

படங்கள்: தி இந்து ஆவணக் காப்பகம்
மலையாளத் திரையுலகில் மம்மூட்டி - மோகன்லால் இருவரும் இன்று உச்ச நட்சத்திரங்கள். ஆனால், ‘சூப்பர் ஸ்டார்’ எனும் ஆரவாரத்தை, ரசிகர்கள் சூட்டும் ஒளிவட்டத்தை அவர்களிடம் பார்க்கவே முடியாது.
மக்களின் மனங்களை வென்றபின் அவர்களில் ஒருவராக வாழ வேண்டும் என்பதற்கு இந்த இருவருக்கும் முன்மாதிரியைக் காட்டிய ஒருவர் மலையாள சினிமாவின் முதல் பெரும் சகாப்தமாக விளங்கினார். அவர்தான் பிரேம் நசீர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் புகழேணியின் உச்சியில் நின்றுகொண்டிருந்த அதே 60, 70களில் தமிழ் சினிமாவிலும் தன் முத்திரையைப் பதித்தார். சென்னை அவருக்குத் தாய் வீடுபோல் விளங்கியது.
23 நேரடித் தமிழ்ப் படங்களில் நடித்துள்ள அவர், ‘பாலும் பழமும்' படத்தில் நடிகர் திலகத்தின் தம்பியாக நடித்தபோது, ஒட்டுமொத்தத் தமிழ் நாடும் அவரைத் தனது வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தது.
சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற பெருங் கலைஞர்களுடன் நெருக்கமான நட்பைப் பேணிய அவர், ஒருபோதும் மொழியால் தன்னைச் சுருக்கிக் கொண்டதில்லை. மலையாளத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான பிரேம் நசீருக்கு முன்னும் பின்னும் பல சிறந்த நடிகர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களில் எவருமே ‘நாயக' பிம்பத்தை இவ்வளவு வசீகரத்தோடும் நம்பிக்கையோடும் திரையில் பிரதி பலித்ததில்லை. திரைவெளி - பொது வெளி இரண்டிலுமே நாயகன் என்கிற அடையாளத்துக்கு அவர் புதிய இலக்கணம் வகுத்தார்.
திரையில் ஒருபக்கம் ஸ்டைலாகப் பாடி ஆடிவிட்டு, தலைமுடிகூடக் கலையாமல் வில்ல னையும் அவனது கூட்டத்தையும் அடித்துத் துவைத்தார்.
முப்பது ஆண்டுகள் மூன்று தலைமுறைக் கதாநாயகிகளோடு அவர் பாடி, ஆடிய டூயட் பாடல்கள் மலைநாட்டின் காற்றைவிட்டு இன்னும் அகலவில்லை.
முதுமை அவரைத் தொடவே அஞ்சியது. அதனால்தான் கேரள மக்கள் அவரை ‘நித்ய ஹரித நாயகன்' (Evergreen Hero) என்று மனம் சிலிர்க்க அழைக்கிறார்கள். 1926இல் பிறந்து, 1989இல் சென்னையில் மறைந்த அந்த மக்களின் நட்சத்திரம் நடித்தது 720 படங்கள்.
இது இந்திய அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் எவராலும் நிகழ்த்த முடியாத சாதனையாக கின்னஸ் அங்கீகரித்தது. அது மட்டுமல்ல; ‘செம்மீன்’ புகழ் ஷீலா இவருடன் 130 படங்களில் ஜோடி சேர்ந்தது மற்றொரு கின்னஸ் தடம்.
நாடகம் தந்த ஊக்கம்
திருவனந்தபுரத்தின் சிராயின்கீழு என்கிற கிராமத்தில் (இன்று நகரம்) ஓர் எளிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பிரேம் நசீரின் இயற்பெயர் அப்துல் காதர். சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்டாலும் கல்வியில் சிறந்து விளங்கினார்.
ஆலப்புழையின் செங்கானச்சேரியில் உள்ள புனித பெர்க்மான்ஸ் கல்லூரியில் இளங் கலை ஆங்கில இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில், அவருடைய ஆங்கிலப் பேராசிரியர் சி.ஏ.ஷெப்பர்டு என்பவரின் இயக்கத் தில் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தார்.