ஒண்டி முனியும் நல்ல பாடனும்: திரைப் பார்வை - சாதியின் பசியும், சடங்கின் அரசியலும்!

ஒண்டி முனியும் நல்ல பாடனும்: திரைப் பார்வை - சாதியின் பசியும், சடங்கின் அரசியலும்!

Published on

சாதியின் படிநிலையில், ஒரே சாதி அல்லது இடைநிலைச் சாதியில் உள் ஒடுக்குதலுக்கு ஆளாகும் மனிதர்களின் பாடுகள் நிறைந்த கிராமிய வாழ்க்கை தமிழ் சினிமாவில் அதிகமும் பேசப்படாத ஒன்று. கடந்த 2019-இல் லீனா மணிமேகலை இயக்கத்தில் வெளியான ‘மாடத்தி’ அதன் ஒரு பகுதியைக் காத்திரமாகப் பேசியது.

தற்போது, நாட்டார் வழிபாட்டில் ஊறிப்போன நம்பிக்கையை, சாதியைப் பகடையாக வைத்து உள் ஒடுக்குதலில் ஈடுபடும் செல்வச்செருக்கு கொண்ட மனிதர்களின் ஆட்டம் எந்த எல்லைவரை நீளும் என்பதைக் கவனிக்கத்தக்கப் படைப்பாக வெகு யதார்த்தமான காட்சிமொழியில் விரித்துக் காட்டுகிறது ‘ஒண்டி முனியும் நல்லபாடனும்’.

கொங்கு வட்டாரத்தின் தனித்துவம், அதன் பேச்சு வழக்கு, அதற்குள் ஊடாடும் தனிமொழியும் பிராந்தியச் சொற்களும் எனலாம். அப்படித்தான் பண்ணையார் என்ற சொல் அங்கே ‘பண்ணாடி’யாக இருக்கிறது. பாடுபடுபவன் என்கிற சொல் ‘பாடன்’ என்று பேச்சு வழக்கில் வழங்கப்படுகிறது.

கதை நடக்கும் கொங்கு கிராமத்தின் ஒரே காவல் தெய்வம் ஒண்டி முனி. அதற்கான கோயில் ஒரு காலத்தில் ஓர் இடைநிலைச் சாதிக் குடியானவரின் நிலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஊரில் உள்ள குடியானவர்களின் நிலங்களையெல்லாம் வளைத்துப் போட்டுவிட்ட ஆதிக்கச்சாதி நிலச்சுவான்தாரனா பெரிய பண்ணாடியின் (கதிரேசன்) நிலத்துக்குள் வந்துவிட்டது.

இதனால் பெரிய பண்ணாடி மனம் வைத்தால்தான் அந்தக் கோயில் பக்கமே அடி வைக்க முடியும் என்ற நிலை. இதற்கிடையில் அந்தக் கோயிலில் படையல் வைத்து ஆட்டுக்கிடா பலியிடும் ஆண்டு அறுவடைத் திருவிழா சடங்கில், ஒரு வித்தியாசமான முதல் மரியாதை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, சாமி அரிவாள் கொண்டு ஆட்டின் தலையை ஒரே வெட்டில் உடல் வேறு தலை வேறாகச் சாய்க்கும் உரிமைதான் அந்த முதல் மரியாதை.

இதைச் சின்ன பண்ணாடியின் குடும்பம் கைவசம் வைத்திருக்கிறது. அவருக்குக் குழந்தை இல்லை என்கிற காரணத்தைக் காட்டி அந்த உரிமையையும் பெரிய பண்ணாடி கைப்பற்றிக்கொள்கிறார். இது பிரச்சினையாகி, அந்தக் கோயிலுக்குப் படையல் போடுவதையே அவர் நிறுத்திவிட்டார். தவிரக் கோயிலுக்கு அன்றாடப் பூஜையில்லாமல் கிராமவாசிகள் அண்டமுடியாதபடி போட்டு வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த ஏழை விவசாயியான நல்லபாடன் (பரோட்டா முருகேசன்) ஒண்டி முனிக்குக் கிடாய் ஒன்றை நேர்ந்து கொண்டு வளர்த்து வருகிறார். ஆனால் அந்தக் கிடாயை சாமிக்குப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்த வழியில்லாத நிலையில், அதற்குத் தாமே முன்வந்து வழிவிடுகிறார் பெரிய பண்ணாடி! அவர் மனம் மாறியதன் பின்னணியில் இருப்பது மனிதாபிமானமா? அல்லது சடங்கையும் நம்பிக்கையும் தன்னுடைய லாப அரசியலுக்குள் வைக்கும் வில்லங்க ஆட்டமா? நல்லபாடனுக்கு அவரது கிடாவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் படம்.

சாதி ஒன்றாக இருந்தாலும் பணம், கல்வி, வேலை இல்லையென்றால், அவனை ஒடுக்கும் சாதியின் கொடிய ஆதிக்கப்பசியைச் சித்தரிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் கொங்கு கிராமிய வாழ்க்கையின் வெளித்தெரியாத பக்கத்தை நமக்குக் காட்டுகிறது. அதேபோல், எந்த ஊதியமும் கொடுக்காமல் சக மனிதர்களின் உழைப்பை எப்படியெல்லாம் சுரண்டலாம் என்பதைச் சித்தரித்த விதமும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் பி. சுகவனம் தமிழ் சினிமாவுக்கு இன்னும் பல யதார்த்தப் படைப்புகளைக் கொடுப்பார் என்கிற நம்பிக்கையைத் தருகிறது.

நல்லபாடனின் மகனுடைய பணத்தில் மது அருந்தவும் அவன் வீட்டுக் கோழி, ஆடுகளை வெட்டிச் சமைத்து உண்ணவும் செய்யும் ஆதிக்கச் சாதி இளைஞர்கள், ‘எங்கக் கூட பழகிட்டு எங்க வீட்டு பிள்ளையோட பழகுவியா?’ என்று அவனை நையப்புடைக்கும் காட்சி ஒன்றே போதும், ‘சாதிக்குப் பணமோ உணவோ தீண்டாமை அல்ல’ என்பதைச் சொல்ல!

நல்லபாடனின் மகளுடைய திருமண வாழ்க்கை, மகனுடைய காதல், சாமிக்கிடாயை அவர் வளர்க்கும்விதம், பெரிய பண்ணாடியுடனான கொடுக்கல் வாங்கல் உறவுகள் என அக்கதாபாத்திரத்தின் முட்டல்கள், முறுகல்களை ஏற்கத்தக்க முரண்களுடன் படைத்திருக்கிறார் திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர். நல்ல பாடனாக நடித்திருக்கும் பரோட்டா முருகேசனும் பெரிய பண்ணாடியாக நடித்திருக்கும் கார்த்திகேசனும் நல்ல தெரிவு. நல்லபாடனின் மகளாக வரும் சித்ரா நடராஜன் வெகு யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

கிடா கோயில் படையல் பலிக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது மொத்தக் கிராமமும் காறி சோறு உண்பதை ஒரு பெரும் கனவாக வரித்துக்கொள்வதில் இயல்பான நகைச்சுவை வழிந்தோடுகிறது. கோங்கு கிராமத்தின் நிலப்பரப்புக் காட்சிகளை நன்றாகவே நமக்கு விரித்து வைக்கிறது விமலின் கேமரா. பின்னணி இசையில் நடராஜன் சங்கரன் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்புக் காட்டியிருந்தால் இசை பேசப்பட்டிருக்கும்.

சின்னச் சின்னக் குறைகளைக் கடந்து கொங்கு வட்டாரத்தின் உள்ளடங்கிய வாழ்க்கையின் வெளித்தெரியாத நாட்டார் வாழ்வியலையும் அதற்குள் ஊடாடும் சாதியின் கொடுக்கையும் வீரியம் குறையாமல் நமக்குப் படையல் வைத்திருக்கிறது இந்தப் படைப்பு.

ஒண்டி முனியும் நல்ல பாடனும்: திரைப் பார்வை - சாதியின் பசியும், சடங்கின் அரசியலும்!
The Family Man 3 Review: நிதானமும் வன்முறையும்... கிட்டியதா நிறைவான அனுபவம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in