

‘அந்த நாள்’ | படம் உதவி: ஞானம்
ஒரு திரைப்படத்தின் காட்சி மொழியில் ‘கியரோஸ்குரோ' (Chiaroscuro) என்பது ஒளி-நிழல் விளையாட்டைக் குறிக்கிறது. இது வெறும் தொழில்நுட்பம் அல்ல; ஒரு காட்சியின் ஆன்மாவைத் தன் தோளில் தாங்கியிருக்கும் கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்திக் காட்டும் ஒளியின் மொழி. இத்தாலியின் மறுமலர்ச்சி காலகட்ட ஓவியக்கலையில் பிறந்து, திரைப்படக்கலைக்கு இடம்பெயர்ந்து வந்த கலைநுட்பம். ‘Chiaroscuro' என்கிற இத்தாலியச் சொல்லுக்கு ‘ஒளி' (chiaro), ‘இருள்' (oscuro) என்று பொருள்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கரவாஜியோ (Caravaggio), ரெம்பிராண்ட் (Rembrandt) ஆகிய ஓவியர்கள், ஒரு தட்டையான கித்தானில் வரையும் ஓவியத்துக்கு முப்பரிமாணத் தன்மையை (3D Perspective) கொண்டுவர இந்த உத்தியைப் பயன்படுத்தினர். ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளிச்சமிட்டு, மற்ற இடங்களை அடர் கறுப்பு வண்ணத்தில் மூழ்கடிப்பதன் மூலம், ஓவியத்தில் முதன்மை பெறும் கதாபாத்திரத்தின் உணர்ச்சியை அவர்கள் கவனம் குவித்துச் சித்தரிக்க முயன்றனர்.
காட்சிக்கலையான ஓவியத்தையும் (Visual Art) உள்வாங்கிக்கொண்டு சினிமா பிறந்த போது, இந்த ஒளி - நிழல் சித்தரிப்பைச் சில ஜெர்மானியச் சலனப்படக் கலைஞர்கள் முயன்று பார்த்தனர். ஆனால், இதை முழுவீச்சில் பயன்படுத்தியது 40, 50களில் புகழ்பெற்ற ‘நியோ நுவார்’ (Neo-noir) வகைப் படங்கள்தான்.
தமிழ் சினிமா பேசத் தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்துவிட்டிருந்த நிலையில், கே.ராம்நாத் இயக்கத்தில் 1950இல் வெளியானது ‘ஏழை படும் பாடு’. தமிழ் சினிமாவின் முதல் ‘ஒளி - நிழல் மேதை’ என்று மதிப்பிடக்கூடிய ராம்நாத், இந்தப் படத்தின் காட்சி மொழியில் ‘கியரோஸ்குரோ' வித்தையை முதன்முதலில் மிகப் பொருத்தமாகக் கையாண்டார்.
முன்னதாக, ஹாலிவுட் ஒளிப்பதிவு கலை நுட்பங்களைத் தன்னுடைய பல படங்களில் எல்லிஸ் ஆர். டங்கன் கையாண்டிருந்தாலும், ராம்நாத் அளவுக்குத் திரைமொழியின் ஒரு பகுதியாக அதை முயன்று பார்க்கவில்லை. ஆனால், கே.ராம்நாத்தையும் விஞ்சிச் செல்ல
ஒருவர் வந்தார். அவர் திரைப்பட ஒளிப்பதி வாளர் அல்ல! ஆனால், தான் தேர்ந்துகொண்ட ஒளிப்பதிவாளர்களைத் தன்னுடைய ‘கேமரா கண்கள்’ ஆக மாற்றிக் காட்டியவர். அவர்தான் எஸ்.பாலசந்தர் (எஸ்.பி).
எஸ்.பியின் ‘கேமரா கண்கள்’ - ‘ஓர் இரவு’, ‘பராசக்தி’ படங்களின் மூலம் ஏவி.எம்மின் ஒளிப்பதிவாளராக அறியப் பட்டிருந்த எஸ்.மாருதி ராவை, ‘அந்த நாள்’ படத்தின் மூலம் தன்னுடைய கண்களாக மாற்றிக் காட்டினார் எஸ்.பி. ‘அந்த நாள்' படம் முழுவதையுமே ஒரு 'நியோ - நுவார்’ பாணியில், ஒளி-நிழல் விளையாட்டின் வழி, காட்சிகளில் கதாபாத்திரங்களின் மனநிலையை, அதில் ஒளிந்திருக்கும் மர்மத்தைச் சித்தரித்தார்.
மாருதி ராவின் முந்தைய - பிந்தைய படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ‘அந்த நாள்’ படத்தின் அனைத்து ஷாட்களும் இயக்குநர் ‘கன்சீவ்’ செய்தவை யாக இருப்பதைக் கண்டுணர முடியும். ஒரு காட்சியில் எது முக்கியமோ, அதைத் தவிர மற்ற இடங்களை இருளில் அல்லது நிழலில் ஆழ்த்திவிடும் ஜாலத்தை, ‘அந்த நாள்’ தொடங்கி எஸ்.பியின் ‘நடு இரவில்’ வரை காண முடியும். இது பார்வையாளரின் கவனத்தைக் கதையின் கருப்பொருளில் மட்டுமே நிலைநிறுத்தி முழுமையான திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கியது.