சமூகத்தின் மனசாட்சியாக இருப்பவனே மிகச்சிறந்த கலைஞன். போருக்குப் பிறகான இத்தாலியச் சமூகத்தின் வலியையும் வேதனையையும் வாழ்விற்கான போராட்டங்களையும் தன்னுடைய திரைப்படங்களின் வழியாக வெளிப்படுத்திய டி சிகா மிகச் சிறந்த கலைஞர்.

அதென்ன, போருக்குப் பிறகான சமூகம்? அப்படிப்பட்ட கேள்விகள் தவிர்க்க முடியாததும் முக்கியமானதும்கூட. போர் எந்தக் காலத்திலும் யாருக்கும் வெற்றியைக் கொடுத்தது கிடையாது. போரின் விளைவு மானுட அழிவு. ஹிட்லர் தொடங்கிவைத்த இரண்டாம் உலகப்போருக்குள், அவரைப்போலவே அழிவை விரும்பிய முசோலினி, தன்னுடைய ஆட்சியின் கீழிருந்த இத்தாலியையும் இழுத்து விடுகிறார். விளைவு?

இத்தாலியின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஐந்து லட்சம் பேர் பலியாகிறார்கள். தொழிற்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே பாதைகள், சாலைகள் எல்லாமும் பெருமளவில் சேதமடைகின்றன. குண்டுவீச்சும் பசியும், நோயும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் குலைத்துப் போடுகின்றன.

அத்தியாவசியப் பொருள்களுக்கு மக்கள் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. இத்தாலியின் ரோம், நாப்பிள்ஸ், மிலான் நகரங்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் வீடற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள். ஒருவழியாக முசோலினி கொல்லப்பட்டு போர் முடிவிற்கு வந்தபோது, இத்தாலியின் உடலில் காயங்கள் மட்டுமே நிறைந்திருந்தன. காயங்களின் வலியை மக்கள்தான் அனுபவித்தார்கள்.

அந்தக் காயங்களைத்தான், அந்த வலிகளைத்தான், அவர்களுடைய வாழ்விற்கான போராட்டங்களைத்தான் டி சிகா திரைப்படங்களாக எடுத்தார். உம்பர்ட்டோ டியில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் சினிமா கலைஞர்கள் அல்லர். டி சிகாவின் இதயத்திற்கு என்றென்றைக்கும் நெருக்கமான படமாக இந்தத் திரைப்படம்தான் இருந்தது. இத்தனைக்கும் வெளிவந்த நேரத்தில் பொருளாதார அளவில் பெரியளவு வெற்றி பெறவில்லை. ஆனால், எங்கும் என்றென்றும் பேசப்படும் என்று டி சிகா நம்பினார்.

ஒரு நல்ல கலைஞன் எதை நம்புகிறானோ அது நடக்கும். இத்தாலிக்கு வெளியில் உம்பர்ட்டோ டி திரைப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. 2005இல் என்றென்றைக்குமான நூறு திரைப்படங்களை பட்டியலிட்ட புகழ்பெற்ற டைம் இதழ், உம்பர்ட்டோ டி திரைப்படத்தையும் இணைத்துக் கொண்டது. உலகத்தின் முக்கியமான இயக்குநர்களும் சிந்தனைவாதிகளும் உம்பர்ட்டோ டியை இருகரம் நீட்டி வரவேற்றார்கள். உலகெங்குமுள்ள முற்போக்கு முகாம்களில் உம்பர்ட்டோ டி திரையிடப்பட்டது. இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் இத்தாலி அரசிடமிருந்து டி சிகாவிற்கு எதிர்ப்பும் எழுந்தது. தன்னுடைய திரைப்படங்கள் மூலமாக உலகத்தின் முன்னால் இத்தாலியின் மதிப்பைக் கெடுக்கிறார், ‘தேசவிரோதி’ என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டது. ‘உண்மையைக் காட்டுவது தேசவிரோதம் என்றால், நான் தேசவிரோதிதான்’ என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தார் டி சிகா. இப்படிப்பட்ட விமர்சனங்களும் பாராட்டுகளும் உம்பர்ட்டோ டி திரைப்படத்திற்கு எதிர்வினையாக இருக்கும் அளவிற்கு அந்தப் படத்தில் அப்படி என்னதான் இருந்தது? வேறொன்றுமில்லை உண்மை இருந்தது.

கதை:

அரசு வேலையிலிருந்து ஓய்வுபெற்ற உம்பர்ட்டோ, தனக்குக் கிடைக்கும் சொற்ப ஓய்வூதியத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீட்டு வாடகைக்கும் மூன்றுவேளை உணவிற்குமே மிகுந்த போராட்டமாக இருக்கிறது. எஞ்சியிருக்கும் ஒவ்வொரு பொருளாக விற்று, வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

உறவுகள் என்று யாரும் இல்லையென்றாலும் அவர் வளர்க்கும் நாயானது உடனிருக்கிறது. வாடகை கொடுக்க முடியாத காரணத்தினால் வீட்டு உரிமையாளரிடமிருந்து நெருக்கடி அதிகமாகிறது. உடல்நிலை சரியில்லாதது போலக் காட்டிக்கொண்டு மருத்துவமனையில் சில நாட்கள் தங்கிக்கொள்கிறார் உம்பர்ட்டோ. வேறு வழியே இல்லாமல் பிள்ளையைப் போல வளர்த்துக் கொண்டிருக்கும் நாயைப் பிச்சையெடுக்க தாயார்படுத்திவிட்டு, சிறிது நேரத்தில் அதிலிருந்து விடுபடும் காட்சி இப்போதல்ல எப்போதும் பார்த்தாலும் கண்களைக் குளமாக்கக் கூடியது.

தங்குவதற்கு வீடும் ஒருகட்டத்தில் இல்லாமல் போக, கையில் ஒரு பெட்டியோடும் நாய்க்குட்டியோடும் வெளியே செல்கிறார் உம்பர்ட்டோ. பெரிய நகரம்தான் ரோம். பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனாலும் உம்பர்ட்டோவிற்குத் தலைசாய்க்க ஓர் இடமில்லை. வாழ்ந்துவிடலாம் என்கிற நம்பிக்கையோடு போராடிப் போராடிக் களைத்துப்போன உம்பர்ட்டோ நாயை இறுக அணைத்தபடி விரைந்துவரும் ரயிலுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்.

ரயில் பக்கத்தில் வரும்போது நாய் இறங்கி ஓடிவிடுகிறது. உம்பர்ட்டோவும் விலகிவிடுகிறார். அடுத்துதான் அந்தக் காட்சி. ரயில் கடந்துசென்ற பிறகு நாயை அழைப்பார் உம்பர்ட்டோ, ‘அட கொலைகாரப் பாவியே’ என்கிற தோரணையோடு விலகி ஓடும், விளையாட்டுக் காட்டி சமாதானப்படுத்தி விடுவார். இருவரும் விளையாடிக் கொண்டிருப்பதோடு திரைப்படம் முடியும்.

இது போரைப் பற்றிய திரைப்படம் அல்ல, ஆனாலும் போரின் விளைவுகளைக் காட்சிப்படுத்தியதால் போரைப் பற்றிய திரைப்படமென்றும் சொல்லலாம். போர் எப்படி மனிதர்களின் வாழ்க்கையைச் சுரண்டிச் சென்றுவிடுகிறது என்பதை ஏராளமான படைப்புகளின் வழியாக இந்த உலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனால், போர் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரை நாம் நேரடியாகப் பார்க்கவில்லை. இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் வலிகளை டி சிகாவின் திரைப்படங்கள் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் கண்களுக்கு முன்னால், மொத்தமாக நிர்மூலமாக்கப்பட்ட காஸா இருக்கிறது. காஸாவில் இன்றும் வீடுகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். பெற்றோர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். காஸாவின் கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரமாயிரம் கதைகள் புதைந்துகிடக்கும். அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மட்டுமே தேவைப்படுகிற போரினால் பெண்களும் குழந்தைகளும் வயோதிகர்களும் அனுபவித்த வேதனை சொல்லி மாளாது.

இந்தியாவில் இப்போது தோராயமாக 15 கோடி முதியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடும்ப உறவுகளைச் சிதைக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தால் காணாமலாக்கப்பட்ட கூட்டுக்குடும்ப அமைப்பானது, முதியோர்களைத் தனிமையின் கொடுங்கரங்களில் தள்ளியிருக்கிறது. இன்றைய கணக்கெடுப்பின்படி நாற்பது சதவீத முதியோர்கள் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் 18 சதவீத முதியோர்கள் வருமானம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொருள் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களால் முதியோர் இல்லங்கள் மட்டுமே பெருகியிருக்கின்றன.

மனிதகுலத்திற்கான முக்கியமான போதனையாக, கட்டளையாக புத்தர் வெளிப்படுத்தியது ’வாழ்நாள் முழுவதும் உன் பெற்றோரைப் பேணிக்காப்பாயாக’ என்பதுதான். உம்பர்ட்டோ டி திரைப்படத்தைப் பார்த்து முடித்தபோது இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுந்துவந்த புத்தரின் வார்த்தைகள் தற்செயலானதல்ல, இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள்.

கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Umberto D: முதுமையின் தனிமையும் முடியாத வறுமையும் | சினிமாவும் அரசியலும் 10
Capernaum – குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சமூகம் | சினிமாவும் அரசியலும் 9

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in