

2002இல் வெளியான இந்தத் திரைப்படம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, தங்கப்பனை விருதை வென்றது. சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் சிறந்த நடிகர் என மூன்று ஆஸ்கர் விருதுகளை வாங்கியது. மேலும், 2006இல் பிபிசி வெளியிட்ட 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெற்றது. இன்னும் பல விருதுகள். இன்னும் பல பாராட்டுகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக உலகம் முழுவதிலும் நிறைந்திருக்கும் திரைக்காதலர்கள், தங்கள் இதயத்தில் நிரந்தர இடமுண்டாக்கி இந்தத் திரைப்படத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள். அப்படி என்ன இருக்கிறது?
உயிர் வாழ்வதற்காக ஒரு மனிதனால் எவ்வளவு துயரங்களைத் தாங்கிக்கொள்ள முடியும், உயிர் வாழ்வதற்காக ஒரு மனிதன் எவ்வளவு வலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியும் என்கிற கேள்விகளுக்கு இந்தத் திரைப்படத்தின் நாயகனான வ்லாடிஸ்லாவ் ஸ்பில்மனின் வாழ்க்கை பதிலாக இருக்கும்.
சாதாரணமான நேரத்தில் மனிதன் சாதாரணமாகத்தான் இருக்கிறான். அசாதாரணமான நேரத்தில் அவன் அசாதாரணமான காரியங்களைச் செய்யத் தவறுவதில்லை. ஸ்பில்மனும்கூட அப்படித்தான் வாழ்வின் மீதான பேராசையால் அசாதாரணமான காரியங்களைச் செய்கிறான். ஸ்பில்மனின் வாழ்க்கையைப் பார்த்து முடிக்கும்போது, உங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகவே உணர்வீர்கள்.
வ்லாடிஸ்லாவ் ஸ்பில்மன் போலந்து நாட்டைச் சேர்ந்த மிக முக்கியமான பியானோ இசைக்கலைஞர். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம் அவனுக்கும் பியானோவிற்கும் இடையில் இடைவெளியை உண்டாக்குகிறது. யூதர்கள் என்கிற காரணம் போதுமல்லவா. நாஜிகளால் கொல்லப்படுவதற்குக் கூட்டம் கூட்டமாக வதைமுகாம்களுக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் ஸ்பில்மன் மட்டும் தப்பித்துவிட, குடும்பத்தினர் மொத்தமாகக் கொல்லப்படுகிறார்கள். குண்டுவீச்சில் சிதிலமடைந்து கிடக்கும் வார்சா நகரத்தில் பசியோடும் தாகத்தோடும் பயத்தோடும் நாள்களைக் கடத்திய நினைவுகளைக் குறிப்புகளாக எழுதி வைக்கிறான் ஸ்பில்மன்.
யுத்தம் முடிந்து நிலைமைகள் சீரான பிறகு அந்தக் குறிப்புகளைப் புத்தகமாக வெளியிடுகிறான். அந்தப் புத்தகத்தின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ரோமன் பொலன்ஸ்கி. என்னதான் குறிப்புகள் கையிலிருந்தாலும் கச்சிதமாக எடுத்துமுடிக்க இன்னொரு காரணமும் இருக்கிறது.
ரோமன் பொலன்ஸ்கியின் குழந்தைப் பருவமும்கூட நாஜி ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ்தான் துயரமாகக் கழிந்தது. ஆஷ்விச் வதைமுகாமில் பொலன்ஸ்கியின் அம்மா இறந்துபோனார். நாஜி ஆக்கிரமிப்பின், வதைமுகாமின் கொடுமைகளை உள்ளும் புறமும் அறிந்திருந்தார். ரத்தமும் சதையுமாகப் பார்த்த, கேட்ட, அணுஅணுவாக அனுபவித்த அத்தனையும் படத்தில் வெளிப்பட்டன.
எத்தனையோ நடிகர்களை பார்த்து தவிர்த்து, மேலும் தேடிக் கொண்டிருந்த பொலன்ஸ்கிக்கு அமெரிக்க நடிகரான அட்ரியன் பிராடி பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. இயல்பாகவே வேதனை குடிகொண்டிருக்கும் முகம் அட்ரியனுக்கு வாய்த்திருந்தது. திரைக்கதைக்கு, இயக்கத்திற்கு ஈடாக ஒரு நடிகராக தன்னுடைய பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருப்பார் அட்ரியன். இழப்பின் வேதனை நிறைந்த அந்த முகம், உயிர் வாழ்வதற்கான பேராசை ஒளிந்திருக்கும் அந்த முகம் சிறிதுநேரத்தில் உங்களை முழுமையாக ஆட்கொண்டுவிடும் என்று உறுதியாகச் சொல்வேன்.
பல காட்சிகளை சொல்ல வேண்டும் என்றாலும் ஒரு காட்சியைச் சொல்லித்தான் ஆகவேண்டும். வெளியே ராணுவத்தினர், ஒளிந்திருக்கும் அறையில் உயிருக்கு உயிரான பியானோ. சத்தமாக வாசிக்க முடியாது. பியானோவைத் தொடாமல் கட்டைகளுக்கு மேலே காற்றில் வாசிக்கும் காட்சி இதயத்தை நொறுக்கிவிடும். அற்புதமான நடிப்பை வழங்கிய அட்ரியன் அத்தனை விருதுகளுக்கும் தகுதியானவர்.
இந்தத் திரைப்படம் யுத்தப் பின்னணியில் எடுக்கப்பட்டது. யுத்தமென்றால் சாதாரண யுத்தமல்ல, இரண்டாம் உலக மகா யுத்தம். ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி, போலந்தைக் கைப்பற்றி போரைத் தொடங்கி வைக்கிறது. ஸ்பில்மேன் போலந்தின் வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக்கொண்டிருக்கிறான். பக்கத்தில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க, ஸ்பில்மேன் நிறுத்தாமல் வாசித்துக்கொண்டிருக்கிறான். அந்தக் கட்டிடத்தின் மீதே குண்டுவிழுகிறது. ஓடுகிறார்கள் எல்லாரும். அந்தப் பரபரப்பிலும் டோரோட்டோ என்பவள் அவனுடைய பியானோ இசையைப் பாராட்டுகிறாள்.
வீட்டிற்கு வருகிறான் ஸ்பில்மேன். நாஜிகள் யூதர்களை வெளியேறச் சொல்லியிருப்பதால் குடும்பத்தினர் எல்லாரும், எங்காவது போய் நிம்மதியாக வாழ்ந்துகொள்ளலாம் என்று புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
நாஜிகளின் அதிகாரத்தில் எப்படி இருந்தது போலந்து என்று தெரிந்துகொள்ளப் பல காட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் மானுடத் தன்மையை அசைத்துப் பார்க்கும் நாஜிகளின் பல செயல்களில் ஒரு செயலைச் சொல்லத்தான் வேண்டும். ஸ்பில்மேனும் டோரோட்டோவும் சந்திக்கிறார்கள். இவன் பியானோ இசைக்கலைஞன், அவளோ செல்லோ இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாள். இரண்டு கருவிகளும் அன்பைப் பரிமாறிக்கொள்கின்றன.
காபி குடிக்கலாம் என்று முடிவுசெய்து உணவகத்திற்குச் செல்கிறார்கள். உணவகத்திற்கு வெளியே ‘யூதர்களுக்கு அனுமதி இல்லை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. டோரோட்டோ கோபம்கொள்கிறாள். “எங்காவது பூங்காவிற்குச் சென்று பேசிக்கொண்டிருக்கலாம்” என்கிறாள். “பூங்காவிலும் யூதர்களுக்கு அனுமதி இல்லை” என்கிறான் ஸ்பில்மேன்.
இது மனிதத் தன்மைக்கே எதிரானது என்று வெடிக்கிறாள் டோரோட்டோ. “சரி, சாலையோர இருக்கையிலாவது உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம்” என்கிறாள். “அங்கு உட்காரவும் யூதர்களுக்கு அனுமதி இல்லை” என்கிறான் ஸ்பில்மேன். கலங்கிப் போகிறாள் டோரோட்டோ. வலியை மறைத்துக்கொண்டு, அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறான் ஸ்பில்மேன். நிலைமைகள் தீவிரமடைகின்றன.
நகரின் ஒட்டுமொத்த யூதர்களும் கையில் எடுக்க முடிந்த பொருள்களோடு இடம்பெயரத் தொடங்கிவிட்டார்கள். ஸ்பில்மேனின் குடும்பமும் சாலையில் சென்றுகொண்டிருக்க, வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள் டோரோட்டோ. முகாம்களுக்குக் கொண்டு செல்வதற்காக ஊருக்கு வெளியே உட்கார வைக்கப்படுகிறார்கள் யூதர்கள்.
நீண்ட பயணத்தின் முடிவில் பசியில் அழுதுகொண்டிருக்கின்றன குழந்தைகள். குழந்தையின் தாகத்திற்கு இரண்டு சொட்டுத் தண்ணீர் கிடைக்குமா என்று கையேந்தி நடந்து கொண்டிருக்கிறாள் அம்மா. எதிர்காலத்தை நினைத்துக் கதறி அழுது கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.
வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிறார்கள் ராணுவத்தினர். ஸ்பில்மேன் மட்டும் அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறான். குண்டுவீச்சால் எரிந்து கொண்டிருக்கும் நகரத்திற்குள் ராணுவத்தின் கண்ணில் படாமல் ஒளிந்து சென்று கொண்டிருக்கிறான். பழைய நண்பன் ஒருவனைச் சந்திக்கிறான்.
அவனோடு கட்டாயத் தொழிலாளியாகப் பதிவு செய்துகொண்டு கட்டிட வேலைகளில் ஈடுபடுகிறான். கண்களுக்கு முன்னால் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படும் யூதர்களைப் பார்க்கப் பார்க்க பதற்றம் அதிகரிக்கிறது அவனுக்கு. பியானோவைத் தீண்டிக் கொண்டிருந்த விரல்கள் செங்கல் சுமந்துகொண்டிருக்கின்றன. வேலை செய்துகொண்டிருக்கும்போது ஒருநாள் அவனுக்குத் தெரிந்த பாடகி ஒருத்தியைப் பார்க்கிறான். உதவிகேட்டு நண்பன் மூலமாகக் கடிதம் அனுப்புகிறான். சுதந்திரமான வாழ்க்கை மீது ஆசை அவனுக்கு அதிகமாகிறது. அங்கிருந்து தப்பித்துச் செல்கிறான் ஸ்பில்மேன்.
நண்பர்களின் உதவியுடன் ஒவ்வோர் இடமாக மாறிமாறித் தங்குகிறான். ராணுவத்தினரை எதிர்த்து யூதர்கள் சில இடங்களில் தாக்குதல் நடத்துவதால், நாஜிகளின் தாக்குதல் வீரியமடைகிறது. அவர்களின் பகுதிக்குள்ளே பசியோடும் தாகத்தோடும் சுற்றிக் கொண்டிருக்கிறான். திருமணமாகியிருக்கும் டோரோட்டோவும் கணவனோடு சேர்ந்து அவனுக்கு உதவுகிறாள்.
இக்கட்டான நேரத்தில் மனிதர்களின் இதயங்களில் அன்பு சுரக்கும் என்பதற்குச் சாட்சியாக இருக்கின்றன அவர்களின் உதவிகள். கடைசியில் தங்கியிருக்கும் கட்டிடத்தின் மீதே பீரங்கித் தாக்குதல் நடக்க, அங்கிருந்து தப்பிச்சென்று ஜெர்மன் ராணுவத்தினர் வசிக்கும் பகுதிக்குச் செல்கிறான். உணவு தேடி வீட்டிற்குள் அலைந்துகொண்டிருக்கும்போது ஜெர்மன் அதிகாரி பார்த்துவிடுகிறான். பியானோதான் அவனைக் காப்பாற்றுகிறது. உணவு கொடுத்து உதவி செய்கிறான் அதிகாரி. சோவியத்தின் செஞ்சேனை போலந்தைக் கைப்பற்ற நாஜி ராணுவத்தினர் வெளியேறுகிறார்கள். புதிய வாழ்க்கையின் மகிழ்ச்சியில் செஞ்சேனை வீரர்களை நோக்கி ஓடுகிறான் ஸ்பில்மேன்.
நண்பர்களே, ஹிட்லர் காலத்தின் யூதராகப் பிறக்கவில்லை என்பதற்காக, நெதன்யாகுவின் காலத்தின் பாலஸ்தீனனாகப் பிறக்கவில்லை என்பதற்காக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். மனைவியோடும் பிள்ளைகளோடும் உற்றார் உறவினர்களோடும் சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழக் கிடைத்த இந்த வாழ்க்கை வரம்தான். வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை, இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் நீங்களும் இப்படித்தான் நினைத்துக்கொள்வீர்கள்!
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com