

ஐம்பதுகளில் புகழ்பெற்று விளங்கிய அமெரிக்க நாவலாசிரியை பேட்ரீஷியா ஹைஸ்மித் (Patricia Highsmith). அவர் எழுதிய ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெய்ன்’ என்கிற நாவலை, ஹாலிவுட்டின் ‘சஸ்பென்ஸ் மன்னர்’ ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் படமாக்கி வெற்றி கொடுத்ததைப் பார்த்தோம்.
அதேபோல் அந்தப் படத்தின் தீவிரத் தாக்கத்துடன் தமிழில் 2011இல் ராஜன் மாதவ் எழுத்து, இயக்கத்தில் ‘முரண்’ திரைப்படம் வெளியானதைச் சுட்டிக்காட்டினோம். ஹாலிவுட், கோலிவுட் என்றில்லை; எழுத்தாளர் பேட்ரீஷியாவின் பல படைப்புகள் உலகின் பல மொழி படமாக்கப்பட்டுள்ளன.
பேட்ரீஷியா ஹைஸ்மித்தின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த, வெற்றி கரமான நாவல் ‘த டேலண்டட் மிஸ்டர் ரிப்ளி’ (The Talented Mr. Ripley). அதை அவர் 1955இல் வெளியிட்டார். அதன் ஹாலிவுட் படமாக்கம் பற்றியும், அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வெற்றி கரமான தமிழ்ப்படம் குறித்தும் இந்த வாரம் பார்க்கலாம்.
‘த டேலண்டட் மிஸ்டர் ரிப்ளி’ நாவலில் வரும் முதன்மைக் கதாபாத்திரம் ’டாம் ரிப்ளி’. அதை வைத்து பேட்ரீஷியா மொத்தம் ஐந்து நாவல்களை எழுதினார். அவை உலகெங்கும் பிரபலமாயின.
இந்த நாவலைக் கொண்டு ஹாலிவுட்டில் முதலில் எடுக்கப்பட்ட ‘பர்பிள் நூன்’ (Purple Noon) என்கிற படம் 1960இல் வெளிவந்தது. அதன்பின் 1999இல் நாவலின் அதே தலைப்பிலேயே ‘த டெலண்டட் மிஸ்டர் ரிப்ளி’ படம் வெளியானது. இந்தப் படமே நமக்கு முக்கியமானது.
சிசிடிவி இல்லாத காலம்
டாம் ரிப்ளி என்பவன் ஓர் ஏழை. எப்போதுமே சமுதாயத்தில் பெரிய இடத்துக்கு வந்துவிட வேண்டும் என்று நினைப்பவன். பணம், வசதியான வாழ்க்கைக்காக ஏங்குபவன். அதற்காக ஏமாற்று வேலைகளும் செய்பவன். ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரை ஏமாற்றி, அவரது மகனுடன் ஒரு பெரிய கல்லூரியில் படித்ததாக நம்பவைத்துவிடுவான்.
அவர் டாம் ரிப்ளியை நம்பி, நிறையப் பணத்தைக் கொடுத்து, இத்தாலியில் வாழ்ந்துகொண்டிருக்கும் டிக்கி என்கிற தனது மகனை மீண்டும் தன்னிடமே (அமெரிக்காவுக்கு) கொண்டுவந்து சேர்க்கும் படி சொல்வார். இத்தாலிக்கு டாம் ரிப்ளி பயணமாவான். அங்கே டிக்கியைச் சந்திப்பான். டிக்கியும் ஒரு பணக்காரன் என்பதால் அவனது வசதியான வாழ்க்கையை டாம் கவனிப்பான்.
அதேபோல் வாழவேண்டும் என்று நினைப்பான். தன்னுடன் வலிய வந்து நட்பாகப் பழகும் டாம் ரிப்ளியை, டிக்கி ஒதுக்குவான். டாம் ரிப்ளியை அவனுக்குப் பிடிக்காது. டிக்கியின் பணக்கார நண்பன் ஃப்ரெட்டி என்பவனுக்கு டாம் ரிப்ளியின் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நாளில் டிக்கியுடன் கையால் துடுப்பு போடும் படகில் பயணிப்பான் டாம் ரிப்ளி. அப்போது அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் டிக்கியைத் துடுப்பாலேயே அடித்துக் கொன்றுவிட்டு, டிக்கியின் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொள் வான். தான் தான் டிக்கி என்று எல்லாரையும் நம்பவைப்பான்.