

‘அந்த நாள்’ | படங்கள் உதவி: ஞானம் |
உறைந்த நிலையில் ‘அந்த நாள்’ (1954) படத்தின் முதல் ஷாட் திரையில் ஒளிரும். அதன் மீது படத்தின் இயக்குநர் எஸ்.பாலசந்தரின் மர்மத் தொனி கொண்ட குரல், எந்தச் சூழ்நிலையில் இந்தக் கதை தொடங்குகிறது என்பதைக் கூறும்: அந்த நாள்.. மறக்க முடியாத ஒரு நாள்! ‘1943ஆம் வருடம், அக்டோபர் 11ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜப்பானியர் சென்னையின் மீது குண்டு வீசினர்.
அன்று சென்னையில் எங்கும் பீதி தாண்டவமாடியது. மறுநாள் காலை, திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்…’ என ‘வாய்ஸ் ஓவர்’ கூறி முடித்ததும், முதல் காட்சியின் முதல் பிரேம் இருள் சூழ்ந்திருக்க, அதன் மீது ‘டூமில்…!’ எனக் கைத்துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கும். இரண்டாவது ஷாட்டில் சிவாஜி கணேசன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தபடி யாரையோ நம்பமுடியாத அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே கீழே விழுவார்.
மூன்றாவது ஷாட், சுடப்பட்ட கைத்துப்பாக்கியிலிருந்து புகை வெளியேறுவதையும் அதை ஒரு கை பிடித்திருப் பதையும் காட்டும். நான்காவது ஷாட்டில் துப்பாக்கி குண்டை வயிற்றில் வாங்கிய சிவாஜி கணேசன் துடித்தபடி மரணத்தைத் தழுவுவார்.
71 ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு திரைப்படத்தின் தொடக்கம் இருக்கும் என்று அன்றைக்குப் பார்வையாளர்கள் எதிர் பார்க்கவே இல்லை! படத்தின் முதல் காட்சி யின் மூன்றாவது ஷாட்டிலேயே நாயகன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோவான் என்று நினைக்கவில்லை.
அவனைக் கொன்றது யார்? எதற்காகக் கொன்றார்கள் என்பதை, அவனுடன் தொடர்புடைய கதைமாந்தர்கள் அவரவர் கோணத்தில் தரும் மாறுபட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில், கொலை செய்தவர் இவராக இருப்பாரோ, அவராக இருப்பாரோ என ‘சஸ்பென்ஸ்’ என்கிற உணர்ச்சி நிலையில் தங்களை உயர்ந்த இடத்துக்கு இட்டுச்செல்லும் என்று எதிர்பார்க்க வில்லை.
அந்த அளவுக்குப் படம் முழுவதும் என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் உணர வைத்த, ஓர் அசாதாரண சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் படத்தை, பிளாஷ் பேக் உத்தியில் கொடுத்தவர் எஸ்.பாலசந்தர்.
முதல் முன்மாதிரி: சிறார் நடிகராகத் திரையுலகில் அறிமுகமாகி, நாயக நடிகராக உயர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக, இயக்குநராக, இசையமைப் பாளராக, எடிட்டராகப் பன்முகம் காட்டிய எஸ்.பாலசந்தரின் திரைப் பயணத்தில் ‘அந்த நாள்’ திருப்புமுனையை ஏற்படுத்திய படம். பத்துக் கும் அதிகமான பாடல்கள் இடம்பெற்றால் தான் அது தமிழ் சினிமா என்றிருந்த 50களில், பாடலே இல்லாமல் வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசன் எதிர்மறை நாயகன்.
தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த இந்தப் படம்தான் தமிழ் சினிமாவின் முதல் ‘நுவா’ (Film Noir) வகை சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர். அந்த வகைப் படத்துக்கான முதல் தமிழ் முன்மாதிரி. அகிரா குரசோவாவின் ‘ரஷோமான் விளைவை’ முதன்முதலில் தமிழில் வெற்றிகரமாக முயன்ற படமும் அதுதான். பின்னாளில், இந்தியாவின் சிறந்த இசை மேதைகளில் ஒருவராக எஸ்.பாலசந்தர் பெரும் புகழ்பெற்றார்.