

புதுமுக இயக்குநர், புதுமுகத் தயாரிப்பாளர், புதுமுக நாயகன், புதுமுக நாயகி எனப் பல புதிய திறமைகள் இணையும் படங்கள் பெரும்பாலும் ஏமாற்றிவிடுவது தற்கால வழக்கம். ஆனால், ‘ரெட் லேபிள்’ அதை உடைத்திருக்கிறது (புதிய முயற்சிகளை ஆதரிக்க நடுத்தர மக்கள் திரையரங்கு வராமல் தவிர்ப்பதற்கு, டிக்கெட்டை விட, பாப்கார்ன், காபி, பப்ஸ் விலை அதிகம் என்பதும் முக்கிய காரணம்).
இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருப்பதுடன் தன்னுடைய முதல் தயாரிப்பாக இப்படத்தை, திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு தரமான பொழுதுபோக்கு சஸ்பென்ஸ் த்ரில்லராக கொடுக்க வேண்டும் என்ற இப்படத்தின் நாயகன், தயாரிப்பாளர் லெனின் என்பவரின் முதல் முயற்சியைப் பாராட்டி வரவேற்கலாம்.
மிக மிகக் குறிப்பாக, இப்படத்தில் கதாசிரியர், இயக்குநர் இரண்டுபேரும் வேறு ஆள்கள். ஒருவருடைய சுமையை இன்னொருவரிடம் ஏற்றக் கூடாது என்கிற நல்ல புரிதலுடன் கூடிய தயாரிப்பாளராக முதல் படத்திலேயே முகம் காட்டியிருக்கிறார். இனி படத்தின் விமர்சனத்துக்குள் நுழைவோம்.
கதையின் மையமாக இருப்பவன் கதிர் (லெனின்). தன்னுடைய கல்லூரிக் காலத்தில் வீண் சண்டை, வெட்டி அரசியல் என சதா பிரச்சினைகளில் சிக்கி, ‘கேம்பஸ் ஹீரோ’வாக வலம் வந்தவன். படித்த காலத்தில் உள்ளூர் காவல் ஆய்வாளரின் கோபத்தைச் சம்பாதித்துக்கொண்டவன். காலப்போக்கில் வாழ்க்கையைச் சீர்செய்துகொண்டு, தன்னுடைய வேலை, காதல், எளிய வாழ்க்கை என அமைதியான பாதையில் நடைபோடுகிறான்.
ஆனால், அவன் படித்த கல்லூரியில் தற்போது நடக்கவிருக்கும் மாணவர் பேரவைத் தேர்தல் அவனை மீண்டும் உள்ளே இழுக்கிறது. பதவியிலிருக்கும் உள்ளூர் அரசியல்வாதியின் (ஆர்.வி.உதயகுமார்) மகனை எதிர்த்துப் போட்டியிடும் ஹரீஷ் என்கிற நல்ல மாணவனைத் தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுடன் இணைத்துக் களமாடுகிறான். அப்போது எதிர்பாராத விதமாக வளாகத்தில் ஒரு கொலை நடந்துவிடுகிறது.
கடந்த காலத்தில் கதிர் சுமந்து திரிந்த கெட்ட பெயரால், இப்போது அந்தக் கொலைப்பழி அவன் மீதே திரும்புகிறது. தான் நிரபராதி என்பதை நிரூபிக்கவும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், தனது காதலியின் (அஸ்மின் யாசர்) உதவியுடன் கதிர் போராடுகிறான். அவனது போராட்டத்தின் விறுவிறுப்பான பக்கங்கள்தான் கதை.
முதல் பாதியில், கதிரின் காதலி யார், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை யார் ஆகிய கேள்விகளுக்கு விடை தெரியும்போது, வில்லன் அரசியல்வாதியின் கோபம் கதிர் மீது தீவிர வெறியாக வேகமெடுப்பது நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இரண்டாம் முறை கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் கதிரின் புத்திசாலித்தன நகர்வுகள் ரசிக்க வைக்கின்றன.
ஒரு பக்கம் அரசியல்வாதி, இன்னொரு பக்கம் சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காவல் ஆய்வாளர், இதனோடு கடந்த காலத்தால் விளைந்த நிகழ்காலச் சுமையை அவன் சுமந்தபடி அதை ஒளித்து வைக்க மறைவிடம் தேடத் தொடங்கும்போதே நம் பதற்றத்தை அதிகரித்துவிடுகிறார் கதாசிரியர். நாயகன் மீது விழுந்த இவ்வளவு சிக்கல்களையும் இரண்டாம் பாதியில் அவர் எப்படி அவிழ்க்கப்போகிறார் என்கிற ஆவலை உருவாக்கிவிடுகிறது பொன்.பார்த்திபனும் திரை எழுத்து.
முதல் பாதியில் சில வழக்கமான அம்சங்களிருந்தாலும் இரண்டாம் பாதியில் தலைகாட்டும் ஒருசில சில தர்க்கப் பிழைகள் தவிர்த்து, அழுத்தமான சம்பவங்களில் நம்மைப் பிடித்து இருக்கையோடு இருத்தி வைத்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் அவர்.
திறமையான திரைக்கதைக்கு பட்ஜெட் எவ்வளவு அனுமதிக்குமே அந்த அளவுக்கே காட்சியாக்கம் செய்திருக்கிறார் இயக்குநர். இது சிறு படங்களுக்கே உரிய சிக்கல்தான் என்றாலும் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு அந்தக் குறையை இல்லாமல் செய்துவிடுகிறது.
உண்மையான கொலையாளி யார்?, தன்னை காப்பாற்றிக் கொள்ள லெனின் எவ்வாறு போராடினான்? அவனது கடந்த காலக் கறைகளையும் அவனால் இப்போது கழுவிக்கொள்ள முடிந்ததா என்கிற முழுமையை நோக்கி நகரும் இரண்டாம் பாதியில், காவல்துறையின் விசாரணை, நண்பர்கள் மற்றும் எதிரிகளிடம் மறைந்திருக்கும் ரகசியங்கள் ஆகியன சரியான சூழ்நிலையில் அடுத்தடுத்து வெளிப்படுகின்றன.
கல்லூரி நாள்களின் முரட்டுத்தனம், நிகழ்காலத்தின் மன உளைச்சல், அதைத் தாண்டிய புத்திசாலித்தனம் என கதிர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் கதிர் கதாபாத்திரத்தைச் சுமந்து கவர்ந்துவிடுகிறார் லெனின். உடல்மொழிக்கெல்லாம் வேலையே இல்லை என்று சொல்லும்விதமாக வசனங்கள் வழியாகவே வில்லத்தனம் காட்டி நடித்திருக்கிறார் ஆர்.வி.உதயகுமார்.
நாயகிக்கு கிளைமாக்ஸ் வரையிலுமே கதையில் உரிய பங்கிருப்பதால் அதை உணர்ந்து அழகாகவும் பொறுப்பாகவும் நடித்திருக்கிறார் அஸ்மின். முனிஷ்காந்த் சமீப காலமாக நகைச்சுவையைக் குறைத்துக்கொண்டு குணச்சித்திரமாக மாறத் தொடங்கியிருப்பதை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது.
இரண்டாம் பாதியில் மிகுந்திருக்கும் சஸ்பென்ஸ் தன்மைக்கு வலிமை சேர்க்கும்விதமாக அமைத்திருக்கிறது சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு. அதற்கு அடுத்த இடத்தில் கூர்மையாகக் காட்சிகளைக் கத்தரித்து வேகம் கூட்டியிருக்கும் லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் செம்ம! இரண்டாம் பாதியின் பதற்றத்தைக் கூட்டுவதில் கைலாஷ் மேனனின் இசையும் முக்கியப் பங்கை வகித்திருக்கிறது.
புதுமுக நாயகனை வைத்துக்கொண்டு, ஒரு நட்சத்திர நாயகனுக்குரிய கதையை அலுப்புத்தட்டாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத். கடந்த காலம் என்பது எப்போதும் இறந்த காலம் கிடையாது, அதன் தொடர்ச்சியை நாம் நிகழ்காலத்தில் அனுபவித்தே ஆகவேண்டும், அல்லது நிகழ்காலத்தில் கடந்த காலத்தில் செய்த பிழைகளைச் சரி செய்யவேண்டும் என்கிற கருத்தை ரசிக்கும்படியான சினிமாவாகக் கொடுத்திருக்கிறார்கள்.