

நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆவணப்பட படப்பிடிப்பின்போது கிருஷ்ணாம்மாளுடன் இயக்குநர் ரவிசுப்ரமணியன்
சமீபத்தில் ரவிசுப்பிரமணியனின் நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆவணப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே அது ஒரு நல்ல சமூக நிகழ்வைக் கண்ட அனுபவமாக, முக்கியமாக ஆழ்ந்த சிந்தனைத் தூண்டலாக அமைந்தது. இந்தப் படத்துக்கும் நான் எழுப்பும் விமர்சனக் கேள்விகளுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் ஓர் ஆவணப்பட இயக்குநராக இயங்கி வரும் என்னுள் இந்தப் படம் சில கேள்விகளை எழுப்பியது.
ஓவியர்கள் மற்றும் கலைக்கூடங்கள் உருவாக்குகிற கேட்லாக்களைப் போல, நாம் ஆவணப்படம் என்ற பெயரில் டிஜிட்டல் கேட்லாக்குகளைச் செய்துகொண்டு இருக்கிறோமா? குறிப்பாக, சம்பந்தப்பட்டவர்களால் அல்லது அவர்களைச் சார்ந்தவர்களால் படம் தயாரிக்கப்படும்போது, நாம் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறோமா?
ஒரு சிறு பரப்புக்குள்ளேயே ஆளுமைகள் பற்றிய ஆவணப்படங்கள் சிக்கிக்கொள்கின்றனவா? ஆளுமைகள் பற்றிய படங்கள் பொதுவாக அவர்களது காட்சிப்பூர்வ சுயவிவரக்குறிப்புகளாக அல்லது புரமோஷன் படங்களாக மட்டுமே அமைந்துவிடுகின்றனவா?
காட்சிப்பூர்வமாக ஒரு ஆளுமையை உயர்த்திப் பேசுவதற்கும், அவர்களது சமூகப் பங்களிப்பை ஆராய்ந்து சொல்வதற்கும் ஆவணப்படத்துறை ஒரு பயன்பாட்டுப் போக்கினைக் கொண்டிருக்கிறதா அல்லது சமூகம் மற்றும் கலைக்கான சுயாதீன வெளிப்பாடாகத் தொடர்கிறதா என்பதையெல்லாம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏன் ஒருவரை மிகவும் உயரத்தில் தூக்கி வைக்கிற மாதிரியான ஒரு நெருக்கடியில் நாம் இயங்க வேண்டும்? நம் பங்களிப்பு அதுதானா? அப்படித்தான் இயங்க வேண்டுமென்றால், டாக்குமெண்ட்ரி ஃபிலிம் மேக்கிங் என்பது என்ன? நம்மைப் போன்ற ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு வேண்டிய உள்ளடக்க உறுதிப்பாடு என்ன? ஒரு நிறுவனத்தின் அல்லது நபரின் தனிப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்ய முனையும்போது, ஒரு கலைஞனாக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் கலைச் சுதந்திரம் இருக்கிறதா?
நாமே சுதந்திரமாக ஒரு குறிப்பிட்ட பிரச்சனை அல்லது நிலையை எடுத்துக்கொண்டு ஈடுபாட்டுடன் படம் தயாரித்து இயக்குகிறபோது இம்மாதிரி சங்கடங்கள் நேர்வதில்லையே… ஏன்? அப்படி நேரினும் அது மிகக் குறைவாகத்தானே இருக்கிறது! இதை நாம் யோசிக்கிற அதே சமயம் நம்மால் எடுக்கப்படுகிற ஆளுமைகள் பற்றிய படங்கள் சமூகத்துக்கும் சூழலுக்கும் வரலாற்றுக்கும் எவ்வளவு தேவை என்ற ஒரு விஷயமும் இருக்கத்தான் செய்கிறது.
உண்மையில் இந்தப் படத்தின் திரையிடலே, ஒரு கொண்டாட்டம் போல இருந்தது. ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் சென்னை சில்க்ஸ் டி. கே. சந்திரனுக்கும் ரவிக்கும் உள்ள உறவு ஓர் அழகிய கவிதை. படம் திரையிட்டு முடிந்த பின் கலந்துரையாடல் நடந்தது. அப்போது, சுருக்கமாகப் பேச வேண்டும் என்ற வரையறை தயாரிப்பாளருக்கும் பொருந்தும் என்று ரவி மேடையிலேயே சொல்லிவிட்டார். அதை சந்திரன் அவர்கள் குழந்தை போலச் சிரித்துக்கொண்டு ஏற்றுக்கொண்டது எனக்கு மிகவும் பிடித்தமான தருணம். அந்த எளிமைதான் அவரை அபூர்வமான மனிதராக உணர வைத்தது.
ஒளிப்பதிவாளர் வரவில்லை என்றாலும் அவரது இருப்பை படம் சொல்லிக்கொண்டே இருந்தது. படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் அங்கு இருந்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், எடிட்டிங், இசை, ஒலி வடிவமைப்பு எல்லாமே அளவும் பதமுமான ஒரு கைபாகத்தில் ஒத்திசைந்திருந்தன.
மிக முக்கியமான, நெஞ்சை உருக்கும் ஒரு விஷயத்தை ரவி அந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டார். படத்தின் நாயகியான கிருஷ்ணம்மாள் படப்பிடிப்பு துவங்கும் முன் இயக்குநரிடம், ‘என் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்கு எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்கிறார். ரவியும் அதற்கு இவ்வளவு ஆகும் என்று சொல்லியிருக்கிறார். ‘இந்தத் தொகையை, இந்தப் படம் எடுப்பதற்குப் பதிலாக, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதார நலனுக்காக நேரடியாகச் செலவழித்துவிடலாமே, இந்தப் படம் இப்போது எதற்கு? யார் பார்க்கப் போகிறார்கள்?’ என்கிறார்.
எவ்வளவு கரிசனம் நிறைந்த தன்னலமற்ற கேள்வி அது. ஆனால், ரவி அவருக்கு இந்தப் படம் வெளிவர வேண்டியதின் பன்முகக் காரணங்களைப் புரிய வைத்திருக்கிறார். அது நேரடியாகச் சொல்லப்படாத பல விஷயங்கள் வழியாகவும் பட உருவாக்கத்தில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. அதனால்தான் பார்வையாளர்கள் உத்வேகம் பெறவும், தன்னுள் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவுமாக படம் வடிவெடுத்துள்ளது.
படத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பாலபாரதி கிருஷ்ணம்மாள் அவர்களோடு நிகழ்த்திய உரையாடல்கள் மிகவும் இயல்பாக இருந்தன. அம்மாவினது ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தை அவை துலங்கச் செய்தன. ரவியின் பின்னணிக் குரல், படத்துக்கு ஒரு பலம். அது ஒரு ஸ்ருதி லயத்தில் இயங்குகிறது. பாடுவதும் பேசுவதும் அவருக்கு அப்படி ஒன்று போல அமைந்திருக்கிறது. உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் அவரது இருப்பு சிறப்பாக இருந்தது. அவரது குரல் படம் முழுக்க ஒருவித உணர்வோட்டத் தொடர்ச்சியைக் கொடுத்தபடியே வந்தது. கா.பழனித்துரை என்கிற பேராசிரியர் அதில் பேசிய பேச்சும் அவர் நடையும் வெளிப்பாடும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
ஓர் ஆவணப்பட இயக்குநராகப் பார்க்கும்போது, சமீபத்தில் வந்த ஆளுமைகள் பற்றிய படங்களில், இதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று தயங்காமல் சொல்வேன். கிருஷ்ணம்மாள் வாழ்க்கையும் பணிகளும் அப்படிச் சொல்லப்பட வேண்டியவை என்பதை எங்கள் சக கலைஞர் நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார். ஓர் ஆளுமையைக் கொண்டாடியபடியே, அவர் வாழ்வின் சமூக அர்த்தத்தையும் நேர்மையாகப் பதிவு செய்து வருங்காலத்துக்கு வழங்க முடியும் என்பதற்கான ஒரு முக்கியமான சாட்சியமாக வந்துள்ளது இந்த ஆவணப்படம்.
- கட்டுரையாளர் ஆர். வி. ரமணி, தமிழின் முக்கிய ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவர்.