

பிரபல திரைக்கதை எழுத்தாளராக வலம்வருபவர் அஜயன் பாலா. மற்றொரு பக்கம் சிறுகதை, நாவல் எனப் புனைவெழுத்திலும் வரலாறு, சினிமா எனப் புனைவல்லாத எழுத்திலும் தொடர்ந்து செறிவாகப் பங்களித்து வருபவர்.
அவருடைய எழுத்து, இயக்கத்தில் ராம் கார்த்திக், க்ருஷா குரூப் நடிப்பில் முதல் திரைப்படமாக வெளியாகிறது ‘மைலாஞ்சி’. அதை யொட்டி அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
இளையராஜாவின் இசை, செழிய னின் ஒளிப்பதிவு, கர் பிரசாத்தின் படத்தொகுப்பு, லால்குடி இளையராஜாவின் கலை இயக்கம் எனச் சாதனையாளர்களை ‘மைலாஞ்சி’யில் ஒருங்கிணைத்தது எது?
இவர்களுடைய இதயங்களில் எனக்கொரு இடம் இருந்ததும், இந்தப் படத்தின் கதையும்தான் காரணம். 2000இல் நான் உதவி இயக்குநர். அப்போது செழியன் உதவி ஒளிப்பதிவாளராக பி.சி.ராம் சாரிடம் பணியாற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். அண்ணன் அறிவுமதியின் கவிப் பட்டறையில் அடிக்கடி கூடு வோம். ஒருமுறை செழியனிடம் நான் எழுதிக்கொண்டிருந்த கதையைச் சொன்னேன். கேட்டு முடித்ததும் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொடுத்து, “இந்தக் கதையை நான்தான் தயாரிப்
பேன்... இதை முன்பணமாக வைத்துக்கொள்” என்று கொடுத்தார். அதேபோல் அவர் ‘இன்று’ என்கிற தலைப்பில் ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார். அதன் ஒளிப்பதிவைப் பார்த்து நான் மயங்கிப்போனேன். அந்தப் படத்தைப் பார்த்து வெளியே வந்ததும் என் சட்டைப் பையிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்து, “என் படத் துக்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.
இப்போதைக்கு இதுதான் அட்வான்ஸ்” என்றேன். 22 வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. செழியன் இன்று பல வெற்றிப்படங்களின் ஒளிப்பதிவாளர், சிறந்த எழுத்தாளர், ‘டுலெட்’ படத்தை உருவாக்கி தேசிய விருதுபெற்றவர் என்பதில் நானே ஜெயித்ததுபோல் மகிழ்ந்தேன். இப்பட வாய்ப்பு கிடைத்ததும் அதை ஓர் அறிவிப்பாக வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு, செழியன் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அந்த ஒரு ரூபாய்க்கு இன்னும் உயிர் இருக்கிறதா?” என்று கேட்டார்.
நான் ‘இருக்கிறது’ என்றேன். மிகச் சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு இந்தப் படத்துக்கு அவர் தந்திருக்கும் மிகச் சிறந்த ஒளிப்பதிவில் நட்பும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஒளிப்பதிவுடன் அவர் நிற்கவில்லை; தேசிய விருது பெற்ற படத் தொகுப் பாளர் கர் பிரசாத்தை அவர்தான் உள்ளே கொண்டுவந்தார். இளைய ராஜாவைப் பார்க்கலாம் என்று ஆலோ சனை கொடுத்தார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் லால்குடி இளையராஜாவும் எனது நீண்ட கால நண்பர். அவரும் ‘ஊதியமெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டுத் தானே முன்வந்து ‘மைலாஞ்சி’யில் இணைந்து கொண்டார்.