

பாப்லோ நெருடா தன்னுடைய கவிதை ஒன்றில், ‘பூமியின் தோல் எங்கெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது’ என்று எழுதியிருப்பார். இந்தப் பூமியில் பெண்களின் வாழ்க்கையும் எங்கெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இந்தியாவாக இருந்தாலும் சரி, இத்தாலியாக இருந்தாலும் சரி, எந்த மாற்றமுமில்லை.
இந்த உலகத்தில் அங்கீகரிக்கப்படாதது எதுவென்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்? என்னைக் கேட்டால் பெண்களின் உழைப்பு என்று சொல்வேன். கவனிக்கப்படவில்லை என்றாலும் காட்டிலும் வீட்டிலும் வெளியிலும் எனக் காலங்காலமாக உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களை மேலும் சுரண்டுவதைத் தவிர என்ன செய்திருக்கிறது இந்தச் சமூகம்?
‘சினிமா என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல் கருவி’ என்று பிரகடனப்படுத்திய இத்தாலிய இயக்குநர் ஜீசெப்பே டி சாண்டிஸ், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான இத்தாலிய சமூகத்தில் இருந்துகொண்டு திரைப்படங்களை எடுத்தவர். போருக்குப் பிறகான ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அந்தச் சமூகத்தை, அந்தச் சமூகத்தின் வாழ்க்கையை, வலியை, வாழ்விற்கான போராட்டத்தைத் திரைப்படத்தில் காட்ட முயற்சி செய்தவர்.
பூமியின் இதயத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைப்போல, போர் என்பது ஒரு சமூகம் சேகரித்து வைத்திருக்கும் செல்வங்களை, இருப்பிடங்களை, மருத்துவமனைகளை, வழிபாட்டுத்தலங்களை, கல்விக்கூடங்களை, பொருளாதாரக் கட்டமைப்புகளை என மொத்தத்தையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, வெறும் சக்கையாகப் போட்டுவிட்டுப் போகக்கூடியது.
அப்படித்தான் இத்தாலியின் சகலமும் இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டுப் பரிதாபகரமான நிலைமையில் இருந்தது. போரைத் தொடங்கியவர்களும், போரைத் தொடர்ந்தவர்களும், போரால் லாபமடைந்தவர்களும் போய்விட்டார்கள். ஆனால், மக்கள்? வறுமையிலும் பட்டினியிலும் வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வதங்கிக்கொண்டிருந்தார்கள். உண்மையைச் சொன்னால் வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.
அந்தக் கசப்பான உண்மையை உலகத்தின் கண்களுக்குக் காட்ட வேண்டுமென்று நினைத்தார்கள், ரொசெல்லினி, விட்டோரியா டி சிகா, லுக்கினோ விஸ்காண்டி, ஜீசெப்பே டி சாண்டிஸ் போன்ற இயக்குநர்கள். பழமைவாதிகள் தடுத்துப் பார்த்தார்கள். திருச்சபையும்கூடத் திருக்கருத்துகளை உதிர்த்துப் பார்த்தது. ஒரு நல்ல கலைஞன் உண்மையின் பக்கம் உறுதியாக நிற்கக்கூடியவன் என்பதைத் தங்களுடைய திரைப்படங்களின் வழியாக நிரூபித்துக் காட்டினார்கள்.
‘கசப்பு அரிசி’ திரைப்படத்தின் தலைப்பே வாழ்வின் கசப்பை வெளிப்படுத்திவிடக் கூடியது. திரைப்படம் அந்தக் கசப்பை இன்னும் ஆழமாகக் காட்டுகிறது. 1949இல் வெளிவந்த இந்தத் திரைப்படம் இன்றைய இந்தியச் சமூகத்திற்கும் பொருந்தக்கூடியது.
கதை
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலம்.
இத்தாலியின் வெர்செல்லி மாகாணத்தில் அரிசி பயிரிடப்பட்டு வந்தது. இத்தாலியின் சகல பக்கங்களிலும் இருந்து மே மாதத்தில் வயல் வேலைகளுக்காக வெர்செல்லி நோக்கிப் புறப்படுவார்கள் பெண்கள். நாற்பது நாள்கள் அங்கேயே தங்கியிருந்து வேலையை முடித்துவிட்டுத் திரும்புவார்கள். பாலியா, நோவாரா, வெர்செல்லியில் பரந்து கிடக்கும் சமவெளியில் லட்சக் கணக்கான பெண்களின் கைகள் அழியாத தடங்களை விட்டுச் சென்று கொண்டிருந்தது.
அப்படி ஒரு மே மாதத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண்கள் வெர்செல்லி நோக்கிப் பயணிப்பதற்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்கள். வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் எப்படி இருக்கிறது என்பதற்கு, அங்கு நிறைந்திருக்கும் அந்தப் பெண்களின் கூட்டமே சாட்சியாக இருக்கிறது. ரயிலும் ரயில் நிலையமும் உழைக்கும் பெண்களால் நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது. ரயில் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் திருட்டுக் குற்றங்களைச் செய்துகொண்டிருக்கும் வால்டரும், அவன் காதலியான பிரான்செஸ்காவும் வேறு ஊருக்குத் தப்பித்துச் செல்வதற்காக அங்கு வருகிறார்கள். காவலர்கள் வால்டரைக் கண்டறிய, பிரான்செஸ்காவிடம் திருடிய நகையைக் கொடுத்து, வெர்செல்லி நோக்கிப் பயணமாகும் பெண்களோடு கலந்து பயணிக்கச் சொல்கிறான். உழைக்கும் பெண்களோடு கலந்து ரயிலில் வெர்செல்லி நோக்கிப் புறப்படுகிறாள் பிரான்செஸ்கா. ரயிலில் இருக்கும் சில்வானா உதவி செய்கிறாள்.
ஒப்பந்தம் செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட பெண்கள் தங்குவதற்கான இடம் தயார்செய்து கொடுக்கப்படுகிறது. ஒப்பந்தம் செய்யப்படாமல் சட்டவிரோதமாகவும் சில பெண்கள் வேலைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களோடு பிரான்செஸ்காவும் இருக்கிறாள். அவர்களுக்கு வேலை தர முடியாது என்றும், அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என்றும் மேற்பார்வையாளர் சொல்கிறார்.
விடிகிறது. அந்தப் பரந்த வயல்வெளியில் நாற்று நடுவதற்காகத் தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் நிலத்திற்குள் சாரைசாரையாக இறங்குகிறார்கள் பெண்கள். இளம்பெண்களை நாற்று நடுவதற்கும், வயதானவர்களை அறுவடைக்கும் எனப் பிரித்து அனுப்புகிறார்கள் நில உடைமையாளர்கள். சட்டவிரோதமாக வந்திருக்கும் பெண்கள் தனியாக நின்றுகொண்டிருக்கிறார்கள். பிரான்செஸ்கா அவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறாள்.
“அவரகள் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்குத் திறமையாகவும் வேகமாகவும் வேலை செய்தால், கனவிலும்கூட நம்மைத் திருப்பி அனுப்புவது பற்றி யோசிக்க மாட்டார்கள் அல்லவா” என்று சொல்ல, ஏற்றுக்கொண்ட மற்ற பெண்களும் நிலத்தில் இறங்குகிறார்கள். நாற்றுகள் கொடுக்கப்பட நடவு ஆரம்பமாகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களைவிடவும் சட்டவிரோதமாக வந்திருக்கும் பெண்கள் வேகமாக வேலை செய்ய, சில்வானா உள்ளிட்ட பெண்கள் கோபமடைகிறார்கள். மேற்பார்வையாளர் பேசக் கூடாது என்று கத்துகிறார். ஆனால், பாடலாம். சில்வானா பாடத் தொடங்க, எல்லாரும் இணைந்துகொள்கிறார்கள். கடைசியில் சண்டையில் முடிகிறது. அங்கு வரும் நேர்மையான மனிதனான மார்கோ சண்டையை நிறுத்தி, மீண்டும் வேலை செய்ய அனுப்பி வைக்கிறான்.
பிரான்செஸ்கா தன்னுடைய கதையை சில்வானாவிடம் பகிர்ந்துகொள்கிறாள். மார்கோ சில்வானாவை நேசிக்கிறான். ஆனால், பிரான்செஸ்காவைத் தேடிவரும் அவளுடைய காதலன் வால்டரின் மீது சில்வானாவிற்கு விருப்பம் ஏற்படுகிறது. அவளின் காதலைப் பயன்படுத்தி அங்கும் அடுத்த திருட்டிற்கு ஆயத்தமாகிறான் வால்டர்.
கிடைக்கப் போகும் கொஞ்சம் நெல்லுக்கும் கொஞ்சம் பணத்திற்கும் நேரகாலம் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அறுவடை தொடங்குகிறது. சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் நெல்லைத் திருட திட்டம் போடுகிறான் வால்டர். வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறவளான சில்வானாவும் அதற்குத் துணை போகிறாள்.
மழை பெய்யத் தொடங்கிவிடுவதால் ஐந்து நாள்கள் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் பெண்கள். அதற்காகப் பத்து பவுண்டுகள் குறைத்திருக்கிறோம் என்று சொல்கிறார் மேற்பார்வையாளர். பதறிப்போன பெண்கள், சாக்குப்பையை எடுத்துப் போட்டுக்கொண்டு,அந்த மழையிலும் வயலிற்குள் இறங்கி வேலை செய்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத ஒரு பெண் தொழிலாளி இன்னும் மோசமடைகிறாள்.
அரிசியைத் திருடிச் செல்ல திட்டமிட்ட வால்டர், சில்வானாவின் திட்டத்தை, பிரான்செஸ்காவும் மார்கோவும் சேர்ந்து முறியடிக்கிறார்கள். கடைசியில் வால்டர் கொல்லப்படுகிறான். சில்வானா வேலைக்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட அரிசி மூட்டையை உடல்நலம் சரியில்லாத பெண்ணுக்குக் கொடுத்துவிட்டு, தன்னுடைய செயலுக்கு வருந்தி, தற்கொலை செய்துகொள்கிறாள். அறுவடையும் முடிகிறது.
பெண்கள் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. சில பெண்கள் துணி தைப்பதற்கும், சில பெண்கள் பருத்தி அறுவடைக்கும், சில பெண்கள் தொழிற்சாலை வேலைகளுக்கும் திரும்பிச் செல்கிறார்கள். அடுத்த மே மாதம் மீண்டும் இந்தச் சமவெளியை நோக்கி, வயல் வேலைக்காக வருவார்கள் என்பதாக முடிகிறது திரைப்படம்.
தத்துவமும் இலக்கியமும் படித்த முதல் திரைக்கலைஞரான ஜீசெப்பேவின் மூன்றாவது படம் கசப்பு அரிசி. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், தன்னுடைய திரைப்படங்களில் அடிப்படை மனித உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தவர். “என்னுடைய திரைப்படங்களில் மனிதனை, பெண்ணை, சமூகத்தை எப்படி இருக்கின்றனவோ அப்படியே காட்ட விரும்பினேன்” என்று சொன்னவர். அதைக் கச்சிதமாகக் காட்டவும் செய்தவர்.
திரைப்படத்தைப் பாருங்கள். இந்தியச் சமூகத்தின் உழைக்கும் பெண்களின் வாழ்க்கையும் போராட்டமும் உங்கள் இதயத்தை நிறைத்துக்கொள்ளும்.
- கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com