

படங்கள் உதவி: ஞானம்
தமிழ் சினிமாவுக்கு இந்திய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்த படைப்புக் கலைஞர்களை ஏவி.மெய்யப்பன், எஸ்.எஸ்.வாசன், சி.வி.ஸ்ரீதர், கே.பாலசந்தர், கமல்ஹாசன், மணி ரத்னம் எனப் பட்டியலிடலாம். குறிப்பாக மணிரத்னம், புத்தாயிரத்தின் ‘ஆஃப் பீட்’ இந்தித் திரைப்படங்களின் திரைமொழியில் மாற்றங்கள் உருவாகத் தாக்கம் தந்தவர். அவரின் மாணவப் பருவத்தில் ‘நாம் இயங்க வேண்டியது சினிமாவில்தான்’ என்று ஒருவர் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றால் அவர் எஸ்.பாலசந்தர்.
80களின் தமிழ் சினிமாவில், யதார்த்த அலையைத் தொடங்கி வைத்த ‘உதிரிப்பூக்க’ளில் தமிழ் மண்ணின் வாழ்க்கையை எந்தக் கலப்படமும் இல்லாமல் காட்சிமொழியின் உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்துப் படமாக்கிக் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன். அவர், “என்னுடைய தெய்வம்” என்று எஸ்.பாலசந்தரை வணங்கும் அளவுக்கு அவரிடம் தாக்கம் பெற்றிருந்தார்.
‘உதிரிப் பூக்கள்’ 25 வாரங்கள் ஓடி வெற்றி விழா நடத்தப்பட்டபோது, அதற்குத் தலைமையேற்றுப் பேசிய எஸ்.பாலசந்தரின் பேச்சில், தாம் ஊன்றிய விதைகள் முளைக்கத் தொடங்கி விட்டன என்கிற பெருமிதம் இருந்தது. மகேந்திரனின் திரைமொழியை அவர் அவ்வளவு மனம் திறந்து பாராட்டிய மேடை அது. ஆனால், இந்தப் பாராட்டும் அங்கீகாரமும் அவரது காலத்தில் அவருக்குக் கிடைக்காமல் போனது பெருந்துயரம்!
நிகழாமல் போன மாற்றம்! - எஸ்.பாலசந்தர் ஓர் அபூர்வ முரண்பாட்டுக் கலவை. இசையைப் பொறுத்தவரை மரபை விட்டுக் கொடுக்காத பிடிவாதம் கொண்டவர். பாரம்பரிய இசையைப் புதுமை என்கிற பெயரால் சிதைப்பதில் அவருக்குத் துளியும் விருப்பம் கிடையாது. அப்படிச் செய்பவர்களையும், பாரம்பரிய இசையின் பெயரால் பொய்யான தகவல்களைப் பரப்பியவர்களையும் அவர் கடுமையாகச் சாடினார். அதே நேரம், “நாடகத்தின் குழந்தையாக சினிமா பிறந்தாலும் அது காட்சியின் கலை.
எனவே, காட்சி வழியாகவே கதைசொல்ல வேண்டும்; புதுமைகளை முயன்று பார்க்கத் தொழில் நுட்பம் சினிமாவுக்கு அதிகச் சாத்தியங்களைக் கடை விரித்துக் கொண்டே இருக்கும். தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் அதே வேளை, கதை சொல்வதில் நாம் இன்னும் தேர்ச்சிபெற வேண்டும்” என்று சினிமாவைப் புதுமைகளின் கலையாக, கலவையாகப் பார்த்தார்.
ஆனால், அத்தகைய எல்லா முயற்சிகளையும் ‘நாயக சினிமா’க்கள் தலையெடுக்கவிடாமல் செய்ததில், மாற்றம் விரும்பிய ஒரு திரைப்பட இயக்குநராக, நிகழாமல் போன மாற்றம் குறித்து மனம் வெதும்பி ஒதுங்கினார்.