தடயம்: புறக்கணிக்கப்பட்டவனின் புலனாய்வு | ஓடிடி திரைப் பார்வை

தடயம்: புறக்கணிக்கப்பட்டவனின் புலனாய்வு | ஓடிடி திரைப் பார்வை
Updated on
3 min read

சமூகத்தில் மலிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் திரை வெளிக் கதாபாத்திரங்கள் சட்டென்று ஈர்க்கும். பணியடுக்கில் தகுதியுள்ளவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், தந்திரம் தெரிந்தவர்கள் முன்னேறுவதும் நிறுவனம் மற்றும் அதிகார மையங்களில் ‘நியூ நார்மல்’ ஆகவே மாறிவிட்டது. காவல் துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இத்தொடரில் வரும் துணைக் காவல் ஆய்வாளர் அதியமான் (சமுத்திரக்கனி) கூர்மையான புலனாய்வு திறன் கொண்ட அதிகாரி. அவருடன் சக துணை காவல் ஆய்வாளராக இருந்தவர், அதியமானின் புலனாய்வுத் திறமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்ந்திருப்பார்.

அவருடைய வார்த்தையில் சொல்வதென்றால் “அவனுக்குப் பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு!” என நக்கல் செய்யப்படுவார். ஆனால், அதியமான் ஜேம்ஸ் பாண்டை போலச் சல்லாபமோ சாகசமோ செய்பவர் அல்ல; காவல் நிலையைப் பணி நேரம் முடிந்தபின் மாலையில் பள்ளிச் சிறார்களுக்கு இலவச டியூசன் எடுப்பவர். காவல் நிலையத்து எதிரேயுள்ள டீ கடையில் பிஸ்கட் நனைத்து ரசனையாக டீ குடிக்கும் தொப்பை இல்லாத காவலர்.

அவர் பணியாற்றுவது ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான திருவள்ளூரில் உள்ள பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில். விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்துவிட்டவர். இன்னும் 30 நாள்களே அவர் நிலையத்துக்கு வந்து பணி புரிவார் என்கிற சூழ்நிலையில், அந்தக் காவல் நிலையத்துக்குக் காவல் ஆய்வாளராக வந்து பொறுப்பேற்கிறார் லட்சுமி (ஷிவதா).

அவர் பொறுப்பேற்ற வேலை போதாத வேளை! அடுத்தடுத்து இரண்டு இரட்டைக் கொலைகள் நடக்கின்றன. இரண்டுமே நடுத்தர வயதைக் கடந்த கணவன் - மனைவி கொலையாகிறார்கள். கொலையாகிக் கிடக்கும் கணவரின் அரை​ஞாண் கயிற்றையும் மனை​வி​யின் தாலிக்கொடியையும் மட்டும் அறுத்து திருடப்பட்டிருக்கின்றன.

தவிர சுவரில் ரத்தத்தால் ஒரு கேள்விக் குறியும் வரையப்பட்டிருக்கிறது. முதலில் அதியமான் மீது அவநம்பிக்கையுடன் அவரை அணுகும் லட்சுமி, பின் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனது சிறப்புப் புலனாய்வுக்குழுவில் அவரை வலிந்து சேர்த்துக்கொள்கிறார். அதன்பிறகு அவர், அதியமானுடன் இணைந்து கொலையாளியை நெருங்க முடிந்ததா என்பதை, தலா 20 நிமிடங்கள் கால அளவு கொண்ட ஏழு எபிசோட்களில் விரிகிறது தடயம்.

எஸ்.ஐ. அதியமானாக சமுத்திரக் கனியும் இன்ஸ்பெக்டர் லட்சுமியாக ஷிவதாவும் மாறுபட்ட காம்போவில் தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமல் புலனாய்வில் இணைந்து முன்னேறும் காட்சிகளில் எந்தவித எக்ஸ்ட்ரா பில்ட் அப்பும் இல்லாமல் இயல்பாக ஈர்க்கிறார்கள். ஆந்திரா - தமிழ்நாட்டு எல்லையில் தமிழும் தெலுங்கும் கதாபாத்திரங்கள் மத்தியில் ஊடாடுவதைப் பெரிதாக மொழிக் குழப்பம் இல்லாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறார் தொடரை எழுதி, இயக்கி நவீன்குமார் பழனிவேல்.

திறமை இருந்தும் பதவி உயர்வுக்காக யாரிடமும் கெஞ்சாத அல்லது வளைந்து கொடுக்காத, தந்திரம் தெரியாத ஆனால், புத்திசாலியான அதிகாரியாக, மனித நேயம் மிக்கவராக அலட்டல் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஒருவருக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரமே, அவரை இன்னும் சிறந்த புலனாய்வாளராக மாற்றுகிறது என்பது கதையின் சுவாரஸ்யமான முரண்.

ஒரு காட்சியில், விசாரணை முடிந்து நிலையத்துக்குத் திரும்பும் வழியில், ஒரு அத்துவான எல்லையோரக் கிராமத்தில் வண்டி சண்டித்தனம் செய்து நின்றுவிடுகிறது. வேறு வழியில்லாமல் அருகிலிருக்கும் வீட்டில் இரவு தங்கி, உணவருந்தித் திரும்பிய நன்றியை அவர் காட்டும் விதம் நெகிழ்ச்சியாக, ‘சமுத்திரக்கனி’யின் சமூக அக்கறை பிம்பத்துக்கு நெருக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அந்த நீளமான காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதில் கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளும் விதமும் முதுகெலும்பை சில்லிட வைக்கின்றன.

‘குடும்பப் பெண்ணுக்கு போலீஸ் வேலையெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று போலீஸ் வேலையை ராஜினாமா செய்யச் சொல்லும் எதிர்கால மாமியாருடன் மல்லுக்கட்டாமல், அமைதியாக அவரை ஹேண்டில் செய்வதில் தொடங்கி, ‘இழப்பதற்கு எதுவுமில்லை’ என்று வாழும் அதியமான் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு, மரபுரீதியான வழிகளைத் தாண்டிச் சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பவர் என்பதை உணர்ந்து, அவரை நம்பிப் பயணிக்கும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அதிகார வர்க்கத்தினர் தங்கள் தவறுகளை மறைக்க எளிய மனிதர்களைப் பலியாடுகள் ஆக்கும்போது, அதன் தொடர்ச்சியை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும், அதன் விளைவுகள் அப்பாவி மக்களையும் காவி கேட்கும் என்பதைத் தொடர் பேசுகிறது. அதேபோல், ஆந்திர - தமிழக காவல் துறையினர் இடையிலான எல்லைச் சண்டையும் அதிகாரப் போட்டியும் போகிற போக்கில் குண்டூர் காரம் போல் தொடரில் சுள்ளென்று பதிவாகியிருக்கிறது.

தொடரில் மூன்று முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். தமிழக ஆந்திர எல்லையோரக் கிராமங்களில் வறண்ட நிலப்பரப்பு, தனிமையில் தெரித்துக் கிடக்கும் அத்துவான வீடுகள் ஆகியவற்றை இருள் படர்ந்த சட்டங்களுக்குக் கொண்டுவந்து மர்மத்தைக் கூட்டும் ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.கே.

அடுத்து கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆர். சரவணன் தலைமையிலான கலை இயக்கம் கிடைத்த பட்ஜெட்டில் மிகப் பொருத்தமாகச் செய்யப்பட்டிருப்பது. குறிப்பாகக் கொலை நடக்கும் வீடுகளை அவ்வளவு யாதார்த்தமாக செட் அப் செய்திருக்கிறார்கள்.

மூன்றாவதாக ரத்தம் சற்று அதிகமாகவே தெறித்துள்ள கதைக் களத்துக்கு அட்டகாசமான இசையை வழங்கியிருக்கும் விபின் பாஸ்கர். இவரது இசை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெளியாகப் புரிந்திருக்கும்.

கதைக் களம் கொண்டிருக்கும் மைய உணர்ச்சியைத் தன் பின்னணி இசையால் நிலை நிறுத்துவதில் தொடர்ந்து ஓடிடி பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறார். சட்டமும் நீதியும், வேடுவன் ஆகிய ஜீ5 ஓடிடியின் ஒரிஜினல் உள்ளடக்கங்களுக்கு அட்டகாசமான இசையை வழங்கிய இவர், தற்போது ‘தடய’த்திலும் தன்னுடைய இசைத் தடயத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

ஒரு புலனாய்வுப் புலி புறக்கணிக்கப்படும்போது, அவருக்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று விரக்தியில் சோர்ந்து போவது, மற்றொன்று தனது திறமையை நிரூபிக்கக் காத்திருப்பது. புறக்கணிக்கப்படுபவரின் உழைப்பைத் தட்டிப் பறிக்கலாம்.

ஆனால், அதன் கூர்மையை மழுங்கடிக்க முடியாது என்பதை அதியமான் உணர்த்துகிறார். அவர் குற்றவாளிகளைப் பொறுமையாக ஆனால், துல்லியமாகக் கண்டறிகிறார். ஆனால், குற்றவாளிகளை உருவாக்கியவர்களை யார் வேட்டையாடுவது என்பதைப் பற்றி தடயம் மௌனம் சாதித்துவிட்டது. ஒருகால் சீசன் 2 வருமோ என்னவோ?

தொடர்புக்கு jesudoss.c@hindutamil.co.in

தடயம்: புறக்கணிக்கப்பட்டவனின் புலனாய்வு | ஓடிடி திரைப் பார்வை
Dahaad: சாதிய, பாலின பேதத்துக்கு எதிராக கர்ஜிக்கும் காவல் அதிகாரி அஞ்சலி | திரை தேவதைகள் 06

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in