

காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது ஓர் அழகிய உணர்வு. ஆனால், இன்றைய 'ஜென்-ஸி' தலைமுறை காதலைப் பெரும்பாலும் 'ஆப்'களில் தேடுகிறது. காதல் மலரும் களம் என்பது ஸ்மார்ட்போன் திரைக்குள் அடங்கும் உரையாடலாகச் சுருங்கிவிட்டது. விரல் நுனியில் விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி வந்த பிறகு, இதயங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்ததா அல்லது அதிகரித்ததா என்கிற கேள்வி மிக முக்கியமானது.
இப்படியொரு நவீன காலக் கேள்வியோடு தொடங்குகிறது ‘நீ ஃபாரெவர்’. ஒருபுறம் அல்காரிதம்களால் காதலை அளவிடத் துடிக்கும் தொழில்நுட்பம், மறுபுறம் திரைக்கதையை மெருகேற்ற நிஜக் காதலை சோதனைக் களமாக்கத் துடிக்கும் கலை ஆர்வம் என இரு வேறு துருவங்கள் ஒரு போலிப் பிணைப்பில் இணைந்தால் என்னவாகும்?
தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், ஒரு துளி உண்மையான அன்புக்கும் பாரம்பரியமான குடும்பப் பாசத்துக்கும் டிஜிட்டல் காதல் ஈடாகாது என்பதைச் சுவாரசியமான திருப்பங்களோடு சொல்ல முயன்றுள்ளது அறிமுக இயக்குநர் அசோக்குமார் கலைவாணி.
சென்னையில் வசிக்கும் ஆப் டெவலப்பர் அஜய் (சுதர்சன் கோவிந்த்), காதலர்களுக்கான பிரத்தியேக ‘நீ ஃபாரெவர்’ செயலியை உருவாக்குகிறார். அதன் நம்பகத்தன்மையைச் சோதிக்கவும், முதலீட்டாளர்களைக் கவரவும் ஒரு பெண்ணைக் காதலிப்பது போல நடித்து ‘ஆராய்ச்சி’ செய்யத் திட்டமிடுகிறார். அதே சமயம், தனது முதல் படமாக ஒரு யதார்த்தமான காதல் கதையை எழுதத் துடிக்கும் உதவி இயக்குநர் மதி (அர்ச்சனா ரவி), தயாரிப்பாளரின் அறிவுரையின்படி நேரடி அனுபவத்திற்காக ஒரு இளைஞனைக் காதலிப்பது போல நடித்து தன் திரைக்கதைக்கு கேஸ் ஸ்டடி ‘இன்புட்’களை ஏற்றிக்கொள்கிறார். இந்தப் போலி காதல் நாடகம் நிஜமான உணர்வுகளாக மாறும்போது ஏற்படும் சிக்கல்களே படத்தின் மீதிக்கதை.
தத்தமது சுயலாபத்துக்காக ‘டிரபிள்’ என்கிற செயலி மூலம் இணையும் நவயுக ஜோடியின் ‘போலி காதல்’, ஒரு கட்டத்தில் எவ்வாறு நிஜமான உணர்வுகளாக மாறுகிறது என்பதற்கு இயக்குநர் வைத்திருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அளவான நகைச்சுவையும் முதல் பாதிப் படத்தின் திரைக்கதையில் ஊடாடுகிறது.
இரண்டாம் பாதிக் கதையின் கதை சென்னையின் நவீன சூழலிலிருந்து கிராமத்து சென்டிமென்ட் பாதைக்குத் திரும்பும்போது அஜய்யின் குடும்பப் பின்னணி, அவனது தாய்-தந்தையின் பிரிவு, கண்டிப்பான தாத்தா ஆறுமுகத்தின் (ஒய்.ஜி. மகேந்திரன்) பிடிவாதம் என உணர்ச்சிகரமான பிளாஷ்பேக்குகளால் நிறைகிறது. ஒரு நவீன யுகக் காதல் கதைக்குள் மதிப்பு மிக்க குடும்ப அமைப்பின் தேவையையும் அது தொடர்பான தேடலையும் பொருத்திய விதத்துக்காகவே இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அஜய் ஆக வரும் சுதர்சன் கோவிந்த், ஒரு சாதுவான ஆனால் திறமையான இளைஞனாகத் தனது பங்களிப்பை நேர்மையாக வழங்கியுள்ளார். குறிப்பாகக் குடும்பப் பாசம் மற்றும் காதல் வலியை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு யதார்த்தம். மதியாக வரும் அர்ச்சனா ரவி, ஒரு நவீனக் காலத்துப் பெண்ணாகத் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மூத்த கலைஞர் ஒய்.ஜி. மகேந்திரன், அனுபவம் வாய்ந்த நடிப்பால் படத்தின் இரண்டாம் பாதியைத் தாங்கிப் பிடிக்கிறார். வித்யா, நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கச்சிதம். ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு வண்ணமயமான மெருகைத் தந்திருக்கிறது. அஸ்வின் ஹேமநாத்தின் பின்னணி இசை உணர்ச்சிகரமான எல்லாக் காட்சிகளுக்கு உணர்வைக் கூட்டியிருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதலும் உறவுகளும் கையடக்கக் கருவிகளுக்குள் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. ஆப்களால் நிறைந்த இன்றைய உலகத்தில் உண்மையான காதலின் இடத்தையும், காலங்கள் கடந்தும் மாறாத குடும்ப விழுமியங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முயற்சியில் தென்றலாக வருடுகிறது இயக்குநர் அசோக்குமார் கலைவாணியின் ‘நீ ஃபாரெவர்’.