

‘அவனா இவன்?’ படத்தில் எஸ்.பாலசந்தார் - லட்சுமி ராஜம் | படம் உதவி: ஞானம் |
முதன்மை, முக்கியக் கதாபாத்திரங்களின் உணர்வுகள், அவற்றின் உள்மனப் போராட்டங்கள், குணாதிசய மாற்றங்கள் (Character Arc) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை ‘கேரக்டர் டிரிவன் சினிமா’ (Character driven cinema) எனத் திரைக்கலை ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள்.
90களுக்கு முன்புவரை இவ்வகைப் படங்களை, ‘உளவியல் சார்ந்த நாடகம்' (Psychological Drama) என்கிற வகைக்குள்ளேயே பெரும்பாலும் அடக்கினர். எஸ்.பாலசந்தர் இந்த வகைமையில் அதிகம் இயங்கியிருந்தாலும், கதாபாத்திரத்துக்கான நடிப்பு, காட்சிமொழி, இசை, படத்தொகுப்பு ஆகிய அம்சங்களை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் கதையின் நகர்வையும் வெளிப்படுத்தும் கருவிகளாகக் கையாண்ட விதம், தமிழ் சினிமாவுக்குப் பெரும் முன்னகர் வாக அமைந்தது. அவரது திரைமொழி சினிமாத் தனமான பாவனைகளைப் புறந்தள்ளியது.
தமிழ் உள்படப் பல மாநில மொழிகளில் தயாராகும் மாஸ் மசாலா படங்களை எடுத்துக் கொண்டால், அவ்வகை வணிக சினிமாக்கள் ‘சம்பவங்க’ளை (Plot driven) மட்டுமே மையமாகக் கொண்டு நகரும். ஆனால், ‘கேரக்டர் டிரிவன்’ பாணியில் முக்கியச் சம்பவம் அல்லது வெகுசில சம்பவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும்.
அதேநேரம், மையக் கதாபாத்திரத்தின் உணர்வுகளே கதையை அதிகமும் நகர்த்திச் செல்லும். அதேபோல், எஸ்.பாலசந்தரின் படங்களில் மையக் கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளே மற்ற கதாபாத்திரங்களின் உணர்வுகளில் தாக்கம் செலுத்தி, கதை நகர்வின் திசைவழியைத் தீர்மானிக்கும் ‘கேரக்டர் டிரைவன்’ சினிமாக்க ளாக ஆழ்ந்து ரசிக்க வைக்கும்.
எஸ்.பி. ஒரு நுண்ணோக்கி: மையக் கதாபாத்திரத்தின் ஆழ்மனச் சிக்கல்கள், அதன் ஆசை, அது செய்யப் போகும் குற்றம், குற்றம் செய்யும் முறை, செய்த பிறகு குற்றவுணர்வை மறைக்க முயலும் மனப்போராட்டம், அது சார்ந்த துணிபுகள் ஆகியவற்றை எஸ்.பாலசந்தர் ஒரு நுண்ணோக்கியைக் கொண்டு ஆராய்வது போலத் தன்னுடைய முதன்மை, முக்கியக் கதாபாத்திரங்களின் ‘கேரக்டர் ஆர்க்’குகளை வடிவமைத்திருப்பார். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அவருடைய ‘அவனா இவன்?’.
தன்னுடைய பகீரத முயற்சிகளை யாருடைய பணத்திலும் செய்ய விரும்பாமல், சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அவர் எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்து உருவாக்கிய இப்படம், மொழி எல்லைகளைக் கடந்து, உலகின் எந்தப் பகுதியில் வாழும் பார்வையாளர்களுக்கும் சப் - டைட்டில் தேவைப்படாமலே முழுமையான திரை அனுபவத்தை வழங்கும் ஓர் அசலான ‘கேரக்டர் டிரிவன் க்ரைம் த்ரில்லர்’ சினிமா.