

இந்தியத் திரையுலகம் இன்று ஓர் ஆபத்தான காலக்கட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியான நான்கு நாள்களில் 750 கோடி ரூபாய் என்கிற மலைக்க வைக்கும் வசூல், ஒரு திரைப்பட வெற்றியின் அடையாளமாக அல்லாமல், சமூக வீழ்ச்சியின் குறியீடாகத் தெரிகிறது.
‘துரந்தர் 2’ போன்ற வெறுப்பை வளர்க்கும் திரைப்படங் கள் கொண்டிருக்கும் ‘அல்ட்ரா வயலன்ஸ்’ (Ultra violence) என்கிற கட்டற்ற, வரம்பு மீறிய வன்முறை, மாஸ் மசாலா திரை மொழியின் மையமாகி வருகிறது. இதை வெறும் சினிமாதானே எனக் கடந்துபோக முடியாது.
ஏனென்றால், உலகுக்கு அன்பையும் அகிம்சையையும் போதித்த நமது இந்தியப் பண்பாட்டில் இவ்வகை கதையாடல்களும் திரைமொழியும் நஞ்சைக் கலந்து கொண்டிருக்கின்றன. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் கதைக்கரு, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, உருவாக்கம் ஆகியவை முதுகெலும்பாக இருக்க வேண்டும்.
ஆனால், ‘துரந்தர்’ வரிசைப் படங்களின் இயக்குநர் ஆதித்யா தர், அவருடன் இணைந்து திரைக்கதையை எழுதியவர்கள் வன்முறையை ஒரு விற்பனைப் பொருளாக (Commodity) திரைக்கதை நெடுகிலும் மாற்றியுள்ளனர்.
மனித உயிர்களுக்கு எந்தவித மதிப்பும் கிடையாது என்பதுபோல் கொடூரமான முறைகளில் படம் நெடுகிலும் பலர் கொல்லப்படுவதையும், கொல்லப்பட்ட மனிதச் சடலங்கள் சிதைக்கப்படுவதையும் ரத்தம் ஆறாக ஓடுவதையும் ‘மாஸ்’ காட்சிகளாகச் சித்தரித்துள்ளனர்.
ஒரு காட்சியில் நாயகனால் தூண்டப் படும் ஒரு தாதா கதாபாத்திரம், பழிக்குப் பழியாகப் பொது இடத்தில் தன்னுடைய எதிரி தாதாவை, கை கால்களைக் கட்டி வைத்து, கசாப்புக் கத்தியால் தலையை ஒரே வெட்டாக வெட்டி, அங்கே கூடி நிற்கும் அப்பகுதி மக்களிடம் தலையைத் தூக்கிக்காட்டுவதுடன், தலையைத் தரையில் போட்டுகால்பந்தைப் போல் உதைத்து விளையாடுகிறான்.
ஒரு துணைக் கதாபாத்திரமே இப்படிப்பட்ட கொடூர வன்முறையைச் செய்கிறது என்றால், அந்தப் படத்தின் நாயகன் ஹம்சாவாக வரும் ரன்வீர் சிங் ஏற்றுள்ள கதாபாத்திரம் எப்படியெல்லாம் விதவிதமாக மனிதர்களைக் கொல்லும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
நோக்கம் என்ன?
குறிப்பாக, ரன்வீர்சிங் போன்ற மாஸ் ஹீரோக்கள், கோடிக்கணக்கான இளைஞர் கள் தங்களைப் பின்பற்றுவார்கள் என்று தெரிந்தும், வன்முறையைத் தனது ‘ஹீரோயிச’த்தின் மையமாக அமைத்துக் கொள்வதும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் வசனங்களை ‘ஸ்டைல் ஸ்டேட் மென்ட்’களாகப் பேசி, இதுபோன்ற கதா பாத்திரங்களில் நடிப்பதும் ரசிகர் மன்றங் களை வன்முறைப் பட்டறைகளாக மாற்று வதற்குச் சமம்.
நட்சத்திரமாக மாறிவிட்ட நடிகர்கள் தங்களுக்குச் சமூகப் பொறுப் பென்று எதுவும் இல்லை என்று நினைப்பது, பணத்துக்காக - வசூல் சாதனைக்காக இளம் தலைமுறைப் பார்வையாளர்களின் மனதைச் சலனப்படுத்துவது மோசமான விளைவுகளை உருவாக்கும்.
இந்த வகைத்திரைவெளி வன்முறையைப் படைப்புச் சுதந்திரம் - வணிகப் பேராசை என இரண்டில் எதுவாகக் கருதினாலும் அது படைப்பாளி - முதலீடு செய்பவர் ஆகிய இருவரிடமும் தொழில் அறம் அறவே இல்லை என்பதையே காட்டுகிறது.