

தமிழ்த் திரைப்படங்களில் விலங்குகள் வருவது புதிதல்ல. நாய் உயிரைக் காப்பாற்ற ஓடிவரும் என்றால், தமிழ் சினிமாவில் வரும் புலி கதாநாயகனைத் தாக்கும். கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நாயகன் அப்புவிடம் பயிற்சி பெற்ற சர்க்கஸ் புலி, வில்லன் நல்லசிவத்தைக் கொன்றதைப் பார்த்தோம்.
ஆனால், வைரங்கள் நிறைந்த ஒரு பெட்டியை, திருடனிடமிருந்து பறித்துக் கொண்டு ஒரு புலி காரில் ஏறித் தப்பிச்செல்லும் காட்சியை, தமிழ் சினிமா அதற்கு முன்னர் கண்டதில்லை. ரசிகர்கள் உற்சாகமாக ரசித்த இக்காட்சி, 1972இல் வெளிவந்த ‘காதலிக்க வாங்க’ படத்தில் இடம்பெற்றிருந்தது.
அந்தப் படத்துக்குக் கதை வசனம் எழுதி, அதைச் சொந்தமாகத் தயாரித்தவர் பதிப்புலகத்திலும் பத்திரிகை உலகிலும் தனித் தடம் பதித்த எழுத்தாளர் தமிழ்வாணன்தான். தேவகோட்டையைப் பூர்விகமாகக் கொண்ட லக்ஷ்மணன் - பிச்சம்மை தம்பதியின் மகனாக மே 5, 1926இல் பிறந்தவர் தமிழ்வாணன். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் ராமநாதன். பள்ளியிறுதி நாள்களில் ‘தமிழ் மணம்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்.
குடும்பச் சூழலால் மேல்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் புதுக்கோட்டையிலிருந்து வெளி வந்துகொண்டிருந்த ‘பொன்னி’ பருவ இதழில் உதவியாளராகச் சில காலம் பணிபுரிந்தார்.
பின்னர், திருச்சிக்கு வந்து ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே தமிழ்வாணனுக்குத் தமிழைச் சுவாரசியமாக எழுதக் கற்றுக்கொடுத்தவர் இலக்கிய ஆளுமை ந.பிச்சமூர்த்தி. காலம் அவரை அதே ‘கிராம ஊழியன்’ பத்திரிகையின் ஆசிரியராக உயர்த்தியது.
சென்னை வாழ்க்கை
திருச்சியிலிருந்து சென்னை வந்தபின், சக்தி காரியாலயத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘அணில்’ என்கிற சிறுவர் இதழுக்கு தமிழ்வாணன் ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல் திருப்புமுனை.
இவர் ‘அணில் அண்ண’னாக எழுதிக் குழந்தைகளின் அன்பைப் பெற்றது இங்கேதான். தனது தமிழை மேலும் மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் தமிழ்த் தென்றல் திருவிக நடத்திவந்த வகுப்புகளில் பயின்று, ‘தமிழ்வாணன்’ என்கிற புனைபெயரைச் சூட்டிக்கொண்டார்.
வானதி திருநாவுக்கரசுவுடன் இணைந்து 300 ரூபாயில் தொடங்கப்பட்டதுதான் ‘ஜில் ஜில்’ பதிப்பகம். நாலணா விலையில் (25 பைசா) ‘சிரிக்காதே’, ‘சுட்டுத்தள்ளு’, ‘சுட்டிப் பயல்’, ‘அல்வா துண்டு’, ‘நேருஜி வரலாறு’ என இவரின் பல புத்தகங்கள் விற்பனையில் சக்கை போடு போட்டன.
இந்தப் புத்தகங்கள் பதிப்பாளர் பி.வி.பார்த்தசாரதியின் பார்வையில் பட்டு, குமுதம் இதழின் ஆசிரியர் எஸ்.ஏ.பியிடம் வந்துசேர்ந்தார் தமிழ்வாணன். ‘கல்கண்டு’ முதலில் சிறுவர் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது.