

குருவுடன் பிரபுதேவா
கறுப்பு வெள்ளை சினிமாக்களின் பொற்காலத்தில், திரை நடனம் என்பது அதிகமும் பரதமாகவே இருந்தது. வைஜெயந்திமாலா, பத்மினி, ராகினி, லலிதா, ஹேமமாலினி என்று புகழின் உச்சத்தில் ஒளிவீசிய நட்சத்திரங்களின் நாட்டிய நளினம், மூன்று தலைமுறைகளை மயக்கியிருக்கிறது.
அவர்கள் ஆடிய நடனக் காட்சிகள் இன்றைக்கும் மூத்த ரசிகர்களின் நினைவில் வாழ்கின்றன. ஆனால், அவர்கள் அசுரவேகத்தில் அபிநயித்த இலக் கணம் பிறழாத அசைவுகளுக்குப் பின்னால் இருந்த நடன ஆசிரியர்களைப் பற்றி நாம் நினைத்துப் பார்ப்பது அபூர்வம்தான்.
அப்படி மறக்கக்கூடாத மகத்தான நடன ஆசிரியர், பரதநாட்டியத்தின் மரபையும் மாண்பையும் திரைவெளிக்கும் மேடைக்கும் சமமாக அர்ப்பணித்தவர் உடுப்பி லட்சுமிநாராயணன். அவருடைய நூற்றாண்டு, குரு - சிஷ்ய மரபின் மகத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
திரைப் பங்களிப்பு
கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்து, ஓர் இளைஞராகச் சென்னைக்கு வந்து காஞ்சிபுரம் பாணி பரதக் கலையை அணுவணுவாகக் கற்ற ஒருவர், தனக்குக் கலையைக் கற்றுக்கொடுத்த மண்ணுக்கே தன் வாழ்நாள் முழுவதையும் கலைச் சேவையில் அர்ப்பணித் திருக்கிறார்.
ஒரு நடன குருவாக அவர் பங்களித்த திரைப்படங்களின் எண்ணிக்கை 250க்கும் மேல். ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் வெளிவந்த ‘சரஸ்வதி சபதம்’ தொடங்கி ‘கிருஷ்ண லீலா’ வரை புராணக் கதைக் களங்களைக் கொண்ட படங்களில், கடவுளர் கதாபாத்திரங்களுக்கான நடனங்களை இறையுணர்ச்சி ஏற்படும் வகையில் அமைத்துக் கொடுத்தவர். ‘ஹரிச் சந்திரா’ (1968) போன்ற வாய்மொழி வரலாற்றுக் கதைகளைக் கொண்ட படங்களிலும் அவரது பங்களிப்பு பேசப்படுகிறது.
அதேபோல் சமூகக் கதைளைக் கொண்ட திரைப்படங்களில் இடம்பெறும் நாடக, நடனக் காட்சி களுக்கு எந்த வகைப் பாரம்பரிய நடனம் என்றாலும், அவற்றின் ஒழுங்கும் தனித்துவமும் பிறழாமல் அதே நேரம் நவீனத்தின் சாயலையும் கலந்து நடன அசைவுகளை கம்போஸ் செய்து கொடுப்பதிலும், ஆடத் தெரியாத திரைக் கலைஞர்களை ஆட வைத்துவிடுவதிலும் விற்பன்னர் எனப் பெயர் பெற்றிருக்கிறார்.
‘கௌரவம்’, ‘பொன் ஊஞ்சல்’, ‘சுமதி என் சுந்தரி’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘கிரகப் பிரவேசம்’, ‘திருமலை தென்குமரி’ உள்பட அவருக்குப் புகழ் சேர்த்த சமூகத் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டுமே நூறைத் தொடும். பரதநாட்டியம், கதகளி, நாட்டுப்புற நடனங்கள் எனப் பல்வேறு வடிவங் களில் தனது அசாதாரணப் பன்முகத் திறனை அவர் வெளிப்படுத்தினார். தமிழ்த் திரையுலகில் அவருக்குக் கிடைத்த நற்பெயர் கன்னட சினிமாவிலிருந்தும் அவருக்கு அழைப்பைக் கொண்டுவந்தது.