Mollywood Times விமர்சனம் - ஒரு தினுசான ‘மாஸ்டர்பீஸ்’!

Mollywood Times விமர்சனம் - ஒரு தினுசான ‘மாஸ்டர்பீஸ்’!
Updated on
3 min read

பிரேமலு, ஆலப்புழா ஜிம்கானா, லோகா சேஃப்டர் 1: சந்திரா படங்களின் வழியே மலையாளத் திரையுலகில் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமாகத் திகழ்பவர் நடிகர் நஸ்லென். வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, கதை சொல்லல், திரையனுபவம் வழியே ‘இது ரொம்பவே புதுசா இருக்கே’ என்று ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ (2022) படத்தை உணர வைத்தவர் இயக்குனர் அபிநவ் சுந்தர் நாயக்.

தமிழில் உறியடி, குரங்கு பொம்மை படங்களில் இவர் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைகிற திரைப்படம் எனும்போது, ‘ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும்’ என்றளவிலாவது எதிர்பார்ப்பு எழுவது இயல்பு. அதுவே ‘மாலிவுட் டைம்ஸ்’ (Mollywood Times) படத்தைக் காணத் தூண்டியது. அதற்கு நியாயம் செய்திருக்கிறதா நஸ்லென் + அபினவ் கூட்டணி.

வீழ்ச்சியும் எழுச்சியும்

மாலிவுட் டைம்ஸ் கதை என்னவென்று பார்ப்போமா?

மலையாளத் திரையுலகில் ‘தி பெஸ்ட் ஹாரர் பிலிம்மேக்கர்’ ஆகும் ஆசையைப் பால்யம் முதலே தன்னுள் வளர்த்து வருகிறார் வினீத் மாதவன் (நஸ்லென்). கேரளத்தின் மனோஜ் நைட் சியாமளன் ஆவதே அவரது கனவு. ஆண்டுகள் ஆக ஆக, அது விஸ்வரூபமெடுக்கிறது.

குறும்படங்கள் உருவாக்கி, அதன் வழியே திரைப்படம் இயக்கும் லட்சியத்தோடு வாழ்கிறார் வினீத். அதன்படியே, ஒரு குறும்பட விழாவில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முழுநீளத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலை அவரிடம் சொல்கிறார் டிவிடி கடை உரிமையாளரான சுனில் (அல்தாஃப் சலீம்).

எம்பிபிஎஸ் படித்துவரும் நண்பன் சுஜித்ராஜை (ரோஷன் ஷாநவாஸ்) துணையாகக்கொண்டு ஒரு குறும்படத்தை உருவாக்குகிறார் வினீத். தான் உருவாக்கியது மற்றவற்றைக் காட்டிலும் மிகச்சிறந்தது என்று நம்புகிறார். ஆனால், அந்த விழாவில் அவருக்கு இரண்டாமிடமே கிடைக்கிறது.

முதலாமிடத்தை அர்ஜுன் (சங்கீத் பிரதாப்) என்பவர் பெறுகிறார். பார்த்த முதல் நொடியிலேயே, வினீத் மீது அர்ஜுன் பொறாமை கொள்கிறார். ஒருபக்கம் அர்ஜுன் இயக்கிய படம் வெளியாகி ஹிட் ஆகிறது. மறுபக்கத்தில் கதாசிரியராக, இயக்குனராகப் பணியாற்றுகிற வாய்ப்புகள் அடுத்தடுத்து வினீத்துக்கு அமைகிறது. ஆனால், அந்த அனுபவங்கள் அவர் எதிர்பார்த்த வகையில் இல்லை.

ஒருகட்டத்தில் திரையுலகுக்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாததால் தன்னை அங்கிருப்பவர்கள் ‘தலையாட்டி பொம்மை’யாகப் பயன்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் வினீத்தை ஆட்டிப்படைக்கிறது. அதனால், தனது இயல்பைத் துறந்து, புதிய மனிதனாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறார். அதன்பிறகு, பிரச்சினைகள் இன்னும் அதிகமாகின்றன.

நட்பாகச் சிரிக்கும் சிலர், முதுகுக்குப் பின்னே பகையைக் கக்குகின்றனர். அது வளர்ந்து வளர்ந்து, இனி எக்காலத்திலும் மலையாளத் திரையுலகில் வினீத் ஜீவிக்க முடியாது எனும் பொறியில் மாட்டிக்கொள்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிறது. அதன்பின்னும் வினீத்தால் வெற்றிகரமாகத் திரையுலகிலகில் திகழ முடிந்ததா என்று சொல்கிறது படத்தின் மீதி.

‘மாலிவுட் (மலையாள சினிமா) எப்படிப்பட்டது தெரியுமா’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலின் ஒரு துளியாக விரிந்திருக்கிற திரைக்கதை, ‘இந்த படத்தை எல்லோரும் பார்க்கலாம்’ என்று சொல்லவிடாமல் தடுத்துவிடக் கூடியது.

அதேநேரத்தில், நாயக பாத்திரம் ஏமாற்றத்திற்குள்ளாகிற காட்சியொன்றில் ‘இடைவேளை’ விட்டிருப்பதும் பின்பாதியில் நான்கைந்து கதாபாத்திரங்களின் ‘வன்மம்’ நிறைந்த செய்கைகளால் மேலும் மேலும் சிதைவுக்குள்ளாகிற ஆளுமையை அப்பாத்திரம் தானாகவே சரி செய்து மீண்டெழுவதும் இப்படத்தினை முற்றிலும் புதிதாக உணரவைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், நாயக பாத்திரத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் மட்டுமே ரசிகர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கக் கூடியதாக உள்ளது.

நேர்த்தியான ஆக்கம்

‘படம் ஆரம்பிச்சு இத்தனாவது நிமிஷத்துல ஹீரோ எண்ட்ரி இருக்கணும்’, ‘லவ் சீன் இங்க ஸ்டார்ட் ஆகணும்’, ‘கதையோட முதல் டர்னிங் பாய்ன்ட் இந்த இடத்துல இருந்தாகணும்’ என்பது உட்படத் திரைக்கதை வடிவம் பற்றித் திரையுலகினர் காலம்காலமாகப் பேசி வருகிற விஷயங்களைப் புறந்தள்ளியிருக்கிறது ‘மாலிவுட் டைம்ஸ்’ திரைக்கதை.

அதற்கேற்ப, எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் ராமு சுனில் முக்கியப் பாத்திரங்களின் வார்ப்பினை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். அதனால், அடுத்தடுத்து திருப்பங்கள் வரிசைகட்டி நிற்கும்போதும் ‘அதன்பின் என்னவானது’ என்கிற கேள்வியே மனதை ஆக்கிரமிக்கிறது.

யதார்த்தத்தில் இருந்து விலகி ‘சினிமாவே வாழ்க்கை’ என்றிருக்கிற மனிதனின் உலகைக் காண்பிக்கிற விதத்தில் அனைத்து பிரேம்களிலும் அலங்காரம் பூசியிருக்கிறது விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு. கலை இயக்குனர் ஆஷிக், ஆடை வடிவமைப்பாளர் மஷார் ஹம்சா, ஒப்பனைக்கலைஞர் ரோனக்ஸ் சேவியர் மூவரும் இருபதாண்டுகளைக் கடந்து பயணிக்கிற திரைக்கதையை, நம்மை நம்பவைக்கிற வகையில் திரையில் காட்ட உதவியிருக்கின்றனர்.

‘வகைமை இதுதான்’ என்று அறுதியிட்டுச் சொல்லவியலாத திரைக்கதையைக் கொண்டிருக்கிற இப்படத்தை, அதன் ஆன்மாவைச் சரியாகப் புரிந்துகொள்கிற வகையில் அமைந்திருக்கிறது நிதின் ராஜ் அரோல், இயக்குனர் அபினவ் கூட்டணியின் படத்தொகுப்பு.

‘அப்னா ப்ரைடே ஆயேகா’, ’கோட் சாங்’ இரண்டுமே ‘ரிப்பீட் மோடில்’ கேட்கத்தக்கவை. அதற்கிணையாக, காட்சிகளின் தன்மையை உயர்த்திக் காண்பிக்கிற நோக்கில் அமைந்திருக்கிறது ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை.

கம்பத்தில் நிற்கிற கழைக்கூத்தாடி போன்று தன் பாத்திரம் உணர்ந்து திரையில் தோன்றியிருக்கிறார் நஸ்லென். விமர்சன, வசூல் ரீதியாக இப்படம் அவரை இன்னும் மேலுயுயர்த்தக்கூடும்.

பல காட்சிகளில் அவருக்கு இணையான முக்கியத்துவத்தை ஷரப் யூ தீன், சங்கீத் பிரதாப், கோபிகா ரமேஷ், அல்தாப் சலீம், பிரசாந்த் அலெக்சாண்டர், ராஜேஷ் மாதவன், அப்புண்ணி சசி உள்ளிட்டோர் எடுத்துக்கொள்கின்றனர். அதையும் மீறி நஸ்லென் மிளிர்வது சிறப்பு.

ரோஷன் ஷாநவாஸ், சந்து சலீம்குமார் வரும் காட்சிகள் வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல இருந்தாலும், அப்பாத்திரங்கள் முழுமையடையும் இடங்கள் ‘இது அவ்வாறானதல்ல’ என்று சொல்ல வைக்கின்றன.

இரண்டொரு காட்சிகளில் வந்தாலும், ‘அடிபொலி’ என்று சொல்லத்தக்க வகையில் கைத்தட்டல்களை அள்ளுகிறார் ‘கேமியோ’வாக தலைகாட்டியிருக்கும் பசில் ஜோசப். இன்னும் ஜெகதீஷ், எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்ளிட்ட சிலரும் இதிலுண்டு. அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

ரோஷன் ஷாநவாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் வசனங்களும் விவாதத்திற்குரியவை; சர்ச்சைகளை எழுப்பக்கூடியவை. அதனால், எதிர்காலத்தில் ஓடிடியில் ‘வைரல்’ ஆகிற தகுதிகளையும் கொண்டிருக்கிறது இப்படம்.

‘சூது கவ்வும்’ பாணியிலமைந்த ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ வழியே பார்வையாளர்கள் மனதில் அவநம்பிக்கையை, அறமற்று வாழ்தலைப் பரவவிட்டிருந்தார் அபினவ் சுந்தர் நாயக். இந்தப் படத்தின் திரைக்கதையும் ஏறக்குறைய அப்படியொரு தொனியுடனே நகர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டுகிறது.

ஆனால் செகண்ட் கிளைமேக்ஸ், ரோலிங் டைட்டில் காட்சிகளின் வழியே எதிர்நீச்சல் போடும் உத்வேகத்தை விதைக்கிறார் இயக்குனர். அந்த இடத்தில் நாம் உற்சாகம் கொள்ள வேண்டுமானால், முழுப்படத்தையும் பிசிறில்லாமல் பார்த்து முடிக்க வேண்டும். நிச்சயம் அது ஒரு சவாலே. அதனைப் பற்றிக்கொள்பவர்களுக்கு ‘மாலிவுட் டைம்ஸ்’ ஒரு ‘மாஸ்டர்பீஸ்’ ஆகப் புலப்படும். என்ன, வழக்கமாக நாம் பார்த்தவற்றில் இருந்து பெரும்பாலும் வேறுபட்டு ஒரு ‘தினுசான’ சினிமாவாக இருக்கும். அதுதான் வித்தியாசம்!

Mollywood Times விமர்சனம் - ஒரு தினுசான ‘மாஸ்டர்பீஸ்’!
Obsession விமர்சனம்: அமுதென்பதா, விஷமென்பதா? - ‘திகில்’ திரை அனுபவம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in