Sarvam Maya: நிவின் பாலியின் ஃபீல் குட் கவிதை | ஓடிடி திரை அலசல்

Sarvam Maya: நிவின் பாலியின் ஃபீல் குட் கவிதை | ஓடிடி திரை அலசல்

Published on

ஒரு காலத்தில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த நிவின் பாலி, தொடர் சறுக்கல்களுக்குப் பிறகு தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் திரைப்படம் தான் 'சர்வம் மாயா'. அகில் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெற்று வருகிறது.

கேரளாவில் பாரம்பரியமிக்க நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த பிரபேந்து (நிவின் பாலி) தனது தாயின் இறப்புக்குப் பிறகு நாத்திகராக மாறியவர். தனது குடும்பத் தொழிலான புரோகிதத்தில் ஈடுபாடு இல்லாமல், கிடார் கலைஞராக  சினிமாவில் சாதிக்கத் துடிக்கிறார். திடீரென ஏற்படும் பண நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக தனது உறவினர் ரூபேஷுடன் (அஜூ வர்கீஸ்) சேர்ந்து புரோகித உதவியாளராகப் பணிபுரிய வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகிறது. ஒருமுறை தற்செயலாக ஒரு சிறுவனுக்குப் பேய் ஓட்டும் பூஜையில் கலந்துகொள்ளும் போது, ஒரு பெண் ஆவி (ரியா ஷிபு) பிரபேந்துவுடன் ஒட்டிக்கொள்கிறது. அந்த ஆவி யார்? அவர் ஏன் பிரபேந்துவைப் பின்தொடர்கிறார் என்பதே மீதிக்கதை.

இது ஒரு வழக்கமான பேய் படம் அல்ல. திகில் காட்சிகளுக்குப் பதிலாக, நகைச்சுவைக்கும் மனித உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கேரளாவில் இருக்கும் தனது பாரம்பரியான குடும்பம், மறுபுறம் நவீன மும்பையின் இசை உலகம். இந்த இரண்டு முரண்பட்ட உலகங்களுக்கு இடையே மாட்டிக்கொள்ளும் நிவின் பாலி கதாபாத்திரம்தான் கதையின் மையப்புள்ளி. 

புகழ்பெற்ற இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகன் தான் இப்படத்தின் இயக்குநர் அகில் சத்யன். திரைக்கதை எங்கும் அதீத திணிப்பு இல்லாமல், ஒரு நதி போல மிக இயல்பாக நகர்கிறது. குறிப்பாக, நிவின் பாலிக்கும் டெலுலு என்று அழைக்கப்படும் அந்த பெண் ஆவிக்கும் இடையிலான உரையாடல்கள் திரைக்கதையின் பெரும் பலம். அவை எங்கும் போரடித்து விடாமல் கொண்டு சென்றதில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். 

இரண்டாம் பாதியில் அந்த ஆவியின் கடந்த காலத்தைத் தேடிச் செல்லும் காட்சிகள், மர்மத்தை விட உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. திகில் காட்சிகளுக்கு வாய்ப்பிருந்தும் அதை நோக்கி செல்லாமல் கதையை இவ்வளவு மென்மையாக, 'ஃபீல்-குட்' பாணியில் நகர்த்தியது சிறப்பு.

நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் ரிலாக்ஸ்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 'பிரேமம்' காலத்து துறுதுறுப்பும், அவரது அப்பாவியான முகபாவனைகளும் கதைக்கு கைகொடுத்துள்ளன.

சமூக வலைதளங்களில் பிரபலமான ரியா ஷிபு படத்தின் மற்றொரு பலம். தொடக்கத்தில் வழக்கமான கிரிஞ்சு ஹீரோயின் கதாபாத்திரமோ என்று யோசிக்க வைத்தாலும் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கேரள சினிமாவின் மற்றொரு சிறந்த கண்டுபிடிப்பு.

ஜென் ஸீ ஆவியாக, பயமுறுத்தாமல், குறும்புத்தனங்களுடன் மனதைக் கவர்கிறார். இவருக்கும் நிவின் பாலிக்கும் இடையிலான அந்தத் உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அஜு வர்கீஸ், பிரீத்தி முகுந்தன், வினீத், மெதில் தேவிகா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறு கதாபாத்திரங்களில் முத்திரை பதித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்தின் முதுகெலும்பு. இது இசை சார்ந்த கதை என்பதால், பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வை மிகச் சரியாகக் கடத்துகின்றன. சரண் வேலாயுதத்தின் ஒளிப்பதிவு, கேரளாவின் அழகை அதன் இயல்பு மாறாமல் படம்பிடித்துள்ளது.

மொத்தத்தில், 'சர்வம் மாயா' குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு இனிமையான கவிதை போன்ற திரைப்படம். க்ளைமாக்ஸில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் வன்முறைப் படங்களுக்கு மத்தியில் ஒரு மாற்றத்தை விரும்புபவர்கள் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.  

Sarvam Maya: நிவின் பாலியின் ஃபீல் குட் கவிதை | ஓடிடி திரை அலசல்
Dhurandhar: தேசபக்தி முலாம் பூசிய ‘பக்கா’ ஆக்‌ஷன் த்ரில்லர் | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in