

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால், தன்னுடைய வேலையின் நிமித்தமாக நசரேத்திலிருந்து கடற்கரை ஓரத்திலிருக்கும் செழிப்பான நகரமான கேபர்நாமிற்குச் செல்கிறார் கிறிஸ்து. பிலிப்பும் அவனுடைய சகோதரன் அந்திரேயாவும் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொண்டிருக்கிறார்கள். “வலைகளை விட்டுவிட்டு வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குகிறேன்” என்றழைக்கிறார்.
இப்படியாகத் தன்னுடைய சீடர்களோடு அவர் அதிகமாக வேலை செய்த இடம்தான் கேபர்நாம். ஆனால், அங்கிருக்கும் மக்கள் அவருடைய போதனைகளைப் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், கொஞ்சம் மனங்கசந்து, “வானத்தின் உயரம் வரையிலும் உயர்த்தப்பட்ட கேபர்நாமே, பாதாளத்தின் ஆழம் வரையிலும் தாழ்த்தப்படுவாய்” என்று சொல்கிறார்.
‘சபிக்கப்பட்ட நகரம்’ என்று சொல்லப்படும் அந்த இடத்தின் பெயரைத்தான் திரைப்படத்தின் பெயராக வைத்திருக்கிறார் இயக்குநர் நாடின் லபாக்கி. பணத்தாசை, வியாபரம், பாலியல் தொழில், சமூக அநீதி போன்ற ஒழுக்கக் கேடுகளால் சாபம் பெற்றதாகச் சொல்லப்படும் அந்த நகரத்தின் பெயரை எதற்காகத் தேர்ந்தெடுத்தார் இயக்குநர்?
சரியான கல்வி இல்லாமல், தேவையான உணவு இல்லாமல், முறையான பாதுகாப்பு இல்லாமல், மனிதர்களென்ற மரியாதை இல்லாமல், குழந்தைகளுக்கான எந்தச் சுதந்திரமும் இல்லாமல், இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னதான நகரத்தைக் காட்டிலும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கும் நவீன சமூகத்தைச் சொல்வதற்கு, கேபர்நாம் (Capernaum) என்கிற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார். “குழந்தைகளைப் பெரியவர்களும் அரசும் கைவிடும் நவீன கேபர்நாமில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.
2018-ஆம் ஆண்டு லெபனான் நாட்டிலிருந்து வெளிவந்த இந்தப் படம், கான் திரைப்பட விழாவில் முக்கியமான விருதைப் பெற்றிருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கும்கூடப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதெல்லாவற்றையும் விட முக்கியமாக, உலகம் முழுவதும் பரவியிருக்கும் திரைக் காதலர்களின் இதயங்களைப் பிடித்து உலுக்கி உறையச் செய்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் முதலாளித்துவ சமூகத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், முக்கியமாகக் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, குழந்தைத் திருமணம், கல்வியின்மை, கொடிய வறுமை, அகதிகள் பிரச்சினை எனச் சகலமும் பேசப்பட்டிருக்கிறது.
லெபனானில் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தத் திரைப்படம் முதலாளித்துவ பொருளாதாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தேசத்திற்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய கதையாக இருக்கிறது. இந்தப் படத்தின் கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்வதென்பது நான் அனுபவித்த வலியை உங்களிடம் பகிர்ந்துகொள்வது அல்லாமல் வேறல்ல.
கேபர்நாம் படத்தின் கதை:
சிறையிலிருக்கும் பன்னிரெண்டு வயதுச் சிறுவன் ஸெய்ன் காவலர்களால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறான். நீதிபதியின் முன்னால் உட்கார வைக்கப்படுகிறான். சிறிது நேரத்தில் அவனது தாயும் தந்தையும் நீதிபதியின் முன்னால் உட்கார்கிறார்கள். எல்லாரும் கவனித்துக் கொண்டிருக்கும் வழக்கு என்னவென்றால், தன்னுடைய பெற்றோர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறான் ஸெய்ன்.
“என்னை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று நீதிபதியின் முன்னால் தைரியமாகச் சொல்கிறான். அப்படியென்றால் ஸெய்னின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும்? ஒரு குழந்தையின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அதெல்லாம் அவன் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
லெபனானின், பெய்ரூட் நகரத்தில் எளிய மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் ஸெய்ன் குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. குடும்ப வாழ்க்கை பஞ்சத்தில் நகர்ந்து கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. மூத்தவனான ஸெய்னுக்குப் பின்னால் தம்பி, தங்கைகள் என ஏழு பேர். குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் கல்வியிலிருந்து விலக்கி கட்டாய உழைப்பிற்குத் தள்ளுகிறார்கள் பெற்றோர்கள். முக்கியமாக, பன்னிரண்டு வயதாகும் ஸெய்னுக்குப் பொறுப்பு அதிகமாகிறது. ஏதேதோ வேலை செய்து தன்னாலானதைக் குடும்பத்திற்காகக் கொண்டுவருகிறான்.
அவன் அதிகமாக நேசிக்கும் தங்கை சஹர் பெரிய மனுஷியாகிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள் அந்தச் சிறுவர்கள். தங்கையை அழைத்துக்கொண்டு ஓடிவிடலாமா என்கிற முயற்சி தோல்வியில் முடிய, ஒருசில கோழிகளைப் பெற்றுக்கொண்டு வியாபாரி ஒருவனுக்கு விற்கப்படுகிறாள் சஹர். கதறித்துடிக்கிறான் ஸெய்ன். அழுது அரற்றியபடி இழுத்துச் செல்லப்படுகிறாள் சஹர். இந்த நிகழ்வைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஸெய்ன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
பெய்ரூட்டின் இன்னொரு நகரத்தில் எத்தியோப்பியாவிலிருந்து அகதியாக வந்திருக்கும் ரஹிலைச் சந்திக்கிறான். உதவி கேட்ட ஸெய்னைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் ரஹில். அவளுடைய மகன் யோனஸை ஸெய்னின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள். இயல்பிலேயே அன்பின் உருவான ஸெய்ன் யோனஸையும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறான். அகதிக்கான சான்றிதழைப் புதுப்பிக்க முடியாமல் கைது செய்யப்படுகிறாள் ரஹில். குழந்தையோடு படாதபாடு படுகிறான் ஸெய்ன்.
என்னென்னமோ செய்து குழந்தையைப் பார்த்துக்கொள்கிறான். அந்த வீடும் உரிமையாளரால் பறிக்கப்படுகிறது. நடைபாதைகளில் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறான் குழந்தையோடு. ஸெய்னிற்கும்கூட அடையாள அட்டையோ, பிறப்புச் சான்றிதழோ எதுவும் கிடையாது. குழந்தையை ஓரிடத்தில் விட்டுவிட்டு அடையாளச் சான்றிதழை எடுப்பதற்காக வீட்டிற்கு வருகிறான் ஸெய்ன்.
தாயும் தந்தையும் அடிக்கிறார்கள். அந்த வலியைவிடச் சிறுவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட அன்புத் தங்கை சஹர் கர்ப்பிணியாகி இறந்துவிட்டாள் என்கிற செய்திதான் அதிகமாக வலிக்கிறது. கத்தியை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். சஹரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவனைக் குத்துவதைக் காட்டவில்லை.
ஆம், ஒரு சிறுவன் எப்படிக் கொலை செய்கிறான் என்று பின்னணி இசையோடு ரத்தம் ஆறாக ஓட, நம் இயக்குநர்களின் கையில் அந்தக் காட்சி கிடைத்திருந்தால் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் இழுத்து உட்கார வைத்திருப்பார்கள். ஆனால், நாடின் லபாக்கி அதைச் செய்யவில்லை. ரத்தக்கறை படிந்த கத்தியைச் சேகரித்து, ஸெய்னைச் சிறையிலடைக்கிறார்கள் காவலர்கள். பிறகுதான் தன்னுடைய பெற்றோரின் மீது வழக்குப் போடுகிறான் ஸெய்ன்.
கடைசியில் என்ன செய்ய வேண்டும் என்று நீதிபதி கேட்பார், “அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டும்” என்று கோபமாகச் சொல்வான் ஸெய்ன். அவனின் குற்றச்சாட்டால் குழந்தைத் திருமணம் செய்கிறவன், குழந்தைகளை வியாபாரம் செய்கிறவன் தண்டிக்கப்படுகிறான். இதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறாரகள் பெற்றோர்கள். எத்தியோப்பிய அகதியான ரஹிலிடம் அவளுடைய மகன் யோனஸ் ஒப்படைக்கப்படுகிறான்.
இறுதிக் காட்சியில், விடுதலை செய்யப்பட்டு அடையாளச் சான்றிதழுக்காக ஸெய்னை ஒளிப்படமெடுக்கிறார்கள். வாழ்வு முழுக்க வலி சுமந்து கொண்டிருப்பவன் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறான். ஒளிப்படம் எடுப்பவர், “இது உன்னுடைய அடையாளச் சான்றிதழுக்காக, உன்னுடைய இறப்புச் சான்றிதழுக்கு அல்ல” என்று சொல்லி சிரிக்க வைத்ததும், முதல்முறையாக மலர்ந்த முகத்தோடு சிரிக்கிறான் ஸெய்ன். அற்புதமான அந்தக் காட்சியைப் பற்றி இயக்குநர் சொல்கிறார், “அந்தப் புன்னகை வெறும் சந்தோஷமல்ல, உயிர் பிழைத்திருப்பதற்கான அடையாளம்” என்று.
நினைத்துப் பாருங்களேன் இந்தியா போன்ற நாட்டில் இன்னும் கல்வியறிவு கொடுக்கப்படாமல், கட்டாய உழைப்பில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மீதும், இந்தச் சமூகமைப்பின் மீதும் வழக்குப் போட்டால்? ஒவ்வொரு நாளும் குடும்பத்தில், பள்ளியில், பொது இடங்களில் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு எதிராக வழக்குப் போட்டால்?
தங்களுடைய நிறைவேறாத ஆசைகளையும், தங்களால் விரட்டிப்பிடிக்க முடியாத விருப்பங்களையும் தங்கள் குழந்தைகளின் மீது ஏற்றிவைத்து ஒரு பொதிமாட்டைப் போல, அவர்களை விரட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்களின் மீதும், அவர்களைப் பைத்தியக்காரர்களாக்கிய இந்தச் சமூகமைப்பின் மீதும் விரும்பாத கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகள் வழக்குப் போட்டால்? தீர்ப்புச் சொல்ல நீதிபதிகளுக்கு நேரமிருக்காது. நீதிமன்றங்கள் குழந்தைகளின் புகார்களால் நிறைந்து வழியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.
லெபனானின் பெய்ரூட் நகரின் எளிய மக்களின் வாழ்க்கையை, வலியை, குழந்தைகளின் அவல நிலையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சொல்கிறார், “ஒரு குழந்தை தெருவில் உழைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அது அந்நாட்டின், அந்த அரசின் முழுமையான தோல்வி” என்று. வடமாநிலங்களில் இருந்து உழைப்பதற்காக இந்திய முழுவதும் சிதறிக்கிடக்கும் இளைஞர்களைப் பாருங்கள், அத்தனைபேரும் கல்வியில் இருந்து விலக்கம் செய்யப்பட்டவர்கள். ”இந்தத் திரைப்படம் என் கோபத்திலிருந்து பிறந்தது” என்று சொல்கிறார் இயக்குநர். சமநிலை இல்லாத இந்தச் சமூகமைப்பில் ஒவ்வோர் இயக்குநருக்கும் கோபம் வரவேண்டும்.
பணம் முன்னிறுத்தப்படாமல் கலை பிரசவிக்கப்பட வேண்டும். இது சாத்தியமா என்றால், சாத்தியம்தான் புதிய சிந்தனையோடு புறப்பட்டு வரும் இளைஞர்கள் நினைத்தால் செய்துவிடலாம். “நான் ஏழைக் குழந்தைகளைப் பற்றிப் படமெடுக்க விரும்பவில்லை, ஏன் அவர்கள் ஏழைகளாக மாற்றப்பட்டார்கள் என்கிற கேள்வியைத்தான் எடுக்க விரும்பினேன்” என்று சொல்லும் இயக்குநரின் வார்த்தைகளை நீங்கள் இங்கும், எங்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
இறுதியாக, இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்ட லெபானானில் இந்த உலகத்தின் மகத்தான கவிஞர் ஒருவர் இருந்தார். எனக்கு மட்டுமல்ல, கவிதையை நேசித்த ஒவ்வோர் இதயத்தாலும் நேசிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதைகளில் அவர் காட்டிய அழகான பெய்ரூட் வேறு. இப்போது இயக்குநர் நாடின் லபாக்கி காட்டும் பெய்ரூட் வேறு. கலீல் ஜிப்ரான் தன்னுடைய புகழ்பெற்ற ‘தீர்க்கதரிசி’ என்கிற நூலில் குழந்தைகளுக்காக ஓர் உரைநடைக் கவிதை எழுதியிருப்பார். அந்தக் கவிதையின் இன்னொரு வடிவமாகவும் அல்லது நீட்சியாகவும் இந்தத் திரைப்படத்தைப் புரிந்துகொள்ளலாம். நலங்கிள்ளியால் மொழிபெயர்க்கப்பட்ட அந்தக் கவிதை...
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர். அவர்கள் உங்கள் மூலமாக வந்தார்களே அல்லாமல் உங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும், உங்களுடைய உடைமைகள் அல்லர். நீங்கள் அவர்களுக்கு அன்பை மட்டுமே கொடுக்கலாம், உங்கள் எண்ணங்களையல்ல. ஏனெனில், அவர்களுக்கென்று வேறு எண்ணங்கள் இருக்கின்றன!
- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com